Tuesday 2 October 2018

பல் எடுத்து முடிக்கிற வரை சமர்த்துப் பாப்பாவாக அமர்ந்திருந்த அந்தக் குட்டி தேவதை, "பார்த்தியா, எவ்வளோ வீணாப் போயிட்டு? நைட் ப்ரஷ் பண்ணனும்; என்ன சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்கணும்" - தேவைக்கேற்ப பயமுறுத்திய போதும் கூட கவனமாகக் கேட்டுக் கொண்டு தலை ஆட்டியது! (பால் பல் தான் -- ஒரே ஆட்டம்; கிணறு போலக் குழியாகிப் போச்சு; மனமே இல்லாமல் தான் ஊசி போட்டு, எடுத்தேன்!) 

ஆச்சு; ஃபீஸை வாங்கிப் போட்டுக் கொண்டு bye 👋 சொல்ல வேண்டியதுதான் பாக்கி!

அம்மா மடியில் அமர்ந்திருந்த அந்தப் பாப்பா குபீரென்று பாய்ந்து குதித்து இரண்டு கைகளையும் ஆட்டி ஏதேதோ சைகை செய்து சடுதியில் கண்களில் நீர் வழிந்தோட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியது!

அம்மாவின் கண்களில் அளவில்லாத பயம்; "அவங்க அப்பா வேற ஊர்ல இல்லை மேடம்! இவ இப்படியெல்லாம் அழற டைப் இல்ல மேடம்! என்னன்னு பாருங்களேன்!" பதட்டமும் வியர்வையும் வழிய நின்றார்!

வாயில் உள்ள பஞ்சை எடுத்துப் போட்டுவிட்டு, "ஏம்மா, என்னாச்சு? வலிக்குதா? பாப்பாவுக்கு என்ன பண்ணுது? சொல்லு..."

சுற்றி நிற்கும் எங்களை ஒரு லுக் விட்டு, மீண்டும் சுவரோரம் கைகாட்டி அழ ஆரம்பித்தது! இந்த முறை கால்களை உதறிக் கொண்டே, உதட்டோரம் ரெத்தம் எட்டிப் பார்க்க, கண்களில் கோபம் கொப்பளிக்க, நீட்டிய விரலைத் திசை மாற்றி, "எப்படி அவங்க (சிஸ்டர் தான்) 'என்னோட' பல்ல 'குப்பை பாஸ்கெட்'ல போயிப் போடலாம்??? -- மறுபடியும் நயாக்ரா!!

நான் கமுக்கமாக மாஸ்குக்கு உள்ளேயே சிரித்து, "ஐயே, சிஸ்டருக்கு அவங்க மிஸ் இதெல்லாம் சொல்லித் தரவே இல்ல போலிருக்கு! அதான் இப்படி பண்ணிட்டாங்க!" என்று கண்ணடித்துக் கொண்டே நாலு டோஸ் விட்டேன்! (இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் எப்பவுமாக் கிடைக்கும்?!)

விதியே என்று எறிந்த பல்லைத் தேடி எடுத்துக் கவரில் போட்டு சிஸ்டர் நீட்டிய போது உம்மென்ற முகத்தோடு வாங்கி, கீழ்ப்பார்வை பார்த்தபடி ஓடிப்போய் அதே, அதேக் குப்பைத்தொட்டியில் தானே தன் கையால் கவரை விட்டெறிந்து விட்டு -- hand wash பண்ணனும் என்று கேட்டதும் -- நாங்கள் ஒட்டுமொத்தமாக "ஙே!"

-- மேற்படி விஷயம் நடந்து மூன்று நான்கு வருடங்கள் ஓடி விட்டன; இன்று அதே பாப்பா! மீண்டும்... போன முறை செய்த ரகளையைச் சொல்லி அவங்கம்மா என்னுடைய ஞாபகசக்தியைச் சரி பார்த்துக் கொண்டார்! அந்த அறிமுக ஐந்து நிமிடங்களிலும் அந்தக் குட்டிப் பெண்ணின் முகத்தில் அலாதி வெட்கம்... ஆழ்துளைக் கிணறு போல இந்த முறையும் கூட... பல் அவ்வளவு டேமேஜ்! மோட்சத்துக்கு அனுப்ப நாள் குறித்துவிட்டோம் பல்லுக்கு!

"படிச்சுட்டு என்ன ஆகப் போறேன்னு கேளுங்க மேடம்?"
இன்னும் ரெண்டு மடங்கு வெட்கம் ஏறிப்போக,
"டெண்டிஸ்ட் ஆகப் போறேன்!" என்று சொல்லிச் சென்றது!!

# வாடி_ராசாத்தீ

No comments:

Post a Comment