Tuesday 2 October 2018

மீனாட்சிப் பாட்டி
------------------
மிக ஒல்லிக்குச்சி உடம்புக்காரி..அறுபதைக் கடந்தவள். என்றாலும் உழைத்தே தேய்ந்ததில் இன்னும் நாலைந்து வயதைக் கூட்டியே காண்பிக்கும் தேகம்!
எப்போது எப்படி யார்மூலமாக என்ற ரிஷிமூல நதிமூலமெல்லாம் எங்களுக்குத் தெரியாது! ஆனால் நாங்கள் கண் விழிப்பதே அவள் முகத்தில் தான் பெரும்பாலான நாட்களில். வெந்நீர் அடுப்பின் சாம்பலை எடுத்துப் பல் தேய்த்த கையோடு அன்றைய குளியலுக்கான ஆயத்தங்களில் இறங்குவாள்.
அடிபைப். மோட்டார் தண்ணீரை வேலை செய்கிறவர்கள் பயன்படுத்துவதில் வீட்டில் ஏராளமான சட்டப் பிரச்சனைகள் இருந்தன. "ஒழியுது, தன் கையே தனக்கு!" என்று தண்ணீர் அடித்துக் குளிக்க நினைத்தாலோ தாவு தீர்ந்துவிடும்! கால் அண்டா தண்ணீரை பைப்புக்குள் ஊற்றி 'மாங்கு மாங்கென்று' அடித்தாலும் அந்தக் காலை வேளையில் பைப்பின் பரிதாபக் கிறீச்சிடல் கன்றுக்குட்டிகளை மிரள வைக்கும்; வேப்ப மரத்துக் காகங்கள் பதறிப் பறந்து , நிதானித்து மறுபடியும் விட்ட இடத்திலிருந்து கரையத் தொடங்கும்; மீனாட்சிப் பாட்டி குளிக்கத் தான் தண்ணீர் அடிக்கிறாளா இல்லை குளித்துவிட்டுத் தான் தண்ணீர் அடிக்கிறாளா என்று சந்தேகம் வரும்படிக்கு... அவள் வியர்வையில் ஒரு மாதிரியாகத் தள்ளாடி.. 'புஸ் புஸ்' என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க அவதிப்படும் போது -- அவளுக்கு பின் பாட்டு மாதிரி சற்றே இழுவையாக இன்னொரு 'புஸ்..புஸ்... ' ???? பைப்பு தான்! சடாரென்று அந்தக் கணத்தில் மீனாட்சி பாட்டிக்கு ஒரு துள்ளல் வரும் பாருங்க... "ஏ, குயந்த, ஒரு மொக்கு தண்ணி கொடேன்!" என்று கொல்லைப்பக்கம் வரும் யாரையாவது கெஞ்சி.. அதையும் ஊற்றி அடித்து... ஒரு வழியாக ஓரண்டா தண்ணீரைச் சேர்த்து விடுவாள்! விக்கிரமாதித்யை!
ஊடே, இதில் பக்கிகளாட்டம் நாங்கள்! அவள் கஷ்டம் புரியாத வயசு... 'ஆஸ் ஊஸ்சென்று' அரற்றியபடி அவள் நிறைத்திருக்கும் தண்ணீரைக் கேவலம் பல் விளக்கவும், 'சூசூ போகவும்' வாளியில் நிறைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுவோம்! (ஓகே; தண்ணி காட்டுவோம்!)
"ங்கொப்புரானை!"; "என்.......ந்ன்னா குயந்த? இப்...ப்... புடிப் பண்ணுறியே?"; "அடி, நீ நல்லாயிருக்க?! எங்கயாவது உண்டா இது?" என்று சின்னதும் பெரிசுமாகச் சத்தம் போடுவாள். நாங்களாவது, அடங்குவதாவது? ஏழெட்டு வாண்டுகள் எம கிங்கரர்கள் போல் அவளைச் சூழ்ந்து கொண்டு கையில் காய்ந்த கொட்டாங்கச்சி தொடங்கி அலுமினிய பக்கெட் வரை வைத்துக் கொண்டு அவளுடைய தண்ணீரைக் களவாடி விளையாடச் சமயம் பார்த்துக் காத்திருப்போம்... இதில் பத்துப் பாத்திரம் தேய்க்கவென்று கொல்லைப்புறம் கொண்டு வந்து போட்டிருந்தாலோ --அவள் பாடு படு கஷ்டம்! இருப்புச்சட்டியிலிருந்து வெங்கல உருளி வரை எதெல்லாம் வாகாக இருக்கிறதோ அதெல்லாம் எங்கள் கையில்... நாங்கள் எல்லாரும் ஆயுத பாணிகளாக நிற்க சபை நடுவே அலைபாயும் திரௌபதி போல மீனாட்சி -- திணறித் திண்டாடுவது அன்றைக்கெல்லாம் எங்களுக்குப் பெரிய வேடிக்கை!
பின்னொரு சமயம், ஆர்வக் கோளாறில் எங்கள் வால் பட்டாளத்தில் ஒருத்தர்- உப்புமா உருளியைத் தூக்க முடியாமல் தூக்கி, அவளோடு மல்லுக்கட்டிய போது அது பொதேரென்று கைதவறி தண்ணீரில் விழ -- ஓரண்டா தண்ணீரும் அரிசி உப்புமா மயம்! ஆயில் லீக்கேஜ் ஆன சென்னை கடற்கரை போல... கறிவேப்பிலையும், வத்தல் மிளகாயும், பெருங்காய மணமுமாக கமகமத்தத் தண்ணீரில் குளிக்கக் கொடுத்துவைக்காமல், மடேரென்று கோபமாக சாய்த்து விட்டு -- நல்ல வேப்பங்குழையோடு 'கட்டேல போறதுவோ..' என்று உக்கிரமாக எங்களைத் துரத்திவந்ததும் -- அதற்கு எங்கள் பெரிய பாட்டி சொம்போடு வந்து பஞ்சாயத்துப் பண்ணி -- நாங்கள் ஏழெட்டு பேர் சேர்ந்து எம்பி எம்பி அவளுக்குத் தண்ணீர் அடித்து, துண்டு சோப்பைப் பீர்க்க நாரில் அழுத்திக் கொண்டு .. அவள் கதறக் கதற, விடாமல் வறட், வறட்டென்று முதுகு தேய்த்து குளிப்பாட்டி.... கொண்டையைக் கூட அவிழ்க்காமல் மாமாவின் ஷாம்பூ பாட்டிலைத் திருட்டுத் தனமாக எடுத்து வந்து தலை தேய்த்து விட்டு ....
இப்படியாக நாங்கள் அவளோடு ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வந்ததை நீண்ட நெடுங்காலம் சொல்லிச் சிரித்துக் கொண்டேயிருந்தாள் மீனாட்சிப் பாட்டி!!
"அதுக்கென்ன இப்போ?" -- என்கிறீர்களா?
கிளினிக்கிற்கு தண்ணீர் கொண்டு வந்து போடச் சொல்லிப் பத்து மணி நேரமாகி விட்டது! 'உசுரு தண்ணி வேணுமேன்னு' நாற்பது ரூபாய்க்கு பாட்டில் தண்ணி வாங்கி வைச்சிருக்கோம்!!!
ம்ம்ம்... என்னத்த சொல்ல? எல்லாம் அன்னைக்கு அந்த மீனாட்சிப் பாட்டி உட்ட சாபமாத்தான் இருக்கும்!!

No comments:

Post a Comment