Wednesday 15 April 2015

இழவுக் கிழவி!


பேருந்து வேகத்தை
பின்னோடு துரத்தி வருகிறது
அழுகையும் ஓலமுமான குரலொன்று..

முகமறியா வாழ்வொன்றின் உதிர்வை, ஒலிபெருக்கி -
வலிந்து நுழைக்கிற அத்தருணத்தில் தான்
ராமாயிக் கிழவியின் முகமும் பாம்படமும்
மனசுக்குள் பெண்டுலமாடுகின்றன.

------------------------------------------------------------



"பட்டி கட்ட ஆளிருக்கா? பஞ்சாரத்து அரையிருட்டில் பாம்பு பதுங்கியிருக்கா?
மாடு மடி நிறைஞ்சிருக்கா? ஆட்டெருவு கொண்டு போன அன்னக்கூடை திரும்பிருச்சா?
றெக்கை முளைக்காத பாக்கி தவிட்டுக்குருவிக்குஞ்சு
பருந்துக்குத் தப்பிச்சு பசிக்கு ரெண்டு தின்னுச்சா?
பல நாளா பானை கண்டறியா அடுப்புல
இன்னைக்கு பால் இருந்துச்சா? பூனைதான் உறங்குச்சா?
மழை வருமோ?  செல்லரிச்ச ஈசான உத்தரமும் 'இதோ!'ன்னு உழுந்திடுமோ?"
-- ஆயிரம் கவலை கொண்டு வெற்றிலை இடிக்கும் ராமாயி
அலறித்தான் புறப்படுவாள் 'முதல் சேதி' வந்ததுமே....

ராமாயி குரல் சொல்லும்
துக்கத்தின் முகவரி!

பந்தல்காரனும் மைக்செட்டும் கூட
அவள் ஒப்பாரிக்கு விசிறி!

ஒரு கவுளி வெத்தலை, புகையிலை
ஒரு லோட்டா காப்பித்தண்ணி
இது போதும் ஒருபாடு  அழுது தீர்க்க...

'ராசாவே, அம்மாவே, கண்ணே, மணியே!'
"அரவந்தான் தீண்டுச்சோ? அய்யனாரு அடிச்சிடுச்சோ?" என
இதம்பதமாய் தொடங்கி,
"மூக்கொழுக நிக்கிற மூத்தவன மறந்துபுட்டு
பாடேல போறதுக்கு, பாவி சிறுக்கி
உனக்கேன்டி  அவசரம்?" என வலுத்த வசவோடு
பிணத்தின் பின்னோடும் ராமாயியின் ஆவேசம்
உயிர்க்குலையைப் பதற வைக்கும்!
ஊர்சனத்தைக் கதற வைக்கும்!

முச்சூடும் அழுதாளே மூச்சிரைத்துச் சரிந்தாளே;
ராத்தூக்கம் பாராம ரவையூண்டும்  சோராம;
மூணாம் மனுஷி ஒருத்தி முந்திவந்து
மரணத்தை உயிர்ப்பிச்சு
செத்தவனைக் கௌரவமா சேர்ப்பிச்சு;
சொல்லி அனுப்பாட்டா என்னன்னு -
சொந்த துக்கம் போல
எட்டுக்கும் பதினாறுக்கும் மணிக்கு மணி அழுது
மாஞ்சு போகும் ராமாயி மேல ஊருக்கே ஒரு வாஞ்சை!

தொண்டைக் குழி வரள, வரிவரியா நரம்பதிர
கண்ணு முழி தெறிக்க கண்ணீரும் கம்பலையுமா
மாரிலும் வயிற்றிலும் மாறிமாறி அடித்து
எந்த ஊட்டு துக்கமானாலும்
சொந்த வூட்டு துக்கமின்னே
சோறு  தண்ணி இல்லாம
சோர்ந்து போகும் கிழவிக்கு
என்ன தான் குறி?
இழவு சேதிக்கு ஏனிந்த வெறி?

கூலிக்கு மாரடிக்காத சுயகௌரவம் உள்ளவ-
ஏன் நூறு பேருக்கு மத்தியில் நிலைகுலைஞ்சு சரியணும்??
ஒண்ட வந்த ஒருத்தனுக்கோசரம்  கூட
ஒரு மாமாங்கத்துக் கண்ணீரை ஊரில் ஓட வைக்கணும்?ன்னு
மனசரிச்ச கேள்விக்கெல்லாம் பதிலா
ராமாயி மரணமே தான் அமைஞ்சுது போ!

பாசக்காரி அவளை, பதமா கொண்டு போகணும்னும்
ஒத்தக் கிழவிக்கு உறவு சொல்லி அழுவணும்னும்
ஊரேத்  திரண்டு  அவ வாசலுக்கு வந்துச்சு..
நாதியத்த அவளைச் சுத்தி நாலு தெருவும் நின்னுச்சு!
மைக்செட்டு மாட்டாமலே மக்கள் அழுத குரல்
அன்னைக்கு அந்த மகேசனுக்கும் கேட்டுச்சு!

-----------------------------------------------------------------------

சனமெல்லாம் சேர்ந்து நின்னு 'அவள்  காரியம்' செய்ததையும்
ஒவ்வொரு மனதிலும் அவள் படமாகியிருப்பதையும்
இன்னமும் அசைபோட்டு கனக்கிற மனசு சொல்கிறது:
"எங்கள்  ஊரின் எந்த மரணமும்
தன்னுடன் அழைத்தே வருகிறது
அருவமான ராமாயியையும் என்று!"

நன்றி: கூகுள் படங்கள்.


















No comments:

Post a Comment