Tuesday 25 November 2014

குழந்தைக் கவிதைகள்

(குமுதம் 12-12-12ல் இடம்பெற்ற என் சில கவிதைகளையும் சேர்த்து - ஒரு பொக்கே கவிதை) 
பொம்மைகளுக்கும்
மம்மு ஊட்டச் சொல்லி குழந்தைகள் அடம் பிடிக்கும்போது அம்மா திணறுவதை பொம்மையும் ரசிக்கிறது!

டெடிபேரைக் கட்டிக் கொண்டு உறங்கும் குழந்தை நள்ளிரவில் அம்மா கைப்பிடித்து கழிப்பறைக்குள் நுழையும் போது தப்பாமல் சொல்கிறது, “டெடியையும் அழைச்சிட்டு வாம்மா! இல்லேன்னா மெத்தை நனைஞ்சு போயிடும்!”

தன் கனவில் அழகாய்ச் சிரிக்கும் குழந்தைக்கு அம்மா சோறூட்டும் வேளையில் பசிக்கு அழ நினைக்கும் அவள் குழந்தை திருப்தியுடன் புரண்டு தூங்குகிறது!

என்னவாயிருக்கும் கடவுளின் மொழி ? – என் யோசனைத் தகர்த்தபடி பதில் சொல்லிப் போகிறது ஒரு குழந்தை தன் அழகுப் புன்னகையால்!

எந்த அகட விகடமும் இல்லை என்ற போதும் எப்போதும் சிரிப்புச் சாரல், குழந்தையின் மழலை!

மழைக்கு கட்டியமாய் மண்வாசம்; மழலைக்குக் கட்டியமாய்ப் பால்வாசம்!

சுண்ணாம்பு பெயர்ந்த சுவர்களும் சடுதியில் அழகாகி விடுகின்றன, ஒரு குழந்தையின் படத்தை
மாட்டிடும் போது! 


மதங்களைக் கடந்து கொண்டாடுகிறாள் ஒவ்வொரு கர்ப்பிணியும் இறைவனின் திருவருகைக் காலத்தை தன் குழந்தைக் குறித்தத் கனவுகளுடன்!

அம்மாவுக்குத் தெரியாமல் சாக்லேட்டை ஒளித்து வைத்தது குழந்தை! படையெடுக்கும் எறும்புகளைக் கண்டதும் அவசரமாய்ப் பேப்பரை பிரித்து மிட்டாயை வைத்தது! “எறும்புக்குக் கை இல்லியே!”
பிறந்த நாள் விழா, நிறைவுற்று வீடு போகும் முன்னமே யோசிக்கிறது குழந்தை: “அடுத்த பர்த்டே எப்போ வரும்?”
தன் சிலையைக் கடத்தும் போதும் கம்மென்றிருக்கும் கடவுள்; எந்தக் குழந்தை அவர் மேல் கால் போட்டபடி விரல் சப்பித் தூங்குகிறதோ தன் கனவில்!



 நன்றி: கூகுள் படங்கள்


 நன்றி: குமுதம் 

No comments:

Post a Comment