Tuesday 2 October 2018

சில பேருக்குத் தான் அப்படி ஒரு உடம்பு வாய்க்கும். ஒரே திட்டமாக, வருஷங்கள் கழித்து நாம் அவர்களைப் பார்த்தாலும் கூட சட்டென்று அடையாளம் கண்டுகொள்கிற தோதில்... நம்மை ஆச்சர்யம் + பொறாமைப்பட வைக்கிற அளவிற்கு... "அன்னு கண்ட மேனியா அச்சு மாதிரி அப்படியே இருக்கிறதைப் பாரேன்!" என்று பகபகவென்று வயிறெரிவதைக் காட்டிக் கொள்ளாமல் பதவிசாக சிரித்தபடி நாம் பாராட்டித் தொலைப்போமே...அந்த ஹிட்லிஸ்டில் உள்ள ஒரு ஆசாமி பத்தி தான் இன்றைய பிரதாபம்!
அவர் தான் " ரெங்கசாமியா, அதாருடா? ஓ, அச்சுப்பிள்ளையா? தோ இந்த வூடு தான்!" என்று நண்டு சிண்டும் கூட பட்டப்பெயரைப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் திமிரை ரசித்துச் சிரிக்கும் மகானுபவர்!

நோ... இது கண்டிப்பாக அவருடைய ஃபிட்னஸ் ரகசியங்களைப் பிட்டுவைக்கும் பதிவு இல்லை! சொல்லப்போனால் அப்படி ஒன்று இருப்பது கூட அச்சுத்தாத்தாவிற்குத் தெரிய வாய்ப்பில்லை! எழுபதைக் கடந்த வாலிபம்... நாலே அடிதான் உயரம்! வாயில் சதா வெற்றிலைக் குதப்பல்! வயல் வாய்க்கா உண்டு; ஓஞ்ச ஒழிஞ்ச நேரமெல்லாம் தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம், கொழும்பு சர்வதேச வானொலி, குடகல்லில் தோசைக்கு மாவரைக்கும் இல்லத்தரசிகளுக்கு பேச்சுத் துணை; சாபூத்திரி, கல்லாமண்ணா, சில்லுக்கோடு, பல்லாங்குழி என்று எல்லாவற்றிலும் எங்கள் வானரப்படைகளுக்கு ஒப்புக்குச் சப்பாணி --ஆனாலும் வாச்சாங்குளி! மொத்தத்தில் சியர்கேர்ல்ஸ் மாதிரி இவர் அந்தத் தெருவுக்கே சியர்மேன்!

"கற்பகத்தையே நான் தான் கட்டியிருக்க வேண்டியது! சரி, நாலெழுத்து படிச்ச மாப்பிள்ளை நம்பூருக்கு ஒருத்தராவது இருக்கட்டுமேன்னு தான் நான் விட்டுக் கொடுத்தேன்! வக்கீலு! நிலம் நீச்சுன்னு வச்சிருக்கவங்களுக்கு வேணுமில்ல?!" -- இவர் லில்லிப்புட்! எங்கள் அத்தைப் பாட்டியோ அஞ்சரை அடி! "கற்பகம் எனக்காக என்னா அழுவை அழுதுச்சு தெரியுமா?" -- "சும்மா இருக்க மாட்டியா மாமா நீ" அலுத்துக் கொள்ளும் கற்பகம் பாட்டியைக் கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்வார்.

"சரி! 20 வருஷத்துக்கு முன்னாடி என் தங்கச்சிக்குத் தான் பிராப்தமில்லை... என் பொண்ணையாவது கட்டிக்கன்னு உங்க பெரிய தாத்தா கெஞ்சோ கெஞ்சுன்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டாரு... பொண்ணு மாநிறம் தான்! அட, நாம மட்டும் என்ன? அணைஞ்ச விறகாட்டம் தான இருக்கோம்! போனாப் போவுது, கட்டிக்கலாம்னு இருந்தேன்! பார்த்தா ஜாதகம் சரியில்ல... போச்சு!" -- "ஆமா, இவரு தங்கபஸ்பமா முழுங்கி மிணுங்கிற எம்ஜிஆரு... நாங்க க்யூவில நின்னோம்! பேச்சப் பாரு!" - வள்ளென்று விழுந்து விட்டுப் போவது என் பாப்பி பெரியம்மா தான்!

சளைக்காமல் தொடருவார்! "சொன்னேல்ல.. எங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் இல்லைனு! பேச்சிலேயேத் தெரியுது பார்த்தியா?" என்று அப்பாவியாகக் கேட்பார்! "அதான, பெரியம்மா ஏன் கோச்சுக்கணும்?" என்று நாங்கள் தலையைச் சொரிகிற சைக்கிள் கேப்பில் இன்னொரு முறை அவர் வெற்றிலை போட்டிருப்பார்! இப்போது அவருடைய கடைக்கண் பார்வை எங்கம்மா மேல் பட்டிருக்கும்!

"ஒண்ணு தட்டுனா மூணு தட்டும்பாங்க, மாமா! பாப்பிக்கும் உனக்கும் பிராப்தமில்ல... அதனால என்ன? என் பொண்ணு பேபியக் கட்டிக்கன்னு அடுத்த பேச்சு! எனக்கும் இந்த யோசனை சரின்னு தான் பட்டுச்சு! ஆனாலும் ஒரு சங்கடம்! உங்கம்மா, நல்ல பொண்ணு தான்! ஆனா இது பொழுதன்னைக்கும் மணிபொம்மை செய்றேன், களிமண் பொம்மை செய்றேன், கோலம் போடுறேன், கூடை பிண்ணுறேன்னு சதா கழுத்த நட்டுக்கிட்டே இருக்குமே... நம்பள .. நம்பளன்னா -- நான், என் சம்சாரம், பசங்க நாலுன்னு எப்படியும் ஆறு டிக்கெட் இருக்குல்ல.. இது எப்படி கவனிக்கும்? ம்ஹூம், இது சரிப்படாதுன்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு நானே 'நோ'ன்னுட்டேன்!" கம்பீரமாய் சொல்லுவார்.. "யோவ், அச்சு!" என்று அம்மா அடிக்குரலில் உறும.. கதை கேட்டபடி இருக்கும் எங்கப்பா கூட சிரிப்பார்!

"உனக்கு இந்தத் தாத்தாவ புடிக்குமா?"
"ஓ, புடிக்குமே!" -- இது நான்!
"உன்னைக் கூட கட்டிக்கலாம்! (எனக்கு அப்ப வயசு நாலு இல்ல அஞ்சு) சின்ன புள்ள.. கூடமாட ஒத்தாசையாவும் இருப்ப... நம்ப வீட்லேயும் பாட்டி நிறைய மாவத்தல், எலந்தைப் பழம், எலந்தை அடை எல்லாம் வைச்சிருக்கா! உனக்கு தினம் தருவா.. நீ முழுப் பரீட்சை லீவுக்கு வரும் போது நம்ம தகுந்த ஏற்பாடு பண்ணிப்போம்! சம்மதமா? சரிதானா?" -- மாவத்தல், எலந்தப் பழம் தவிர ஓரெழவும் புரியாமலேயே பூம்பூம் மாடு மாதிரி...பல்லிளித்துக் கொண்டே!!
"சபாஷ்! அதுக்கு அட்வான்சா தாத்தாக்கு ஒரு முத்தம் கொடு!" -- பொக்கைவாய்க் கன்னத்தைக் கஷ்டப்பட்டு பூரியாக்கி வாகாய் நீட்ட ... நானும் இச்க் பிச்க் என்று அழுத்தமாகக் கீழ்ப்படிந்தேன்! அப்புறம், மாவத்தல் எலந்த அடை எல்லாம் வேணும்ல?
"சரி, நீ இன்னைக்கு கேட்டோன்ன குடுத்துட்ட.. நாளைக்கெல்லாம் இந்த அச்சுத்தாத்தாக்கு யார் முத்தம் கொடுப்பா?"
ஐயகோ! இதென்ன புதுக்கஷ்டம்! தாத்தா பாவமில்லையா? எடு ஓட்டம்! ஐந்து நிமிடத்தில் மூச்சிரைக்க அவர் முன் வந்து நின்றேன்!
"தாத்தா, கவலைப்படாதீங்க! இதோ கவிதா.. என் ஃபிரெண்டு! நான் ஊர்லேர்ந்து திரும்பி வரவரைக்கும் இவ தான் தினம் உங்களுக்கு ஒரு முத்தம் கொடுப்பா... சரியா கவிதா?" -- என்னை விட மூன்று வயது பெரியவளான கவிதா வீலென்று அலறிக்கொண்டு ஏன் தெறித்து ஓடினாள்? ஏன் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் அன்று வயிற்றைப் பிடித்துக் கொண்டும், முகத்தைச் சுளுக்கிக் கொண்டும் கடைவாய்ப்பல் வந்து வெளியே விழும் அளவிற்கு சிரித்தார்கள்??? எனக்கு மட்டும் ஏன் அன்று அழுகை அழுகையா வந்தது?

சொல்லுங்க நட்பூஸ், சொல்லுங்க!!!

No comments:

Post a Comment