Wednesday 7 February 2018

கத்தி முனையில்... 
------------------
சதா பிடறியில் உரசிடும் 
ஒரு கத்தியை 
எந்த முகச் சுழிப்பும் இன்றி 
எந்த முனகலும் இன்றி 
எந்தத் தயக்கமும் இன்றி 
ஏற்றுக் கொண்டுவிட்டேன் எப்போதோ...

கத்தி பிடித்திருக்கும்
அந்த மாயக் கரங்களை --
அதன் நோக்கம் மறந்தும்
அதன் வன்மம் புறந்தள்ளியும்
உற்றுப் பார்க்கிற தருணங்கள்
தெய்வம் அருளிச் செய்த வரங்கள்!!

ஆணும் பெண்ணுமாக முறை வைத்து
என் பிடறி வியர்வையை
பகுத்துணர முடியா என் அசைவுகளை
சற்றைக்கொரு தரம் மாறிடும் என் நகர்வுகளை
அலட்சியம் செய்தபடி
அர்ஜுனத்தவம் போல உங்கள் கவனம்!!
கழுத்தும் கத்தியுமான உலகம் உங்களுடையது!!

அந்தக் கரத்தின் கல் பதித்த வளையல்கள்
என்னை ஈர்த்திழுக்கின்றன;
அந்தக் கரத்தின் நெளி மோதிரங்கள்
பாம்புகளை நினைவுகளில் உலவ விடுகின்றன;
மிக நளினமாக நகர்ந்து ஒளிரும்
அந்தப் பிளாட்டின பிறேஸ்லெட்டுகள்
உங்கள் ரசனையின் மீதான என் பெருவிருப்பைக் கிளறுகின்றன;
துல்லிய நகர்வுகளின் நிமித்தம்
உங்களின் வலக்கையில் கட்டப்பட்டிருக்கும் கைக்கடிகாரம்
ஒரு வேளை வெள்ளெழுத்துக்காரரோ
என்று என் துப்பறிவு மூளைக்குத் தீனி போடுகிறது!!

நேர்த்தியான வேலைப்பாடுகளுடன்
உறுதியான மரக்கைப்பிடி;
இருளிலும் ஒளியிலும் அதன் கூர்நுனியில்
பட்டுத் தெறிக்கும் மாயப் பிரகாசம் -- கத்தியும்
விடாது வசீகரிக்கிறது என்னை!

நகர்ந்திடாமலும், நெகிழ்ந்திடாமலும், நடுங்கிடாமலும் இருக்க
உங்களுக்கென்று ஒரு இறுகிய முகமூடி அளிக்கப் பட்டிருக்கிறது!
என்றாலும் ரத்தம் ருசிக்கவென்று நீங்களும்
கத்தியைக் கைப்பற்ற நானும்
முயற்சிக்காததொரு பாவனையில்
சத்தமின்றி சலமின்றி சங்கடப் படுகிறோம்!!
நாட்களைக் கடத்துகிறோம்!!

கத்தியின் கூர்நுனியில்
பட்டுத் தெறிக்கும் மழையின் ஒருதுளி
வெயிலின் ஓர் ஒளி
நழுவிடும் நிலவின் ஒரு பிறை
கிழிபடும் காற்றின் சிறு இறகு
எத்தனை அற்புதமென்று உணர்கின்ற
ஓர் நிலை உங்களுக்கும் வாய்க்கட்டும்!!

No comments:

Post a Comment