Saturday 8 September 2018

"பறவைகள் பல விதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்"னு பழைய பாட்டு ஒண்ணு ... யார் வீட்டு FMலேர்ந்தோ ரசனையாய் வழிய.. எனக்குள்ள ஏதேதோ நினைவுகளையும் நடப்புகளையும் கீறி கிண்டி கிளறி விட்டுட்டுப் போயிருச்சு! 🎼🎤🎧

"தபார்றா! பேஷண்ட் கிட்ட இன்னைக்கும் பல்பு போலிருக்கு!"ன்னு நீங்க எல்லாரும் நமட்டுச் சிரிப்பாச் சிரிக்கிறது என் ஞானக் கண்களுக்குத் தெரியாம இல்லை; but I, பெரிய மனசுப் பண்ணி மன்னிச்சூ!!! விஷயம் இத்தனை சிம்பிளானது அல்ல...😀😆

மனுஷாளோட நாக்கு இருக்கே நாக்கு அதுதான் இன்னிக்கு நேக்குக் கவலை! ஆமாமாம்! "நரம்பில்லாத நாக்கு! எப்படி வேணாலும் பேசும்... ரெட்டை நாக்கு... பாம்பு நாக்கு! அது இது"..ன்னு தத்துப்பித்தார்த்தமா சீரியஸா யோசிச்சீங்களோ -- சாரி, நீங்க தொடர்பு எல்லைக்கு வெளில இருக்கீங்க! சீரியஸாகி உங்களாட்டம் bed போட்டு ரெஸ்ட் எடுக்க நமக்கு ஆகாதுங்க! 😉😉

ஆகவே philosophy, anatomy, zoologyங்கிற பேருலகத்தையெல்லாம் தாண்டி தொபுக்கடீர்னு உங்க வீட்டுக்கு உள்பக்கமே கொஞ்சமாக் குதிச்சுப் பார்த்தீங்கன்னா -- அங்க பத்துக்குப் பத்து சைஸ் இடத்துல மூணு வேளையும் கையில பிடிச்ச கரண்டியோட வேர்த்து வழிய யாராச்சும் நிப்பாங்க! அவங்க தான் இன்னைக்கு நம்ம போஸ்ட்டோட நாயகர்கள், நாயகிகள்!! BTW, சமையல் எப்பவோ ஆம்பளைங்க சமாச்சாரமுமாயிடுச்சுன்னு நான் இதன் மூலமாக ஒத்துட்டிருக்கேன்னு நீங்க நம்பணும்!!! 🙌🙌🙌🙌

"என்ன சமையலோ? எதிர்த்துக் கேட்க யாருமில்லை! என்ன சமையலோ?!"ன்னு எங்க சின்ன சித்தப்பாவோட சேர்ந்து கையில ஸ்பூனையும் தட்டையும் வைச்சு தாளத்தோட கர்ணகொடூரமா பாட்டுப்பாடி எங்க பாட்டி, அத்தை, அம்மா, சித்தீஸ் எல்லாரையும் ராகிங் பண்ணிய பாவாத்மா தான் நானும்! ஆனா நான் பாவாத்மானு உணரவே இன்னொரு பத்து+ வருஷங்கள் ஆகிப்போச்சு... அதாவது என் கல்யாணத்துக்கு அப்புறம் தான் சிலபல ஞானோதயங்கள்னு சொல்றேன்!! 😇😇

## அதே சின்ன வெங்காயம், வத்தல் மிளகாய், உப்பு, புளி -- ஒரே தட்டுல தீவுத் தீவா மூணு திசையில் இருக்கும்! ஒத்தையா ரெட்டையானு விளையாண்டு பார்த்திருப்பாங்களோன்னு நானா மனசுக்குள்ள சிரிச்சுக்கிற நேரத்துல, அது சிரிப்புக்கில்லை; ஆப்புக்குன்னு புரிய வைக்க இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் தெறிக்கும்! "ஒரு செட்டை வறுத்து அரைக்கணும்மா; இன்னொன்னு பச்சையா அரைச்சு அப்புறம் வதக்கணும்! இன்னொன்னு இருக்கு பாரு - அது பச்சையா அரைச்சு எடுத்துகிட்டு, கடுகு கறிவேப்பிலையெல்லாம் தாளிச்சு கையோட அடுப்பை நிறுத்திட்டு - அந்த எண்ணெயிலேயே போட்டு இந்தச் சட்னியையும் பிரட்டி எடுக்கணும்! வெங்காயம் வேகவும் ப்டாது! பச்சை வாசனையும் அடிக்கப் ப்டாது!" -- நிதானமாக காப்பி குடித்தபடி இருந்த எங்க வீட்டு சமையலம்மா அந்தக் க்ஷணத்தில் தான் முடிவெடுத்திருப்பார்!! ஒண்ணாம் தேதியோட எஸ்.....ஸாயிடணும்னு!! 😰

## சட்னியே இந்தப் பாடுன்னா இட்லியெல்லாம் என்ன கதின்னு நீங்க இன்னேரத்துக்கு யோசிக்காமலா இருப்பீங்க? ரைட்டு! அதிலுமுண்டு டிசைன்ஸ்!!! ஓவராப் புளிச்சு பொங்கி நுரைச்சது -- அதுல ஒரு வண்டி வெங்காயம், ஒரு சின்ன கறிவேப்பிலை மரம், ஒரு கட்டு கொத்துமல்லித் தழை, சும்மா ஒரு கைப்பிடி பச்சைமிளகாய் எல்லாம் போட்டு அஞ்சறைப் பெட்டியையேத் தலை குப்புற கவிழ்த்துக் கொட்டித் தாளிச்சு, அதிலேர்ந்து கரெக்டா எண்ணி ரெண்டே ரெண்டு தோசைன்னா --- அதுல மாமான்னு லேபிள் ஒட்டியாச்சுன்னு அர்த்தம்! 😧

ஒழுங்கா ஆறு மணி நேரம் fermentation நடந்து, அந்த மாவுல வார்க்கப்பட்ட இட்லிகள் ராணுவ ஒழுங்கோட படை பட்டாளம் சூழ நல்லெண்ணெய்க் கிண்ணம் வழிய காத்துக் கிடக்குன்னா அது எங்காத்துக்காரர்க்குன்னு எடுத்துக்கணும்! 😏

அந்தப் புளி மாவுலயும் ஒண்ணு, தம்பிக்கு வார்த்த இட்லிலயும் ஒண்ணு, அப்புறம் டயட்ங்குற பேர்ல நான் காய்கறியோ அல்லது பச்சைப் பயிறோ அல்லது ராகிமாவோ கலந்து செய்து கொள்ளும் அந்த தோசையிலும் ஒரு சிறு பகுதி என்று சளைக்காமல் டேஸ்ட் பார்த்து மார்க் போடுபவர் -- சாட்சாத் எங்க மாமி! 😝

இது போக-- வீட்டு மாப்பிளைக்கு தோசையைக் கையிலெடுத்துப் பார்த்தால் பக்கத்து வீடு அல்ல ஊரேத் தெரியணும்; அவ்வளவு மெல்லிசா வார்க்கணும்! மாவு ஒரு மணி நேரம் வெளில இருந்தாலே 'புளிப்ப்ப்ப்ப்பூ' என்று பட்டம் சூட்டுவார்!! ரொம்ப முக்கியமாக தோசையெல்லாம்
உஜாலா போட்டு வெளுத்த மாதிரியே தான் இருக்கணும்!!! எண்ணெயே ஆகாது! நேர் எதிர் அவர் பொண்ணு... ஒரு தோசை ரெட், ஒண்ணு வொயிட், ஒண்ணு தாமரைப்பூ மாதிரி, ஒண்ணு ஸ்டார் டிசைன்ல என்று ஆர்டர் நீளும்.... அரை மணி நேரம் தட்டில் ஆறிப் போய்க் கிடக்கும்!! அம்மாவிடம் நாலு சாத்து வாங்கிய பின், "எனக்கு தோசை வேணாம் மாமி; பிடிக்கல..." என்று தட்டை அலட்சியமாய் நகர்த்தி விட்டு ரொம்ப ஆர்வமாக வெறும் பால் குடிக்கும்!! ஹ, என்னத்த சொல்ல?😭😭😭

## எல்லார்க்கும் வத்தக் குழம்புதான் ரொம்ப சிம்பிள்! ஆனா எனக்கு அன்னைக்கு தான் சந்திராஷ்டமம்! முதல்ல அரைச்சு வைக்கணுமா இல்ல ரொட்டீனா? கேட்டுக்கணும்! என்ன வத்தல்னு அடுத்த டிபேட்! கேட்டுக்கணும்! ஐயோ, இன்னைக்குப் பூண்டு சேர்க்கலாமா கூடாதா? கேட்டுக்கணும்!! அப்பளம் சுடணுமா பொறிக்கணுமா? கேட்டுக்கணும்! சைட் டிஷ் என்ன? துவையல் என்ன? ரசம் யாருக்காவது வேணுமா? ரெய்தா அவசியமா? பத்துப்படாம எடுத்து வைச்சா நாளைக்கு போட்டுக்கலாமா? - இது பொறுத்து தான் புளி நெல்லிக்காயளவா அல்லது எலுமிச்சை அளவான்னு தீர்மானிக்கப்படும்..... இப்படிக் கேட்டுக் கேட்டுப் பண்ணினா கண்டிப்பா யாராவது ஒருத்தர்க்கு மறுநாள் வயிறு சரியில்லாமப் போயிருக்கும்!! பழி--தொபீர்னு நான் வைச்சக் குழம்பு தலைல விழும்!! "வாய்க்கு நல்லார்ந்துது! வயித்துக்காகலை!!" -- சொன்னனே, சந்திராஷ்டமம் சுத்தி சுத்தி அடிக்கும்னு!😌

இப்படீ எழுத எழுத நீளும்.. இருந்தாலும் என் கஷ்டத்தை எல்லாம் என் வீட்டுக்காரர் உணர்ந்து கண்ணு வேர்க்கிற ஒரு நாள் வரும்னு நான் திடமா ஒத்துப் போயிட்டே இருந்தேன்! 🤐🤐🤐கடைசியாக் கடவுள் அருள் பாலிக்க-- 'அந்த நாளும் வந்திடாதோ?'ன்னு நான் கூவிக்கேவிக் கிடந்ததை ஏதோ ஒரு சாமி காதுல வாங்க--- வந்ததே வைரல் ஃபீவர்! எனக்குத்தான்! கண்முழிக்காம தலையைத் தூக்காம -- படுக்கைல வேர் விடுற அளவுக்குக் கிடந்தோம்ல-- சுமாரா ஒரு வாரம்!!

ஒரு நாள் வெறும் சாதம், மறு நாள் மூணு வேளையும் அளவு தெரியாம வார்த்த இட்லிகள், அதற்கடுத்த நாள் ஹோட்டல் -- அடுத்த நாள் என்னமோ கடையடைப்பாம் -- ஒண்ணும் பண்ண தோதில்லாம பொடி, தயிர் சாதம்ஸ்... மறுநாள் நான் சித்த கண் தொறந்து பார்க்கிறேன் - "ரொம்ப நேரம் எடுத்துக்காம அதே சமயத்துல ஹெல்தியாவும் ஈசியாவும் என்ன சமைக்கலாம்னு சொல்லேன்; ஹோட்டல் ஐட்டம்ஸ் யாருக்கும் ஒத்துக்கல; எண்ணெய் வேண்டாம், ஆகாது! மாவில்லை; முக்கியமா பொறுமையும் இல்லை! சொல்ல மறந்துட்டேனே, பாத்திரம் தேய்க்க வர செல்வியும் ரெண்டு நாளா இல்லை!" 😳🙄🙄

கிர்ரென்று கண்ணைச் சுழட்டியடித்தது மறுபடியும்! சமாளித்துக் கொண்டு அஞ்சு நிமிஷம் போல யோசித்து - எழுந்து குக்கரில் எல்லாவற்றையும் போட்டு மூடி ஐந்து விசில் விட்டு ஒரு கப் தயிர் சேர்த்து எடுத்து கொஞ்சமாக ஊறுகாய் மோர்மிளகாய் எல்லாம் வைத்து ஆளுக்கொரு பவுலில் பறிமாறிய போது -- சத்தமும் இல்லை; குக்கரில் மிச்சமும் இல்லை!! -- நாலு நாளாப் படுத்துக் கிடந்தவளுக்கு நாலே வாய்தான் மிச்சம் -- அப்படி என்ன அந்த சூப்பர் ரெஸிபின்னு கேட்கிறீங்க தானே? 🤔🤔🤔

வேறொண்ணுமில்லை - நோம்புக் கஞ்சி -- வெஜிடேரியன் வெர்ஷன்! 😇😇

எப்பூடி????😜😜😜

No comments:

Post a Comment