மேய்ச்சல் பசுவைப் போல
என் நினைவுப் பறவையையும்....
"இந்த விட்டத்துக்குள் சுற்றி வா, போதும்!" என்று...
சிறகுகள் படபடக்க
அது தன்னிச்சையாக
வட்டத்தின் விளிம்பெங்கும் பறந்தலைந்து
எல்லாருடனும் கத்திக் கதைக்கிறது..
கிறீச்சிடுகிறது....
"மனதுக்கேது கட்டு?" என்றும்;
"காற்றில் எல்லைக்கோடு போட நீயார்? என்றும் --
எனைக் கொக்கரித்தபடி
புகாரளிக்கிறது
பறத்தலின் வேகம் கூட்டுகிறது...
சிதறிக் கிடக்கும் முற்றிய தானியங்களைத்
கால்களால் சீய்த்துக் கிளறி
உணவை மறுத்து அதன்
எதிர்ப்பைக் காட்டியது....
அங்கலாய்த்து அலுத்து
அதன் கால்களைப் பிணைத்திருந்த
என் கட்டாயக் கயிறுகளை அவிழ்த்து
அதன்போக்கில் விட்டால்
அமைதி வாய்க்குமோ?
அடுத்த நொடியில்
என் வலது தோளில் வந்தமர்ந்தது அது!
படபடத்த சிறகுகளை
இறுக்கிக் கொண்டும்..
மரக் கிளைகளில் உரசிக்
கூர் தீட்டிய தன்
அலகில் நகங்களில்
மென்மை பூசிக் கொண்டும்...
எல்லாப் பிரயத்தனங்களையும்
அலட்சியமாய் ஊதித் தள்ளிய அந்த நொடியில்
தியானம் சித்தித்தது...
நான் அறியாமலே...
நிம்மதியின் தளர்ந்த ஸ்பரிசமொன்று
உதிர்ந்த அதன் இறகொன்றின் வழியே
எனக்குள் இப்போது இறங்கத் துவங்கியிருந்தது...




No comments:
Post a Comment