Monday, 1 December 2014

" நடமாடும் தெய்வத் துளி"


முன்குறிப்பு:-
         எங்கள் தெருவிலே தான் அவர்களும் இருந்தார்கள். ஏதேனும் ஒரு நாள் அவர்கள் நிம்மதியாகத் தூங்கியிருப்பார்களா என்றால் - நிச்சயம், கிடையாது! 
         காரணம், அவர்களுக்கு இருந்த ஒரு வளர்ந்த குழந்தை... கடவுளின் பெரும் பிழை.... கடவுளாலும் கூட அலட்சியமாக இருக்க முடியும் என்பதற்கு ஒரு நடமாடும் சான்றாகவே அந்தப் பிள்ளை....
        பதினேழு வயதாகியும் கூட தனியாகக் கழிப்பறைக்குப் போகத் தெரியாத பிள்ளை.... சகலத்துக்கும் சுற்றியுள்ளவர்களின் முகம் பார்த்து, அவர்தம் உதவி எதிர்பார்த்து --- தங்களுக்குப் பிறகான அவனுடைய காலம் -- அது எப்படிக் கழியும் என்ற கவலையே அவர்களை தினம் தினம் மௌனமாக அழ வைத்துக் கொண்டிருந்தது....
       திடீரென்று ஒரு நாள் அந்தப் பிள்ளை சுவாசக் கோளாறால் இறந்து போனான்....
துக்கத்திலும் ஒருபெரிய ஆறுதல் - அது எப்படியிருக்கும் என்பதை முழுமையாகக் கண்டு கொண்ட தருணம் அது....
மிகவும் மனதை பாதித்த அச்சம்பவம் தான் இக்கவிதைக்கு விதை. 







உனக்காகவே தான் 
என் பொழுதுகளை 
சேமித்து வைக்கிறேன்.... 

உன் ஒரு பார்வை, 
சிறு பதில், 
அல்லது சின்னப் பிடிவாதம் 
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தான் 
என் நாளின் பெரும்பகுதி செலவாகிறது... 

சடுதியில் நீயோ 
பார்வைகள் வெறிக்க 
பெருவெளியின் ஆழ்மௌனத்தோடு கலந்து போகிறாய்! 

எங்களையும் ஒரு சேர 
அந்தகாரத்தில் தள்ளிவிடும் 
அதிசயமான மௌனம் 
உனக்கேயானது. 



உனக்குள் ஒவ்வொரு முறையும் 
இதைச் சாத்தியப் படுத்தி 
ஏன் எங்களைச் சங்கடப் படுத்துகிறாய்?! 

சந்தோஷங்களோ -
சங்கடங்களோ - 
சமரசங்களோ - 
சத்தமாய் சொல்லித் தானே எங்களுக்குப் பழக்கம்! 
நீண்ட உன் மௌனத் தாக்குதல்கள் 
புரட்டி எடுக்கின்றன எங்களை! 
மிக வினோதமாய் 
உன்னால் உண்டானவை எல்லாமும் கூட 
ஊமைக் காயங்கள் தான்! 

போகட்டும், 
உன் பொருட்டு -
உள்ளே அழுது வெளியே சிரிக்கும் பாடம் 
நாங்கள் படிக்க முயல்கிறோம்... 

நான் எத்தனித்தவைகளில் 
தோற்று நின்றிடும் போதெல்லாம் 
தேற்றிவிடுகின்றன 
வாயோரம் எச்சில் வழிய 
கவனம் குவிக்க முயன்று 
மறுபடியும் மறுபடியும் 
தோற்றாலும் நிற்காத 
உன் பெரு முயற்சிகள்.... 



கோர்வையற்றுப் போய் 
பாதியில் நிற்கின்றன உன் செயல்கள்.... 
மருத்துவம் சொல்கிறது 
"இது ஆடிஸம்!" என்று! 

ஆனால், 
கடைவாய் எச்சில் ஒழுக்கோடு 
கண நேரமும் தாமதிக்காமல் 
எந்தத் தயக்கமும் இன்றிப் புன்னகைக்கும் 
உன்னைப் பார்க்கையில் 
என் உள் மனம் உரக்கச் சொல்கிறது: 
"நீ ஆசீர்வதிக்கப் பட்டவனென்று!"
"உன் வாழ்க்கை ஒரு வரமென்று!"
"நீ நடமாடும் தெய்வத்துளி என்று!"



 நன்றி: கூகுள் படங்கள்.
 நன்றி: முக நூல்

No comments:

Post a Comment