தினம்
தின்னக் கொடுக்கிறேன்....
ஒன்று திரட்டி
நான் சேமித்திருந்த
உன் ஞாபகங்களை
என் கணப்புச் சூட்டிற்காக ....
கண்ணீர் நனைத்துக்
காய வழியின்றி
உடலோடு ஒட்டி நிற்கும்
ஈரச் சிறகுகளை
எப்பாடு பட்டேணும்
உலர்த்திட வேண்டிய கட்டாயம் எனக்கு!
பெரும் சுயநலமாய்
நான் குளிர்காய்வதாய்
உலகம் நினைத்து விட்டுப் போகட்டும்!
கவலையில்லை எனக்கு!
எனக்குத் தெரியும்,
நான் என்னையே தொலைப்பதை
ஒருபோதும் நீ ஒப்ப மாட்டாயென்று!
சிறகசைய பிரபஞ்சம்
முழுக்கச் சுற்றி வரும்
லாவகம் எல்லாம்
எனக்குக் கற்றுத் தந்ததே
நீ தானே!
இறகுகளைக் காவு கொடுத்து
உன் நினைவுகளைப் போற்றுவதை விட
உன் நினைவுகளின் கணப்பிலே
நான் என்னையே
உலர்த்தி மீண்டும்
பறக்க விழைகிறேன்....
இது
துரோகமல்ல.....
அப்பட்டமான
நன்றியறிதல்!
உன் வித்தைக்கும் -
என் வாழ்க்கைக்கும்!
நன்றி: கூகுள் படங்கள்.
நன்றி: முக நூல்.



No comments:
Post a Comment