பாய் நனைஞ்சு பரி நனைஞ்சு
இஞ்சி கொல்லைக்குப் பாஞ்சி
எலுமிச்சைக்கு வேரோடி.... “
- குளித்து முடித்து மார்பளவு வரைக்கும் ஒரு பிங்க் நிற டவலைச் சுற்றி நின்ற ஷீலுக் குட்டிக்காகத்தான் மேற்படி பாடல். நமட்டுச் சிரிப்புடன் ராகமாய்ப் பாடியபடி ஷீலுவின் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை உறை, ஸ்வெட்டர் என்று சகல உருப்படிகளையும் ஊறவைத்தாள் அம்மா. ஷீலுவின் முகத்தில் வெட்கம் படர்ந்தோடியது... அடுத்த கணமே அது கோபமாய் மாறி, சிணுங்கலாய்த் தொடர்ந்து அழ ஆரம்பித்தாள்.
“ஒதை படுவே இப்போ... ஒரு நாளைப் போல தினம் படுக்கையிலேயே பாத்ரூம் போனா... பாட்டி பழிச்சுக் காட்டாம வேறென்ன செய்வாங்க? இந்தக் குளூரில போர்வை எல்லாம் காயுதா? எங்கேருந்து வந்துது இந்தப் பழக்கம்? திடீர்னு? செகென்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறாளாம் செகென்ட் ஸ்டாண்டர்ட்! இனிமே உனக்கு நைட்டுல பால் கிடையாது போ...”
“ஆமா, நீயொன்னு! அந்த ஒரு டம்ளர் பாலையும் நிறுத்திட்டா அப்புறம் என்னதான் சேரும் உடம்பில? எதையாவது பார்த்து பயந்துட்டான்னு நினைக்கிறேன்! ராத்திரியில கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டு கண்ட பேய், பாம்புக் கதைன்னு பார்க்காதேன்னா கேட்டாதானே?”
இந்தக் குற்றப் பத்திரிகையைக் கேட்டதும் ஷீலுவின் அழுகை இன்னும் தீவிரமடைந்தது.... இனியும் நான் தலையிடாமல் இருக்க முடியாது. “ஷீலு, இன்னைக்கு சாயங்காலம் நாம ஒரு இடத்துக்குப் போறோம்... எங்க சொல்லு?” திசை திருப்பினேன்.
சட்டென்று ஷீலுவின் முகத்தில் வெளிச்சம் பரவியது... அழுகையை அந்தரத்திலே விட்டுவிட்டு என்னிடம் ஒடி வந்தாள்.
“பாண்டா கரடி பொம்மை வாங்கலாம்பா... ப்ளீஸ் பா...” முகத்தை உயர்த்தி கண்களை இறுக்கி மூடி உடம்பை முன்வளைத்து அவளே ஒரு டெடிபேர் போல்... – என்னுடைய எண்ணம புத்தகக் கண்காட்சியாக இருந்தது... அதனாலென்ன? “ஓகே; டீல்!.. சரி நீ இப்போ சமர்த்தா ஸ்கூலுக்கு கிளம்பு... டைம் டேபிளப் பார்த்து எல்லாத்தையும் எடுத்து வச்சுக்க.... போ...”
“ஹோம் வொர்க் நோட்டை எடு... எல்லாம் முடிச்சாச்சான்னு ஒரு தடவை பார்த்துடலாம்...” அப்பா இதற்கென்றே காத்திருந்தவர் போல் செய்தித் தாளை ஓரம்கட்டினார்.
“தாத்தா, இங்க பாருங்க! மிஸ் எனக்கு ‘வெரி குட்’ போட்டிருக்காங்க!”
“அடேங்கப்பா, காமி... என்று ஆசையாய் வாங்கிப் பார்த்த அப்பாவின் முகம் சட்டென்று சுருங்கியது... என்னதிது? ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்... ‘கின்னம்’-னு நாலு தடவையும் தப்பாவே எழுதிருக்க... இதச் சுழிக்காம வெரிகுட் வேற போட்டாங்களா? கண்ணை மூடிக்கிட்டே நோட்டு திருத்தினாங்களா உங்க மிஸ்?” தமிழ்ப் புத்தகத்தை எடுத்து அதைச் சுட்டி காட்டினார். “பார்த்தியா? இது தான் கரெக்ட்டு! ரப்பரை எடுத்து அழிச்சிட்டு சரியா எழுது!”
“மாட்டேன்... இது தான் தப்பு!..” பிடிவாதமானாள் ஷீலு.
“ஒரு வேளை உங்க மிஸ்க்கு தெரியாம இருந்திருக்கலாம் இல்ல?” – அப்பா விடவில்லை! நல்லாசிரியர் விருது வாங்கியவராயிற்றே!
“போங்க தாத்தா... உங்களுக்குத்தான் ஒன்னும் தெரியல... எங்க ரோஸி மிஸ்க்கு எல்லாம் தெரியும்.... நான் எங்க மிஸ் சொன்னா தான் மாத்துவேன்!” படக்கென்று நோட்டை எடுத்து பைக்குள் திணித்தாள். – நான் ஷேவிங் செய்வதைப் பாதியில் நிறுத்திவிட்டு அயர்ந்துபோய் பார்த்தேன்.
ஒரு கணம் நான் அதிகம் சந்தித்திராத அந்த ரோஸி மிஸ்சின் மேல் எனக்குப் பொறாமையாக இருந்தது.... எப்பேர்ப்பட்ட ஒரு நம்பிக்கைக்குச் சொந்தக்காரியாக இருக்கிறாளென்று! இந்தக் குழந்தையின் மனதில் அவள் ஒரு தேவதையின் பிம்பம்! எனக்கும் ரஞ்சனிக்கும் கூட இல்லாத ஓர் உயரமான இடம் இந்த ரோஸி மிஸ்சுக்குக் கிடைத்திருக்கிறது! அன்பினால் கட்டப்பட்ட ஒரு மேடை மேல் அவளை அமர்த்தி அழகு பார்க்கும் ஷீலுவைப் போல், இன்னும் எத்தனைக் குழந்தைகளோ? கொடுத்து வைத்தவள்! முதன்முதலாக நான் ஒரு ஆசிரியர் ஆகாதது குறித்து வருத்தப் பட்டேன்.
பதினோரு மணி சுமாருக்கு அனாமத்தான ஒரு நம்பரிலிருந்து அழைப்பு. பிறகு பார்க்கலாம் என்று சட்டை செய்யாமல் இருந்த போதும் கூட, மூன்று முறை நச்சரித்து எரிச்சலைக் கிளறியது.
“ஹலோ.. நான் தீனதயாளன். உங்க பொண்ணு படிக்கிற ---- ஸ்கூல்ல தான் என் பொண்ணும் படிக்கிறா... அர்ஜெண்டா ஒரு பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங் ஏற்பாடு பண்ணிருக்கோம். மதியம் ஒரு மணிக்கு... நீங்க அவசியம் வந்துடுங்க!”
“ஏன் சார்? என்ன விஷயம்? எனி பிராப்ளம்?”
“விஷயமே தெரியாதா? எல்லா நியூஸ் சேனல்லயும் பத்திக்கிட்டு எரியுது... பாருங்க முதல்ல.." - நான் படபடப்பானேன்!
எனக்கு முன்னதாகவே ரஞ்சனி வந்திருந்தாள். “எவனோ ஒரு பி.டி. மாஸ்டராம்... “விளையாடிருக்கான்” அந்த ராஸ்கல் – அதுவும் இந்தச் சின்ன குழந்தைகள்ட்ட.... என்ன தெரியும் இதுக்கெல்லாம்? எல்லாம் பொட்டுப் பொடுசா இருக்கு... பாவம்... இப்போ கூட ஒரு ஆயாமா தான் பார்த்துட்டு போய்ச் சொல்லிருக்காங்க... இத்தனைக்கும் கல்யாணமாகி அவனுக்கும் ஒரு பொம்பளைப் புள்ள இருக்காம்! சரியான சைக்கா இருப்பான் போலிருக்கு.... சீ... என்ன ஜென்மம் இதெல்லாம்?”எனக்கு நடுங்கியது. ஷீலு எங்கே? என்றேன் சைகையால்...
“உள்ள தான் இருக்கா... போலீஸ் வந்திருக்கு. என்கொயரி.... இப்போதான் மெயின் கேட்டைத் திறந்தாங்க.... ரகளை ஆயிடும்னு தெரியும்ல... இந்த மாதிரி வக்கிரத்துக்கெல்லாம் என்ன வேண்டியிருக்கு என்கொயரியும் மண்ணாங்கட்டியும்? நடுரோட்டில தூக்கில போடறதை விட்டுட்டு?” – ரஞ்சனி புலம்பத் தொடங்கினாள். கொத்துக் கொத்தாய் பெற்றோர்கள்... பரபரப்பாக... படபடப்பாக... ஆபீஸ் ரூம் இருந்த திக்கையே பார்த்தபடி... பேசிக்கொண்டும், பேச முடியாமலும்...
-“கடைசியில... படிச்சவனுங்க தான சார்?”
“எனக்கு இந்த வாத்தியாரைத் தெரியும் சார்... ரொம்ப டீசண்டா தான் நடந்துப்பாரு... பேசுவாரு... என் பொண்ணு போனா தடவை ஸ்போர்ட்ஸ்-டேல அடிபட்டு ஸ்கூலுக்கு வர முடியாத கிடந்தப்போ எங்க வீட்டுக்கு வந்து பார்த்தார் சார்... அவரா இப்படி? என்னால நம்ப முடியில.... நம்பாமையும் இருக்க முடியல...”
“நிஜம் தான்... மனுஷத்தனத்துக்கும் மிருகத்தனத்துக்கும் நூலிழை அளவு தான் வித்தியாசம்... ஒரு சின்ன இடைவெளி... கவனமா அந்த இடைவெளியைப் பெருசு பண்ணிக்கிறவங்க இப்போல்லாம் கொறஞ்சு போயிட்டாங்க... அதுக்கான நேரமும் இல்ல.. அதுக்கான மனசும் இல்ல... அக்கறையும் இல்ல... அதான் இந்த மாதிரி தடியனுங்க கிளம்பிடுறானுங்க... என்னத்தைச் சொல்றது? என்றார் ஒரு பெரியவர்.
“விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள். அதுவரை பெற்றோர் பொறுமை காக்கும் படி பள்ளி நிர்வாகமும் காவல் துறையும் கேட்டுக்கொள்கின்றன... காலவரையின்றி பள்ளி மூடப் படுகிறது...” – மேற்படி அறிக்கையைத் தாளாளர் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே வாசித்து அவசரமாய் நகர்ந்தார்... விர்ரென்று ஒரு ஜீப வந்து நிற்க, அதில் துண்டால் முகத்தை மறைத்திருந்த ஒருவனை அவசர அவசரமாய் ஏற்றினார்கள்... எங்கிருந்தோ புறப்பட்ட கல் ஒன்று மிகச் சரியாய் ஜீப்பின் பின்புறக் கண்ணாடியில் பட்டு தெறிக்க, அடுத்த பத்து நிமிஷங்களில் அந்த இடம் கலவர பூமியானது. அடுத்த தெருவிலிருந்த இன்னொரு வாசலின் வழியாக பிள்ளைகளை அவசரமாய் வெளியேற்றினர்.... பரபரப்பான நேர்முக வர்ணனை ஒன்றைத் தொகுத்தளிக்கும் அந்த மீடியாகாரர்களின் சாதனை-முகங்கள் சற்றே சங்கடமூட்டுவதாக இருந்தன.
ஷீலு மிரண்டு போயிருந்தது. கண்களில் இன்னமும் பயத்தின் சாயலும் மிரட்சியும் தெரிந்தன. எந்த நேரத்திலும் அழத் தயாராயிருக்கிறாள் என்பதை உணர முடிந்தது. ரஞ்சனிக்கும் எனக்குமே கூட எப்போது உடையும் என்று தெரியாமல் கண்கள் அணைகட்டிக் கொண்டன ஷீலுவைப் பார்த்ததும்.
“ஷீ....லு..க் குட்டி, வீட்டுக்குப் போயி சாப்பிட்டுட்டு, கொஞ்சம் நேரம் தூங்கிட்டு, அப்புறமா போயி பாண்டா கரடி பொம்மை வாங்கலாமா?” என்றேன்.
“ப்ச், எனக்கு வேணாம்பா!” என்றது ஷீலு.
“சரி, வேறென்ன வேணும்?”
“எனக்கு இந்த ஸ்கூல் வேணவே வேணாம்பா.. வேற ஸ்கூல் வேணும்பா ... போலீஸ்ல்லாம் வராத ஸ்கூல்ப்பா!... ப்ளீஸ்பா!” – முகத்தை உயர்த்தி கண்களை இறுக்கி மூடி உடம்பை முன்வளைத்து கெஞ்சுகிற பாவனையில்.... நான் வார்த்தைகளற்றுப் போய் விரக்தியாய் தலையாட்டினேன்.
“ஏன் தாத்தா, டீச்சர்ஸ்லாம் நல்லவங்க தானே?” – ஷூவைக் கூட கழட்டாமல் அப்பாவின் முன் கேள்வியோடு நின்றது ஷீலு. அப்பா பதிலற்று, அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
இந்தப் பொழுது விடியாமலேயே இருந்திருக்கலாமோ என்ற ஆயாசமும ஆதங்கமும் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்கிரமித்தன.





.jpg)


.jpg)

No comments:
Post a Comment