Tuesday, 7 April 2015

விடுபட்ட கவிதை


இன்னும் எழுதப்படாத கவிதையொன்று
வார்த்தைகளுக்குள் சிக்க மறுத்து
வான்வெளியெங்கும் அலைந்தபடியே இருக்கிறது...

இளைப்பாற இடம் தேடிஅக்கவிதை,
ஒரு பறவையின் கூட்டை தேடி அமர்கிறது....
முகத்திலறைந்த அக்கூட்டின் வெறுமையை
தன் மனத்தின் வெறுமையோடு ஒப்பிட்டுச் சலித்து
தோற்றோடி தூரதூரங்களையும் தாண்டுகிறது....



கடல் தாண்டும் போதில்
ஓய்வுக்காக ஒரு பாய்மரத்தின் மீதமரும்
அந்த இரு நொடிகளின் இடைவெளியில்
அழகிய மீன்கூட்டமொன்று சுறாவின் வாயில் சமாதியடைவதை
கண்டு பதறி மூர்ச்சிக்கிறது...

மீண்டும் கரைக்குத் திரும்பி
குழந்தைகளின் கன்னக் கதுப்புகளில்
தஞ்சம்புகப் பறந்து வந்த போதும்
பரபரத்து விரையும் பள்ளி வாகனங்களின்
வேகத்துக்கு ஈடு செய்ய முடியாமல்
ஒதுங்கி நின்று சாலையை வெறித்தது....



இளமை தன்னை இனம் கண்டு கொள்ளும்
என்று திட்டவட்டமாய்
ஒரு கல்லூரியில் நுழைந்த போது --
கவிதை தான் வந்தவேலையை மறந்து போய்
வாட்ஸ்அப்பை பார்த்து வாய் பிளந்தது...



பின்னும் பின்னும் கவிதை
தன் றெக்கைகள் படபடக்க --
காருண்யம் ததும்பும் தாதிகளையும்
கடவுள் நிகர்த்த மருத்துவர்களையும்
நளினமும் கனிவும் சுமந்த பெண்களையும்
ஆழ்ந்த முதிர்வின் அமைதியில் தளும்பிடும் அனுபவங்களையும்
வாசல்கள் தோறும், பள்ளிகள் தோறும்,
வழிபடு ஸ்தலங்களின் ஜன்னல் இடுக்குகளிலும்
புகை போக்கி துவாரங்களிலும் தேடி சலித்து கண்டடைவதென்னவோ -
தொலைக்காட்சிக் கேவல்களையும்  காதடைக்கும் எஃப்.எம் பிளிறல்களையும் தான்!



இதொன்றிலும் சிக்கிக் கொள்ள விருப்பமில்லா
 விடுபட்ட கவிதையொன்றாய்
வான்வெளியெங்கும் மயங்கி அலைந்தபடி இருக்கிறது...

நன்றி:
கூகுள் படங்கள்.











No comments:

Post a Comment