Friday, 19 December 2014

சிரிப்பாய்ச் சிரிக்குது சிரிப்பு!



நாம் சிரிக்காத ஒவ்வொரு நாளும் வீணான நாளே என்று கூறுவதன் மூலம், நம் 'வாழ்நாள் சாதனைகளை' எல்லாம் போட்டு உடைக்கிறார் சார்லி சாப்ளின். உண்மைதான், சிரிப்பின் மகத்துவம் என்பது நாம் அறியாததில்லை.


'நல்ல நகைச்சுவை எது?' என்பதைப் பற்றி ஒவ்வொரு நாளுமே நான் சிந்திப்பதுண்டு. குறிப்பாக, தொலைக்காட்சியில் பிரத்யேகமாக நகைச்சுவைக்கென்றே தனிச் சேனல்கள் குவிந்து கிடக்கின்ற நேரம் இது..... அதிலும் இந்தியர்களுக்கு பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் அரசியலையும் விட்டால் நகைச்சுவைக்கு வேறு கதியில்லை. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவை மூன்றுமே சினிமாவின் பிடியில் நசுங்கிக் கிடக்கின்றன.



இன்றைக்கு நடைமுறை வாழ்க்கையில் உள்ள சிரிப்புப் பஞ்சத்தைப் புரிந்து கொண்டு கோடம் பாக்கம் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்குகிறது.... நகைச்சுவை பேனரைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி... காலத்தேப் பயிர் செய்ய....   நமக்கோ பயமாயிருக்கிறது!

சமீப காலமாக  தமிழ்ச் சினிமாக்கள் காட்டும் நகைச்சுவையில் அதிகம் இடம்  பெறுவது ஆபாசமா? டாஸ்மார்க்கா? அல்லது தனிமனிதனை இழிவு படுத்தி, அவனின் தனிப் பட்ட ரசனைகளையும் விருப்பங்களையும் கொச்சைப் படுத்திக் கட்டப் படும் ஒரு வெற்றுக் கோபுரமா? என்று பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது.

        


நம் எல்லா சிரிப்புகளும் மகிழ்ச்சியைப் பரப்புகின்றனவா என்று நாம் சிரித்துக் கொண்டே சீரியஸாய் யோசிக்க வேண்டியிருக்கிறது. கலைவாணரோடு யாரையுமே ஒப்பிட முடியாது. சிரிப்பையும் சிந்தனையையும் ஒரு சேரத் தூண்டியவர் அவர். தனி மனித வக்கிரங்களோ, காழ்ப்புணர்ச்சிகளோ,  ஆபாசமோ எட்டிப் பார்க்கக் கூட அஞ்சும் மகத்தானதொரு நகைச்சுவைக் கோட்டையைக் கட்டி ஆண்டவர் அவர். அவருக்குப் பின் வந்த தலைமுறையில் சில சமயங்களில் சிந்தனை என்பது மிஸ் ஆனால் கூட சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது. சந்திரபாபு, தங்கவேலு, சோ, நாகேஷ், பாலையா, சுருளிராஜன், தேங்காய் ஸ்ரீநிவாசன்,  என்று அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த எல்லா நகைச்சுவை நடிகர்களுமே வரம்புகளை வகுத்துக் கொண்டுதான் வாரியிறைத்தார்கள் சிரிப்பை. எனவே, நாகரிகக் குறைவோ கண்ணியமற்ற வசனங்களோ அப்போது இருந்ததில்லை; ஒருவேளை இருந்தாலும், விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு சொற்பமே.

   
    

அங்கததிற்குப் பெயர் போனவர்களாய்  எம். ஆர். ராதாவும் சோவும்.... அரசியல் கலந்த நகைச்சுவையை - நாசூக்காய் வெளிப்படுத்தி ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தார்கள். தி.க.சிந்தனைகளை திரைக்கதையோடு இழைய இழையத் தோய்த்துத் தந்தார் ராதா என்றால், நெற்றியடியாய் நேருக்கு நேர் நின்று சிரிப்பால் எதிர்த்தவர் சோ.
  


அநேகமாய் எண்பதுகளின் ஆரம்பத்தில் தான் நம்முடைய நகைச்சுவையின் போக்கும் தரமும் இறங்கத் தொடங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 'அந்தத் தலையா, இந்த மண்டையா, அந்த வாயா இந்த வாயா' என்று தனி நபரை இழிவு படுத்தும் சின்னத் தனமும் கூட அப்போதிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்!

அட, சினிமா தானே என்று நாம் நகரக் கூடியவர்கள் இல்லையே! அந்த நேரம் சிரித்துவிட்டு நகர்ந்து போகிற யதார்த்தபுத்தி இல்லையே நம்மிடம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சினிமா போதையை சிக்கெனப் பிடித்துக் கொள்பவர்கள் தானே நாம்? அரசியலிலிருந்து அடுப்பங்கரை வரை, புடவையிலிருந்து புல்லட் ப்ரூப் ஆடை வரை நம்மர்வகளுக்கு பலவற்றையும் பரிச்சயப் படுத்துவதே இந்த சினிமாதானே!
   


எல்லா தணிக்கைகளையும் மீறி அனர்த்தங்களும், அத்துமீறல்களும் கொட்டிக் கிடக்கும் குப்பைச் சிந்தனைகளை நம் வீட்டு வரவேற்பறைக்குள் அள்ளி இறைக்கின்றன நகைச்சுவைத் தொலைக்காட்சிகள். இதையே பொழுதுக்கும் பார்க்கின்ற பிள்ளைகள்,  "போடாங்....., டுபுக்கு, குந்தாணி, பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? ங்கொய்யால, குல்பி, பல்பி, பக்கி...." போன்ற வார்த்தைகளை, விபரீதம் புரியாமல், விளையாடித் திரிந்தபடி சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் தானே?
தவிர சோட்டா பீம், கார்டூன் நெட்வொர்க், சித்திரம், சுட்டி டி.வியில் இடம் பெரும் பல தொடர்களிலும் கூட குழந்தைகளுக்கான கதாபாத்திரங்கள் இந்த ரெண்டும்கேட்டான் பாவனைகளையும் வசனங்களையும் காப்பி அடிப்பது சகிக்க முடியாததாகவும், வேதனை அளிப்பதாகவும் இருக்கிறது. 
  


உருவு கண்டு எள்ளாமை வேண்டும்! என்ற வள்ளுவரையும் கூட, "வந்திட்டாரு வள்ளுவரு!" என்று ஒரு காமெடி பீஸாகப் பயன்படுத்துவது தான் எல்லாவற்றுக்கும் சிகரம்!!

ஒன்றைத் தைரியமாய்ச் சொல்லலாம்: வயதானவர்களையும், மாற்றுத் திறனாளிகளையும், குண்டானவர்களையும், பெண்களையும், சராசரியான தோற்றமுள்ளவர்களையும்  குறி வைக்கக் கூடாது. பட்டப் பெயர் கூடாது. குடிப்பது மற்றும் ரெட்டை அர்த்த வசனம் ஆகாது என்று ரிங் மாஸ்டர் போல் நாமெல்லாம் கிளம்பினால் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் பல சிரிப்பு நடிகர்களின் வாழ்க்கை சோகத்தில் சிக்கிப் போகும்.

சிற்றின்பமும் சாராயமும் தான் இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய சீர்கேடு! சாபக் கேடு! ஆனால் அதைக் கடை விரித்துத்தான் இன்றைய நகைச்சுவைத் திரை உலகம் காலம் தள்ளுகிறது.



நகைச்சுவை நடிகைகளையும் கூட அந்தச் சாபம் விட்டு வைக்கவில்லை. பெரும்பாலும் பொருந்தாக் காமமும் ,  பேராசையுமே அவர்களுக்கான காட்சிகளைத்
திரையில்  உருவாக்குகின்றன. சாராயம் காய்ச்சுபவர்களாகவும், அதை விற்பனை செய்பவர்களாகவும், சதையை விற்பவர்களாகவும் தான் அநேக நேரங்களில் நகைச்சுவை நடிகைகள் சித்தரிக்கப்படுகிறார்கள். மதுரம் தொடங்கி ஆச்சியோடு ஆரோக்கியமான நகைச்சுவை என்பது நடிகைகளிடையே முடிந்து போயிற்று எனலாம்.

நகைச்சுவைக்கும் விரசத்துக்குமான இடைவெளி குறைந்து வருவது கூட பெரிய வருத்தமில்லை. அதை நம் வரவேற்பறை வரை அழைத்து வந்தது கூட தவறில்லை. ஆனால், இடம் பொருள் ஏவலின்றி அது தன் ஆக்டோபஸ் கரங்களால் நம்முடைய நல்ல ரசனைகளைத்  தின்று தீர்ப்பதை, நம் பிள்ளைகளைத்  தன் நஞ்சால் மாசுபடுத்துவதைத் தடுத்தாள  வேண்டிய கட்டாயம் நமக்கு முந்தி நிற்கிறது!




நல்ல நகைச்சுவையை விட ஒரு மனிதனுக்குச் சிறந்த ஆபரணம் ஏதுமில்லை. அந்த 'நல்ல' நகைச்சுவை ஒரு நாளில் ஒரு பொழுதில் கைகூடிவருவதில்லை. நல்ல பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே கைவசமாகும் வரம் அது.

முதலில் நாம் தொலைத்துவிட்ட ஆரோக்கியமான நகைச்சுவையை கண்டு மீட்பதும், அவற்றையே நம் குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்வதும் நமது தலையாயக் கடமையாகும்.விரசமும் விகல்பமும் இல்லாத நல்ல எண்ணங்களும், நல்ல நோக்கங்களும் நம் பிள்ளைகளுக்கு, அடுத்த தலைமுறைக்கு அமைய வேண்டுமெனில், அவர்களுக்கு நல்ல ரசனைகள் அடித்தளமாக அமைய வேண்டும்! 

நன்றி: கூகுள் படங்கள்.

No comments:

Post a Comment