Friday, 19 December 2014

மட்டைத் தேங்காய் (கல்கி இதழில் பிரசுரமாகியது)

வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள் வர்ஷா. அட்டைப் பெட்டிகளைச் சுற்றி அடுக்கி வைத்து, இதோ தன் இடுப்பு உயரத்திற்கு செய்து விட்டாள்.

அட்டைப் பெட்டிகள் யாவும் பக்கத்திலுள்ள பொம்மைக் கடையின் குப்பைகள். குழந்தைக்கு என்ன தெரியும் குப்பையும் கோபுரமும்?!... “அம்மா, பாரும்மா!” என்று தான் கட்டிய வீட்டைக் காண்பிக்க அவள் குதூகலமாய் எழுந்த வேகத்தில் அந்த வீடு சரிந்து விழுந்தது. அதைக் காணச் சகிக்காமல் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் விஜயா. ஒரு அல்ப சந்தோஷத்திற்கு கூட இடமில்லாத தன் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் திரண்டது.

காலையில் எப்போதும் போல் தான் விடிந்தது. என்ன பண்ணப் போகிறோம் இந்த நாளைக்கு என்ற தினப்படி கவலைகள் தாண்டி பெரிதான சுவாரஸ்யம் இல்லாத ஒரு பொழுதாக - இதுவும்.... கை, பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாலும் மனசு அது பாட்டுக்கு இதுவரை வாங்கிய கடன்களையும், வட்டியையும் வருமானத்தையும் கூட்டிக் கழித்து பிச்சுப் பிடுங்கி என்னவோ செய்துகொண்டிருந்தது.
பைப்படியில் பேச்சரவமும் குடங்களின் சப்தமும். இதோ, தண்ணீர் வந்து விடும். அவசரமாய் பாத்திரங்களைக் கழுவிப் போட்டுவிட்டு குடங்களைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். “ரெண்டு சிசேரியன் பண்ணியாச்சு.... கவனமா இருக்கணும். கனமா எதுவும் தூக்கக் கூடாது... பாரமா உள்ளதெல்லாம் முக்கித் தூக்கினா அப்புறம் எரென்யா அது இதுன்னு இன்னும் கஷ்டமாப் போவும்” – எச்சரித்துத் தான் அனுப்பி இருந்தாள் டாக்டரம்மா. அதனால் இவள் முண்டியடித்து நாலு குடம் தண்ணீர் பிடித்து வைத்து விடுவாள். அவள் கணவன் தான் அதையெல்லாம் வீட்டுக்குத் தூக்கி வருவான். “ஏங்க, மணியாச்சு!” என்று அவனைத் தட்டி எழுப்பி விட்டு காப்பி போடப்போனாள். தோளில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக குடங்களை ரெண்டு தடவையில் கொண்டு வந்து சேர்த்தான் முத்து.
“பைப்படி இன்னும் கூட்டமாத் தான் இருக்கா?”
“இல்லை.... ஏன், இன்னும் ரெண்டுகுடம் பிடிக்கவா?”
“ஆமா, கணேஷுக்கு தலைக்கு ஊத்திவுடலாம்னு பார்த்தேன். குளத்துத் தண்ணில குளிபாட்டாதீங்கன்னு அந்தக் காதுவலி டாக்டர் சொன்னாருல்ல!”
“ம்.... ஒரு நெடுமூச்சு விட்டான் முத்து. யோசனையாய் அவள் முகம் பார்த்தான். பிறகு தரையைப் பார்த்தபடி, “உள்ளபடிக்கு, இன்னிக்கு, நீங்க எல்லாரும் எனக்குக் குடம் தூக்கி குளிப்பாட்டி ‘ஒரேயடியா அனுப்பிச்சிருக்கணும்’.... என்னமோ விதி.... வாழவும் விடாம, சாவவும் உடாம.....”
“என்ன சொல்றீங்க?” கை காலெல்லாம் நடுங்கத் தொடங்கியது அவளுக்கு.
“செத்துரலாம்னு தான் போனேன்.... குளத்துக்கு.  உச்சி வெயில் நேரத்துல, யாரும் புழக்கமும் இல்ல. எனக்குதான் நீச்சல் தெரியுமே! என்னையும்மீறி நான் புழைச்சிக்கிட்டா? கையையும் காலையும் கட்டிக்கிட்டு கண்ணை மூடி, சாமியை நினைச்சிக்கிட்டு முடிவா இறங்கிட்டேன்... ஹூம்! விதி.... பக்கத்துவூட்டு மணி இல்ல... தினம்  ஒரு உருண்டை சோத்த அவனுக்குன்னு எடுத்து வாசல்ல வைப்பேன் பார்த்தியா.... அந்த நன்றியோ என்னவோ.... குளத்தைச் சுத்திச் சுத்தி வந்து என்னையே பார்த்துப் பார்த்து குரைக்கிறான்.... பாதி தூரம் வீட்டைப் பார்த்து ஓடியாறான்.... அப்புறம் உடனே பாதியில என்னைப் பார்த்து ஓடியாறான்.... அப்பத்தான் விஜயா, சடக்குன்னு, ஒரு நினைப்பு.... ஒரு நாயே எனக்காக இந்தத் தவி தவிக்குதே, நாளைக்கு நானில்லாம என் ரெண்டு புள்ளைங்களும் நீயும் எப்படித் தவிப்பீங்கன்னு ஒரு நினைப்பு வந்துது... டப்னு தண்ணிய வுட்டு வெளில வந்துட்டேன்....” தரையில் கண்ணீர் சொட்டுக்கள். . கைலியால் முகத்தை அழுந்தத் துடைத்து மூக்கை உறிஞ்சியபடி விஜயாவைப் பார்த்தான்.... அவள் இடிந்து போய் அமர்ந்திருந்தாள். ப்ச்! கண்களில் ஜீவன் தொலைந்து போய் வெகு நாளாயிற்று அவளுக்கு. இனி அழுதுமடிய அவளிடம் மீதம் எதுமிருக்குமா என்பதும்கூட சந்தேகம் தான். ஒட்டிய வயிறும் தோள்களில் நழுவும் ரவிக்கையுமாக அவளைப் பார்க்கவே பரிதாபமாக....

மறுகுடம் தண்ணீர் எடுத்து வந்த போது விஜயா ரெண்டு கைகளிலும் ரெண்டு பிள்ளைகளையும் அணைத்துப் பிடித்தபடி வாசலிலேயே நின்றிருந்தாள். “சத்தியம் பண்ணுங்க! ஊர்பூரா கடனை வாங்கி வைச்சிட்டு செத்துப் போயிட்டான் அப்பன்ற அவப்பெயரை இந்தப் புள்ளைங்களுக்கு ஏற்படுத்த மாட்டீங்கன்னு சத்தியம் பண்ணுங்க!”
“இல்லை விஜயா...நான்” என்று ஏதோ சொல்ல வந்தவனை மூர்க்கமாய் தடுத்தாள் விஜயா. “போதும்! பேசிப் பேசிதான இந்தப் பதினொரு வருஷமும் போச்சு.... சத்தியம் பண்ணுங்க!” அரைத் தூக்கத்தில் நின்ற குழந்தைகள் என்னவென்று புரியாமல் மிரண்டு நின்றன.

உள்ளே ‘அம்மா’, உடுக்கடித்து யாருக்கோ அருள் சொல்லிக் கொண்டிருப்பது கேட்கிறது. இன்னும் இரண்டு பேர் போனதும் தான் விஜயா போகவேண்டும். எல்லோரும் ரொம்ப உசத்தியாய் சொல்கிறார்கள் அம்மாவைப் பற்றி. கண்ணுல கண்டதைப் போல என்னான்னு சொல்லிடும். ரொம்ப பவரு.... எண்ணி ஒரு மண்டலம் தான்... எப்பேர்ப்பட்ட கஷ்டமும் காணாப்பூடும்.... சும்மாவா, போனவாரம் திருச்செந்தூர்லேர்ந்து கார் எடுத்துகிட்டு வந்தாரு? எல்லாம் சக்தி தான், அருள் தான்!

முப்பது ரூபாய் கொடுத்து ஒரு அர்ச்சனை தட்டு வாங்கி வந்திருந்தான் முத்து. அவனுக்கு இதிலெல்லாம் பெரிய நம்பிக்கையில்லை. என்றாலும் விஜயாவுக்கு அவ்வப்பொழுது இது போன்ற ஆசுவாசங்கள் தேவையாகின்றன. “கூடிய சீக்கிரத்தில நீ ஒன் கஷ்டமெல்லாம் தொலஞ்சு நல்லா இருப்பே!” என்று யாராவது சொல்லவும், கேட்கவும் அதில் ஆறுதல் அடையவும்  ஆசைப்படும் மனது அவளுடையது.

“நீ அனுபவிக்கிறது வறுமை இல்லை தாயீ, வஞ்சம்! பச்சைத் துரோகம்! செய்வினை செஞ்சிருக்காவோ! உன் குடி விளங்காம போவணும்னு!”
விஜயாவின் கண்களிலிருந்து மாலைமாலையாக கண்ணீர். ஊதுவத்தி, சாம்பிராணி புகையில் தெரிந்த அந்தக் கம்பீரமான பயமுறுத்தும் உருவம் திகில் கிளப்பும் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது. ரெண்டு மாசத்துக்கு முந்தி அவளுடைய சின்ன தம்பியும் எங்கோ போய் இவளுக்காகக்குறி கேட்டபோது அங்கும் இதையே தான் சொல்லியிருந்தார்கள்.
“யாரு? யாரு செஞ்சிருக்காங்க?” பரபரத்தாள்.
“ஆணும் பெண்ணுமா ரெண்டு பேரு.... இரெத்த சம்பந்தம் உள்ளவங்க தான்! வேற எதுவும் கேக்காத!”
அந்த ரெண்டு பேரையும் கழுத்தை நெறித்துக் கொன்னால் கூட தேவலாம் என்றிருந்தது விஜயாவுக்கு. அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். வேறு யார்? எல்லாம் முத்துவுடைய அண்ணன் குமாராகத் தான் இருக்க முடியும்! பத்து வருஷத்துக்கு முன்பு ஏமாற்றி சொத்தைப் பிடுங்கிக் கொண்டது போதாதென்று இப்போது மிச்சமிருக்கிற உயிருக்கும் குறி வைக்கிறான் போல....
“திருப்பி விடுங்கம்மா!!” – அழுத்தமாகச் சொன்னாள் விஜயா.
“ச்சே! ச்சே! அதெல்லாம் வேணாம்.. எங்களுக்கு அது ஒன்னும் பண்ணாம ‘அடக்கி’ வையுங்க போதும்!” – பதறினான் முத்து!
“ஏன், சதை ஆடுதோ? கூடப் பொறந்த பொறப்புன்னு ‘அவன்’ நினைச்சானா?”
“பைத்தியமாட்டம் பேசாத! எங்கண்ணன் தான்னு உனக்கு நல்லாத் தெரியுமா? அப்படி என்ன அவரைக் காட்டிலும் நாம வாழாது வாழ்ந்துட்டோம்?”
“ஆமா, ஊரை அடிச்சு உலையில போட்டா நாமளும் தான் வாங்கலாம், காரு தேரு எல்லாம்.... உசிரு மட்டும் இருக்கேன்னு அதையும் உருவ நினைக்கிறானோ என்னமோ பாவி!!” என்று இவனிடம் பாய்ந்தவள், சட்டென்று அம்மாவின் பக்கம் திரும்பி கைகூப்பினாள்.
“நான் என் தாலிய வித்தாவது காசு தரேன். நீங்க ‘திருப்பி’ விடுங்க! பத்து வருஷமா நான் பட்ட கஷ்டத்தை பத்து நாளாவது அந்த ஜென்மங்களும் படணும்!” – அப்பட்டமான துவேஷம்!

ஐம்பத்தொரு எலுமிச்சைகள் கோர்த்த மாலை, சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி, பூ, பழம், காணிக்கையாக மூவாயிரம் கொடுத்ததற்கு பதிலாக, ஒரு மட்டைத் தேங்காயை கொடுத்தார்கள். “இதக் கொண்டு போய் உங்க நிலை வாசல்ல கட்டுங்க! போதும்!” 
“ம்... தேங்காய் கட்டுன நேரம் நல்ல சேதி தான் வந்திருக்கு. குமாரு பொண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சிருக்காம். கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணையும் கூட்டிகிட்டு போறாங்களாம்!” – முத்துவின் குரலில் ஒரு திருப்தி; சந்தோஷம்!
“க்கும், இன்னும் என் தம்பிங்களப் போல பாசமா மட்டுமிருந்திருந்தா நீங்க தினம் காவடி எடுத்திருப்பீங்க அவருக்கு! என்னை எகத்தாளம் பண்றதா நினைச்சிகிட்டு, எதையாவது பேசாதீங்க. சாமிக்குத்தமாப் போயிடப்போவுது!”

"பைத்தியக்காரி! படிச்சிருக்கியே, அதுக்கேத்த மாதிரி நடந்திருக்கியா இன்னிக்கு வரை நீ? என்ன பெரிய செய்வினை? ஆகாசத்துக்கும் பூமிக்கும் நடுவுல மனுஷன் வாழுற இந்தக் கொஞ்ச நாள்ல வெறுப்பை சுமந்துகிட்டு அலையறதுக்கா என்னையும் உன்னாட்டம் நம்பச் சொல்ற?! எனக்கு என் மனசு தான் எல்லாம்... என் கை தான் தெய்வம்! ஒன்னு தெரியுமா உனக்கு? இவன் செஞ்சானா, அவன் செஞ்சானான்னு வருஷக்கணக்கா மண்டையப் பிச்சுக்கிறமே தவிர, நாம இந்த நிலைமை மாற என்ன பெருசா செஞ்சிட்டோம்? புலம்பறதையும் பெருமூச்சிவிடறதையும் தவிர??
மனம் போல வாழ்வுன்னு சும்மா ஒண்ணும் சொல்லலை பெரியவங்க.....” --- படபடவென்று பேசியபடி காற்றில் ஆடிக் கொண்டிருந்த தேங்காயை அவிழ்த்து ஓரமாய் வைத்தான். வா, போயி அந்த பிரெட் கம்பெனியில வேலை கேட்டுப் பார்க்கலாம்!” என்று அவளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புது வேகத்தோடு மிதித்தான்....

“ஒன்னு தெரிஞ்சுக்கோ விஜயா..... இந்த மண்ணுல எதுவுமே நிரந்தரம் இல்லை.... நம்ம கஷ்டம் உள்பட.....” என்று அவன் இரைக்க இரைக்க பேசியது – அவன் மீதான நம்பிக்கையை இன்னும் அவளுக்குள் அதிகமாக்கியது! 




 நன்றி: கூகுள் படங்கள்
நன்றி: கல்கி வார இதழ்



No comments:

Post a Comment