Monday, 1 December 2014

கனவுகளை விதைத்தவள்....

அது ஒரு சின்ன ஊர்... படிப்பறிவில்லாத பெரிய தலைமுறையைக் கொண்ட ஒரு சிறு கிராமம். பெரிய வர்த்தகமோ விவசாயமோ எதற்குமே வழியற்ற ஒரு பொட்டல் பிரதேசம்...

அங்கு ஒரு பெண் குழந்தை... தந்தை, தன் சகோதரனை மட்டும் பள்ளிக்கு அனுப்பியதை, தன்னை வீட்டிலேயே அடைத்து வைத்ததை எண்ணி எண்ணி வருந்திய படி... பள்ளிகூடத்து பிள்ளைகளுக்கான மேஜை நாற்காலியை ஒரு தடவையாவது ஸ்பரிசிப்பதே அவளுடைய அப்போதைய லட்சியமாக இருந்தது.







தன் வருத்தத்தினூடே அவள் ரகசியமாகக் கல்வி கற்கவும் ஒரு வழி கண்டு பிடித்தாள். அவளுடைய சகோதரனின் புத்தகங்களின் மூலம் ஏகலைவனாக தானே முனைந்து கற்றாள் ... அவனுடைய வீட்டுப் பாடத்தை தானே செய்து கொடுப்பதென்று ஒரு முடிவுக்கு வந்தாள்  சின்னவர்கள் போட்டுக்கு கொண்ட பெரிய ஒப்பந்தம்... வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஒரு மின்னல் நிகழ்வு....

ஒரு நல்ல ஆசிரியரை எத்தனை நாளைக்குத் தான் ஏமாற்ற முடியும்? கெட்டிக்காரன் புளுகும் கூட ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் தானே? உங்கள் மகளையும் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்று அந்தக் குழந்தைகளின் தந்தைக்கு செய்தி அனுப்பினார் அந்த நல்லாசிரியர்.

அப்பாடா வந்தது விடியல்! தீர்ந்தது ஏக்கம்! சந்தோஷமாக பள்ளிக்குப் போனார்கள் இருவரும். ஆனால் விதி இன்னொரு முட்டுக் கட்டையுடன் அவளுக்கான வழியில் காத்துக் கிடந்தது... இரண்டு ஆண்டுகள் பொறுமையாக... பதினோரு வயதில் அவளுக்கு ஒரு முரட்டு ஆசாமியுடன் அவளுக்குத் திருமணம்... தினம் அடித்துச் சித்திரவதை செய்த அவனுடனான வாழ்க்கையில் மூன்று குழந்தைகள் வேறு.... பதினெட்டு வயதை எட்டியதும் தான் அவளுக்குத் தன் வாழ்க்கையின் திசையைப் பற்றிய பெருங்குழப்பம் மீண்டும்பற்றிக் கொள்கிறது... தன்னைப் போலவே தன் சந்ததியும் சின்னாபின்னப் படுமோ என்கிற பெருங்கவலை...

1991- ம் ஆண்டு, அப்போது அவளுடைய கிராமத்திற்கு ஒரு சமூக சேவகி..... அமெரிக்காவிலிருந்து வருகிறார்... ஊரிலுள்ள பெண்களையெல்லாம் ஒன்று திரட்டி.... "பெண்களே உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள்!" என்றார்...
அப்போது நம் கதாநாயகி, சொன்னார்: "நான் அமெரிக்காவுக்குப் போக வேண்டும்! அங்கு கல்வி கற்க வேண்டும்! முதலில் ஒரு இளங்கலைப் படிப்பு, அதன் பின் ஒரு முதுகலைப் படிப்பு, பின்பு எப்பாடுபட்டாவது ஒரு முனைவர் பட்டம்!" அவள் சிறிதும் தயக்கமின்றி இப்படிச் சொன்ன போது அந்த சமூக சேவகி மகிழ்ந்து ஊக்கப் படுத்தினார். "நீ உண்மையாகவே இதற்கு ஆசைப் படுகிறாய் என்றால், உன்னால் இவற்றை சாதிக்க முடியும்! இந்த ஆசைகளை மறக்காமல் உன்மனதில் அழுத்தமாக எழுதி வை! நிறைவேறும்!"

நம் கதாநாயகியின் தாய் இன்னொரு வழியைச் சொன்னார்: "உன் எல்லா ஆசைகளையும் கனவுகளையும் ஒரு கடிதமாய் எழுது... அதை மண்ணில் புதைத்து விடு! அதன் மேல் அடையாளமாய் ஒரு பாறையை வை! அப்படிச் செய்தால் உன் கனவுகள் வளரும்.... உன்னை அந்தப் பாறை மீண்டும், மீண்டும் அழைக்கும்!"

அதன்படியே அந்தக் கனவுகளை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி, ஒரு தகரத்தில் சுற்றி அவள் விதைத்தாள் மண்ணில்.... ஜிம்பாப்வே தேசத்தின் ஏதோ ஒரு மூலைக் கிராமத்தில் பிறந்து இன்று தன் திறமையாலும், தன் சுய முயற்சியாலும் தீராத நம்பிக்கையாலும் கனவுகளை விடாப் பிடியாகத் துரத்தி நிஜமாக்கிய டேரராய் டேரென்ட்.... முன்னேறத் துடிக்கும் எந்தப் பெண்ணுக்கும் சரியான முன்னுதாரணம்!

கீழுள்ள லிங்க்-கை பாருங்கள்..... "என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் இப்படியொரு கனவுகளின் பிரகடனத்தை நான்  கண்டதே இல்லை!"  என்கிறார் - ஒபரா வின்ப்ரே!

கனவுகளின் அற்புத தரிசனத்தை நீங்களும் தான் கண்டுணருங்களேன்....
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lANb0BAYupE


Courtesy: OWN
Courtesy: You Tube

No comments:

Post a Comment