Wednesday, 27 July 2016

யாருக்கும் வெட்கமில்லை!

ஏன் இந்த வாழ்க்கை இப்படி இருந்து தொலைக்கிறது?

முன்னால் வந்தால் முட்டவும் பின்னால் வந்தால் உதைக்கவும் இந்த மனிதர்களும் பழகிக் கொண்டது எப்போதிலிருந்து?

வையவன் அவர்களின் கதைமாந்தர்கள் போல, பிரபஞ்சனின் பாத்திரங்கள் போல விக்ரமனின் படங்களைப் போல நம்மிடம் பழகுபவர்கள் ஏன் ஒருபோதும் இருப்பதில்லை?!

ஒருவேளை நாம் அவ்வாறு இருக்க முயற்சித்தாலும் இந்தப் பாழாய்ப் போன மனக் குரங்கு நம்மை ஏன் அலைக்கழிக்கிறது? 

அன்பை மட்டும் யாசித்து நிற்பவனை கூசாமல் இளிச்சவாயன் என்று முத்திரை குத்தத் தூண்டுவது எது?

மென்மையும் தண்மையுமான ஓர் ஆணை 'பொட்டை' என்று போகிற போக்கில் சொல்லிப் போவது என்ன காலாச்சாரம்?

எந்தப் பாடப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்? பெருசு, கிழடு, சொம்பு, மொக்க... போன்ற இன்னும் எண்ணிலடங்கா, கைகள் எழுதத் துணியாத அந்த 'அமிழ்தினும்' இனிய சொற்களால் சக மனிதர்களை ஏசவும் பேசவும் கூடுமென்று?

பிள்ளைகள் முன்னிலையிலும் பொய் சொல்லும், சில சமயங்களில் பிள்ளைகளை விட்டேவும் கூட பொய் சொல்லச் சொல்லும் நாம் தான், இந்த தலைமுறையின் லஞ்ச ஊழல குறித்த புகார்க் குறிப்புகளை பக்கம் பக்கமாய் அலசுகிறோம்?

எப்போது சொல்ல மறந்தோம் நம் பிள்ளைகளுக்கு,
நம்பிக்கைத் துரோகமும்
நன்றி கெட்டத்தனமும் தான்
எல்லாத் தப்புகளுக்கும் ஆதி...
மற்றவை எல்லாம் மீதிதானென்று?

வெட்டரிவாளிலும் விவாகரத்துப் பத்திரங்களிலும் நம் குடும்ப கௌரவம் ஒளிந்து கொண்டது எப்படி?

விண்ணை முட்டும் சாதனைகளைப் படைத்ததாகப் பீற்றிக் கொள்ளும் நம்மவர்கள் தான் பெண்களை உடலாலும், மொழியாலும் செயலாலும் கொச்சைப் படுத்துகிறார்கள் என்பதை?

முட்டி நிற்கிற கோபத்தோடு திட்டும் போது, "நாசமத்துப் போக" என்று நல்ல தமிழிலும் நல்வாக்கிலும் கோபத்தை மிகக் கவனமாக வெளிப்படுத்திய நாம் தான் இன்று கொஞ்சமும் உறுத்தலின்றி உணவருந்தும் போது கூட, நொடிக்கு நூறு 'ஷிட்" சொல்லிக் கொண்டு நாகரிகப் பிரதிநிதிகளாகப் பவனி வருகிறோம் என்று?

சட்டத்தின் ஓட்டைகளையும் மனிதர்களின் மனப்பிறழ்வுகளையும் எல்லாவற்றுக்கும் காரணமாக்கி விட்டு உள்ளிருக்கும் ஓநாய் மனதுக்கு தினமும் கொலை கொள்ளை கற்பழிப்புச் செய்திகளைத் தின்னக் கொடு என்று எந்த வேதம் நமக்கு சொல்லிக் கொடுத்தது?

ஹும்....

இப்படி, அடுக்கடுக்காய் எல்லாத் தவறுகளையும் அறிந்தே செய்கிற நாம் தான், அடுத்த தலைமுறை உருப்படாது என்று மனமொப்பிச் சாபமும் கொடுக்கிறோம் --- மல்லாந்து படுத்து உமிழ்வதைப் போல....

வெட்கம்?
ம்...ஹும்?!

யாருக்கும் வெட்கமில்லை!

No comments:

Post a Comment