Wednesday, 27 July 2016

ரஜினியைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்....





ஒரு சினிமாவை -- வெறும் சினிமாவாக மட்டும் பார்க்க நாம் என்றைக்கு முன்வருகிறோமோ அன்று தான் நாம் சரியான மனிதர்களாக இருக்க முடியும்... பல கற்பிதங்களைக் கூறி, பல அடையாளங்களைத் தேடி, நமக்கான் ஆதர்சமெல்லாம் இந்த சினிமா எனும் ஆழ்கடலில் தான் கிடக்கிறது என்று நம்பி, என்றைக்கு நமக்கான விடியல்களை இந்த விட்டில் பூச்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கனவுகளை ஒழிக்கிறோமோ அன்று தான் நமக்கு நிமிர்வு! 



ரசனையை, கலைஞனைக் குறை சொல்லி, அதுவும் கபாலி ரீலிஸ் எனும் இந்தப் பீக் அவரில் ரஜினி ரசிகர்களின் வாயில் புகுந்து புறப்பட்டு -- அதன் மூலம் ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்கு ஆசைப்படும் பதிவல்ல இது...

என்றாலும் இந்த பிராண்ட், இந்த பிரமோஷன் இந்த அளப்பரைகள் எல்லாமே ரஜினியின் உயரத்தைக் குறைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது! பளீரென்று ஒரு மின்னலாக மட்டுமே அவரைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம் நாம்! அதானாலேயே அவர் தனக்குள்ளிருக்கும் பூரண சந்திரனை ஒளித்து வைக்க வேண்டிய நிர்பந்தமோ? 



ஏன் ரஜினிக்கு வயசாகாதா? இன்னமும் தன் மகளொத்த பெண்களோடு அவர் மரத்தை சுற்றி டூயட் பாடத்தான் வேண்டுமா? ஏன் வலிந்து நம்முடைய எதிர்பார்ப்புகளை ஒரு நல்ல கலைஞனின் மேல் திணித்து அவரை இது போதும் உனக்கு என்று வரையறுத்துக் கட்டிப் போடுகிறோம்? எனக்கென்னவோ தெற்கில் தான் இத்தனைக் குளறுபடிகளும் என்று தோன்றுகிறது... வடக்கில் அமிதாப், ஷபானா ஆஸ்மி ஆகியோரெல்லாம் தத்தம் கிரீடங்களைக் கழட்டி வைத்து யதார்த்தத்துக்கு வந்து விட்டார்கள்.... தங்கள் வயதுக்கும் ஆளுமைக்கும் பொருத்தமான ரோல்களை ஏற்று பட்டையைக் கிளப்புகிறார்கள்... ரஜினிக்கும் அந்த ஆசை -- நல்ல கதா பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்கிற ஏக்கம் இருக்கலாம்! ஆழக் குழி தோண்டி அதையெல்லாம் புதைத்து விட்டு இந்தக் கட் அவுட் பாலாபிஷேகததைத் தானா அவர் அண்ணாந்து பார்க்கப் போகிறார்? 

தயவு செய்து ரஜினியை ரஜினியாக மட்டுமே பார்க்கவும் ஏற்கவும் (ரஜினி என்றில்லை, எல்லாரையுமே...) நாம் முன்வர வேண்டும்! அவருக்கான உயரம எதுவென்று அவரும் கடவுளும் எப்போதோ முடிவு செய்து விட்டார்கள்... என்னுடைய ஆதங்கமெல்லாம் அவரை அத்தனை பெரிய உயரத்திலிருந்து நாம் நம் ரசனை, வெறி என்ற பெயரில் ஏன் கீழே தள்ள வேண்டுமென்பதே???

முள்ளும் மலரும், அவர்கள் போன்ற படங்களைப் பார்க்கும் போதெல்லாம் நாம் எவ்வளவு பெரிய கலைஞனைத் தொலைத்திருக்கிறோம் என்ற வருத்தமே மிஞ்சுகிறது....

ரஜினியைக் காப்பாற்றுங்கள்... ரஜினி என்ற பிம்பத்திடமிருந்தே! !! ப்ளீஸ்.....

21-07-2016 அன்று முக நூலில் பதிவிட்டது. 

No comments:

Post a Comment