"போ.. டிஈஈ.... வெறுமனச்சி"
முக நூலில் பதிவிட்டது தான்.
மருத்துவர் ரோகிணி கிருஷ்ணா அவர்களுடைய பதிவொன்றில், தஞ்சைக்கு வெகு அருகில் திட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலைப் பற்றி எழுதிய கையோடு, கூடவே உண்மையான பக்தி என்பது என்ன? அது எப்படிப் பட்டது என்ற விவாதத்தையும் துவக்கியிருந்தார். உழைப்பும் சகமனிதனின் மேல் உள்ள பரிவுமே தெய்வ பக்தி என்பது அவர் கொள்கை.
என்னுடைய கருத்துமே அதுதான்... ஆனால் என்னுடைய இந்தக் கருத்துக்கு வித்திட்டவர் என் பாட்டி... பெரிதான தெய்வ உபாசனை என்று ஏதுமில்லை.. மந்திரம் யந்திரம் எதுவும் தெரியாது... பிள்ளையாருக்கு ரெண்டு, அம்பாளுக்கு ரெண்டு, சிவனுக்கு ரெண்டு விஷ்ணுக்கு ஒன்று, முருகனுக்கு ஒன்று ஆஞ்சநேயருக்கு ஒன்று என்று சிற்சில ஸ்லோகங்கள்... இது போறும் அவளுக்கு... அவளுடைய கணிப்புப் படி, அந்தந்த தெய்வங்களுக்குமே கூட போதும், நித்தியப்படி குளித்து பூஜை வேளையில் சொல்ல, ஆராதிக்க......
பாட்டியின் பக்தியும் வழிபாடும் ஒரு தினுசானது... கைகூப்பி, கண்மூடி என்பதெல்லாம் நானறியேன்...வாய் தான் ஸ்லோகம சொல்லுமே தவிர, கண் நண்டும் சிண்டுமான பேரப் பிள்ளைகள் என்ன செய்கின்றன, எதைப் போட்டு உடைக்கின்றன என்பதை நோட்டம விட்டுக் கொண்டே தான் இருக்கும். மூக்கு அடுப்பில் ஏதும் தீய்கிறதா, காந்துகிறதா என்று அங்கேயே கூடாரம் போட்டதும் இல்லாமல், "என்னமோ இந்த பத்தி பாக்கெட் நல்லாயில்லை.... பூப்படம் தான் போட்டிருக்கான், இருந்தாலும் ஒரே அழுகல் வாடை... மாத்தணும்! இந்த நாத்தம் பொறுக்காம சுவாமி தேசாந்திரம் போயிடுவார் அப்புறம்!" -- என்று கமென்ட் அடிக்கும்!
ஆடி வெள்ளி, தை செவ்வாய் என்றால் கண்டிப்பாக எதாவது ஒரு ஸ்பெஷல் நைவேத்தியம் உண்டு சுவாமிக்கு! சுவாமி பேரில் எங்களுக்கு! "ஐ, கொழுக்கட்டை, என்றோ... ஓ, இன்னைக்குப் புள்ளையார் பால் கொழுக்கட்டைன்னு மெனு சொல்லிட்டாரோ?" என்று பேரப்பிள்ளைகள் ஆசையும் கிண்டலுமாக வந்து நின்றால் பாட்டி திருக், புருக்கென்று வாசலையும் அடுப்படியையும் ஒரு தரம் பார்ப்பாள்... அடுத்த கணம், எங்கள் கையில் ஆளுக்கொரு மோதகம் இருக்கும்... "ஒடுங்க... அவ்வளவுதான்... அம்மா சத்தம் போடுவா!" என்பதை கண்களாலும், கையாலுமே ஜாடை காட்டியே, வெளியே அனுப்புவாள்! அபிநய சரஸ்வதி...
"அடக் கடவுளே, முகம் கைகால் கூட அலம்பலை... இதுங்களுக்கு இதே வேலையாப் போச்சு... எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான்.. பத்து நிமிஷம் பொறு; நைவேத்தியம் பண்ணிட்டு தரேன்னு சொன்னா என்ன?" -- என்று அம்மாவோ, அத்தையோ, சித்தியோ அலுத்துக் கொண்டால், "நல்லாயிருக்கே.... பிள்ளைக்கு இல்லாதுதான் பிள்ளையாருக்கா? சுவாமி ஒன்னும் அப்படிப்பட்ட கறார் பேர்வழி இல்லை! அவருக்கு ஒரு அச்சு வெல்லமே போதும்...பூரணக் கொழுக்கட்டை பண்ணு... பச்சைப் பயறுத் தண்ணி வையின்னு அவரா கேக்கிறார்? சொல்லு?"
கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டு மறு ஈடு கொழுக்கட்டை செய்யத் தயாராவார்கள் அவர்கள்... இது தான் பாட்டி... அவளுடைய பத்தியும் பக்தியின் நிமித்தமும் மனிதம் மட்டும் தான். பரஸ்பர சிநேகம் தான்.. அவளோடான ஒரு உரையாடலைக் கொஞ்சம் பட்டி பார்த்து டாக்டர் ரோகிணி கிருஷ்ணா அவர்கள் போஸ்டுக்குப் பின்னூட்டமாக பதிவு செய்தது தான் இது...
" இது என்ன? மத்த மாதிரியா? கலியுகம்! அம்பாள் அன்னு கண்ட மேனியா அப்படியே சர்வாலங்காரியா வந்து நமக்குக் காட்சி கொடுக்கிறதுக்கு?! அவளுக்குத் தெரியும்!! மனுஷ மனசு முன்னைப் போல இப்ப இல்ல... சூதும் கபடுமாக் குழம்பிக் கெடக்குன்னு!"
"அப்பன்னா, கலியுகத்துல அம்பாள் நம்மகிட்டே வரவே மாட்டாளா பாட்டி?"
"ஏன் வராம? எந்நேரமும் வரா... பத்துப் பொம்மனாட்டிகள்ல ஒருத்தியா, கண்டிப்பா வரத்தான் வருவா அவ!! என்ன பண்ண போறமோன்னு தவிச்சுட்டு நிக்கிறப்போ அசரீரி மாதிரி ஏதாவது ஒரு வார்த்தை.. ஒரு வாக்கியம்... நமக்கே நமக்குன்னு தோணறாப்பில ஒரு சொலூஷனா வந்து விழும் பார்! அவனா சொல்றான் அதை? அவன் மூலமா ஸ்வாமி தான் சொல்றார்! உத்து கவனிச்சியானா உனக்கும் இந்த நிமித்தமெல்லாம் புரியும்!"
"என்ன தான் சொல்ல வரே நீ?"
"பெருசா என்னத்த? எனக்கு எங்கம்மா சொன்னதுதான்!!! தெய்வம் மனுஷ்ய ரூபானாம்! புரிஞ்சுதா?"
நான் ஒரு மாதிரியாக தலையசைத்து வைத்தேன்..
"வேற ஒண்ணுமில்லைடி பாப்பா... மனுஷாளைக் காக்க வைக்கப் ப்டாது! நோகடிக்கப் ப்டாது! தூஷன்யமாப் பேசப் ப்டாது! பொய் புரட்டு அக்கப்போர் ஆகாது... இதெல்லாம் தான்! வாசல்ல ஒரு பெண்ணு தவிச்ச வாயோட காத்திருக்கும் போது நீ பாலும் பானகமுமா நைவேத்தியம் பண்ணாலும் புண்ணியமில்லைங்கிறேன்!!! கரெக்டுதானடீ?!"
"நீ சொன்னா எல்லாமே கரெக்டுதான் பாட்டி! அவள் வெற்றிலைப் பெட்டியைத் துழாவினேன்.
"என்னடி சொன்னாங்க பாட்டி?" எங்கம்மாவும் இப்போது சேர்ந்து கொண்டார்.
"அதுவா - கவிஞர் மனுஷ்ய புத்திரன்ந்தான் தெய்வம்னு அடிச்சு சொல்றாங்கம்மா!" - சிரிக்காமல் சொன்னேன் நான்!
பாட்டி திகைத்துப் போய் நின்றாள்..
"என்னடி இது?"-- பாட்டி திருதிருவென்று விழிக்க, நான் உடனே மாற்றி சொன்னேன். " த்சு! தப்பு.. தப்பு.. தெய்வம் மனுஷ ரூபானாம்னா ஒருவேளை ரூபா நோட்டுதான் தெய்வம்னு சொன்னியோ பாட்டி?!"
பாட்டிக்கு புரிந்து போயிற்று!
அலுங்காமல் சொன்னால், "போடி.....ஈஈஈ.... வெறுமனச்சி.,.!!"
😀😁😂😊😇😃☺
No comments:
Post a Comment