கட்டமைப்பான உடலும், நேர்த்தியான உடையும்,
சுண்டி இழுக்கும் கண்களும், சுழித்து அழைக்கும் அந்த உதடுகளும்...
குரலில் வந்தமரும் தனிக் குழைவும்
ஒரு மனமகிழ் மன்றத்தின்
இளம் கூத்துக்காரியைப் போல நீ
எல்லோர்க்குமாக ஆடத் துவங்குகிறாய்!
நாளின் தொடக்கம் தொட்டே....
அந்த மன்றத்தின் காவலாளியைப் போலவே நானும்...
வருகின்ற விரைகின்ற வண்டிகளின் கண்ணாடிகளுக்கும்
அதிலாடும் நிழலுருவங்களுக்கும்
குத்துமதிப்பாக ஒரு வணக்கம்...
என் பங்களிப்பு அவ்வளவே!
உன் ஒற்றைக் கையெழுத்தின் விலை
டாலர் மதிப்பைப் போல ஏறுமுகமாகவே இருப்பதிலுள்ள
பேரானந்தமும் கர்வமும் புரியாமலில்லை எனக்கு!
ஆளும் வர்க்கமெல்லாம் கோடிகளில் பேரம் பண்ண,
உன்னால் ஆயிரங்களை மட்டுமே தேற்ற முடிவதில்
அத்தனை தெய்வங்கள் பேரிலும்
உனக்குள்ள காழ்ப்புகளை நான் அறிவேன்!
அன்றைய ஆட்டம் ஓய்ந்த்தும்,
அன்பளிப்பென்றும் காணிக்கையென்றும்
உன் கைப்பையிலிருந்து கத்தையாய்
அள்ளிப் படுக்கையில் போட்டு
மறுபடியும் எண்ணிச் சரிபார்க்கிறாய் நீ!
சற்று அலட்சியமாகவே!
உன் அருகாமையில் தப்பாமல் பீறிடும் என் அருவருப்புகளும்,
நம் பதினோரு வயது மகளின் கைப்பையில்
சத்தமின்றி எட்டிப் பார்க்கும் காதல் கடிதமும்,
விடிய விடிய வெளிச்சம் உமிழும்
நம் மகனின் கைப்பேசித் தொடு திரையும்,
பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கின்றன...
படியாத பேரங்களும் உண்டென்பதை...
காலம் மிகக்கவனமாய்க் கணக்குத் தீர்ப்பதை...
அனுதினமும் நம் வாழ்க்கை சோரம் போவதை...
ஆழ்ந்த இரங்கல்களோடு ஆண்டவன் வேடிக்கை பார்ப்பதை....
பி.கு: இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து எனச் சொல்லத் திராணியற்ற
எல்லோருக்கும் சமர்ப்பணம்!


No comments:
Post a Comment