Monday, 22 June 2015

ஒரு பிரளயத்தின் நடுவே ...

ஒரு பிரளயத்தின் நடுவில்
பூத்த புதுமலர் போல
நிற்கிறது அந்த ரயில் .... 




திறந்து கொட்டுகிற வானில்
நடுநடுவே கீற்றாக ஓடும் அந்த மின்னல்கள்
பளீரென்று காட்டி மறைகின்றன
உடைந்த தண்டவாளங்களை, 
பாலத்தின் இடிந்த சுவரை,
விளிம்பில் ஊசலாடும் மிச்சப் பெட்டிகளை... 



அந்த நதிவழி நனைந்து கரைந்து போகும்
உயிர்கள் ஒருபோதும் அறியப் போவதில்லை ---
அதோ, அந்தக் கடைசிப்பெட்டியிலிருந்து குதித்து
தண்டவாளங்களுக்கு மத்தியில் தப்பி ஓடிப் பிழைத்தவன் தான் 
இந்த ரயிலுக்குக் கொடிகாட்டியவன் என்று!

ஒரு பிரளயத்தின் நடுவே
காற்றில் கிழிபட்ட புது மலர்போல்

நிற்கிறது அந்த ரயில்... 
ஊமைசாட்சியாக... 

நன்றி: கூகுள் படங்கள் 

No comments:

Post a Comment