Wednesday, 10 June 2015

வெந்நீர்

என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அலுவலகம், வீடு இரண்டையும் அழகாகச் சமாளிப்பவள். கூடவே பல்வேறு கைவேலைகளையும் செய்யும் திறன் படைத்தவள்.. அவள் வீட்டின் சுத்தமும் அழகும் என்னைக் கவர்ந்தன; மாடுலர் கிச்சன், அசத்தலான வார்ட்ரோப், நவீன வேலைப்பாடுகளுடன் உணவு மேஜை என்று எத்தனையோ இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது அவர்கள் வீட்டின் சமையலறையில் வைத்திருந்த வாட்டர் ஹீட்டர் தான். ஹீட்டரைப் பாத்ரூமில் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு, இது கொஞ்சம் 'சூடான' ஆச்சர்யம்!

“வாஸ்து படி வைச்சிருக்கியா?” – என்று கேட்டதற்கு, கலகலவென்று சிரித்தவள், “வேணும்னே தான் வெச்சிருக்கேன்...” என்று அதற்கான காரணங்களையும் அடுக்க ஆரம்பித்தாள்.
காலையில் எழுந்து சாமி விளக்கு ஏற்றுகிறாளோ இல்லையோ, முதலில் இந்த ஹீட்டர் ஸ்விட்சைப் போட்டு விடுவாளாம். ஆரம்பமே டிஸ்-இன்பெக்ஷன் தான்! நன்றாக கொதித்த இரண்டு கப் நீரில் ரெண்டு டேபிள் ஸ்பூன் கல் - உப்பைக் கலந்து சமையலறை சிங்கிற்கும், வாஷ்பேசினுக்கும் ஊற்றுவதால், சின்னப் பூச்சி, கரப்பு போன்ற தொல்லைகளும், துர்நாற்றமும் அடைப்பும் இல்லவே இல்லை.
அடுத்ததாக, பில்டருக்கு, புளி ஊற வைப்பதற்கு, இட்லி பாத்திரத்திற்கு, குக்கருக்கு,  பால் காய்ச்சுவதற்கு, பருப்பு, அரிசி இரண்டையும் களைந்து (மதிய சாப்பாட்டிற்காக) குக்கரில் வைப்பதற்கு முன் சிறிது நேரம் ஊற வைப்பதற்கு, இடையில் அவள் கணவருக்கு கிரீன் டீ, பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸ் --- இப்படி சகலத்துக்கும் வெந்நீர் தான்.. சமையல் நேரம் சட்டென்று குறைகிறது. ஒரு சிலிண்டர் எடுத்தால் எப்படியும் 55 நாட்களுக்கு வருகிறது என்றாள். (இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் ஆறு பேர். கூட்டுக் குடும்பம் தான்.)
“தேவலாமே, நல்ல ஐடியாடி!,” என்று பாராட்டிய போது, “நாங்க எல்லோருமே இந்த வெந்நீரைத் தான் குடிக்கிறோம்.. சளி ஜுரம் இன்பெக்ஷன் இதெல்லாம் ரொம்ப வரதே இல்ல... கொதிநிலையிலேயே தண்ணீர் நீண்ட நேரம் இருப்பதால் (குறைந்தது நாலு மணி நேரம்) மாமனார் மாமியார் சாப்பிட, நான் இல்லாவிட்டாலும் அவர்களாகவே ஒரு கஷாயம், சுக்குக் காப்பி போன்றவை போட்டுக் கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கிறது என்றாள். ஞாயிறன்று கணவருடன் போய் அந்த வாரத்திற்கான காய்கறிகளையும், பழங்களையும், மளிகையையும் வாங்கி வந்தவுடன், முதல்வேலையாக, காய்களையும் பழங்களையும் ஒரு டீஸ்பூன் உப்பு கலந்த வெந்நீரில் போட்டு கால் மணி நேரம் கழித்து சுத்தமாகத் தேய்த்து அலம்பி, காயவைத்து அதன் பிறகே பிரிட்ஜில் வைப்பேன் என்றாள்..
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உலர்ந்த திராட்சை, முந்திரி என்று எதை மளிகைக் கடையில் வாங்கினாலும் அதையும் கூட வெதுவெதுப்பான நீரில் கழுவிக் களைந்து காயவைத்தபின்பு தான் பயன்படுத்துவாளாம். (அம்மாடி!)
மேலும், சப்பாத்தி மாவு பிசைய, இடியாப்ப மாவு பிசைய, கைக்குழந்தைகளின் பாட்டில்களைக் கழுவ, ஓட்ஸ், நூடில்ஸ் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸ் தயார் செய்ய, ரவை, சேமியா, அரிசி உப்புமாக்களுக்கு வேண்டிய தண்ணீர் சேர்க்க... எல்லாமே இந்த வெந்நீர் தான்...
மதியம் சாப்பிட்டு விட்டு இளஞ்சூடாக இருக்கும் மிச்ச நீரைப் பிடித்து அதில் பால் பாக்கெட்டைப் போட்டு விட்டால், கட்டியாக உறைந்து போயிருக்கும் பால், மாலை காப்பிக்குத் தயாராக இருக்கும்...
பொடியாக நறுக்கிய காய்களை நன்றாகக் கொதித்த நீரில் போடும் போது அவை சட்டென்று வெந்து விடுவதால் தினமும் ரெண்டு காய்கறிகளோடு என்னால் எளிதாக சமைக்கமுடிகிறது என்றாள்..
இது தவிர குடிப்பதற்கென்று பிடித்து வைக்கும் தண்ணீரில் (வெந்நீரே தான்!) சீசனுக்குத் தகுந்தாற்போல் ஒரு ஸ்பூன் சீரகமோ, சுக்குப் பொடியோ, அல்லது ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகோ போட்டுக் கொள்வார்களாம்.... சுலப வைத்தியம்!
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளி ஆகியவற்றைச் சாறு பிழியும் முன் பத்து நிமிடங்கள் வெந்நீரில் போட்டால், எளிதாகவும் இருக்குமாம். சாறும் நிறைய காணுமாம்.
சூப், ப்யூரி போன்றவை செய்வதற்கு தக்காளிகளைக் கழுவி, கொதிக்கும் வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டுவிட்டு உடனேயே குளிர்ந்த நீரிலும் போட, தோல் தானாக எளிதில் உரிக்க வருமாம்.
“இன்னும் யோசிக்க, யோசிக்க, எவ்வளவோ செய்யலாம்... வெந்நீர் அவ்வளவு நல்லது!” என்றாள்.
“கரெண்ட் பில்?! அதை எப்படி ... ?” – இழுத்தேன்.
“கரெண்ட் பில்லை எப்படியும் நாம கட்டிடுவோம்... ஆனா, கேஸ் சிலிண்டருக்குத் தானே இப்போ அல்லல்? தவிர, லாரி ஸ்ட்ரைக், ஸ்டாக் இல்லை, அது இதுன்னு மாசத்துக்கொரு பூதம்... இல்லையா? அதோட, ஒரு சிலிண்டரே பத்து நாள் எக்ஸ்ட்ரா வரும்! ஏற்கெனவே கொதிக்கிறதுல சமைக்கிறதுக்கும் புதுசா ஒவ்வொரு முறையும் கொதிக்க வெச்சு சமைக்கிறதுக்கும் – எவ்வளவு வித்தியாசம் உண்டு தெரியுமா? நீயும் செய்து பார்... நேரம், எரிபொருள் மிச்சமாகும்... சுத்தமும் ஆரோக்கியமும் எப்பவும் இருக்கும்!” என்றாள்.
நிஜம் தான்! இத்தனை சுலபமாக, சிக்கனமாக, சிக்கென்று வேலையை முடிக்க முடியுமென்றால், நாம் ஏன் இதை முயற்சி செய்யக் கூடாது? சொல்லுங்கள் தோழிகளே!

(பின் குறிப்பு: வெந்நீர் மகாத்மியம் இந்த அன்றாடப் பணிகளுக்கென்றும் –வேலையைச் சுலபமாக்கிக் கொள்வதற்கு என்றும் எளிதாக எடை போட்டு விடாதீர்கள். இன்டர்நெட்டில் வெந்நீரின் மருத்துவப் பயன்கள் கொட்டிக் கிடக்கின்றன தோழிகளே...) 

No comments:

Post a Comment