Tuesday, 3 March 2015

பூப் பறிக்கப் போகிறேன்....









என்  சந்தோஷக் கூவல்கள்
உனக்கு எப்போதுமே
சங்கடங்கள் ....


என் சின்ன சின்ன விருப்பங்கள் எல்லாம்
மண்டியிட்டுக் கிடக்கின்றன ....
உன் மேதாவிலாசத்தின் முன்!


ஜன்னல் வெளிச்சம் படாமலும்,
சிறு பறவையின் சப்தம் கேட்காமலும்
உன் பொழுதுகள்
விடிவதையும் முடிவதையும்
அதிர்ச்சியாய்ப் பார்த்திருக்கிறேன் நான்....


மீன் குஞ்சைக் கொன்று
கூர் பார்த்துக் கொள்ளும்
பூனை நகம் தனை எவ்வாறு எளிதாய் ஏற்க?  






ஆடி ஒய்ந்திட்ட அறுபதுகளில்
உனக்குக் கழிக்கப் பொழுதிருக்கும்.....
என் பொருட்டு
செவியோடு சேர்ந்து மனதையும்
திறந்து வைக்கும் ஆற்றல் வைக்கப் பெறும்....
மூன்றாம் பிறைகளென
உன் நல்ல நல்ல ரசனைகளை
அள்ளிச் சுமந்தபடி நீ அன்று
என் வாசல் தேடியும் வரலாம்....



என்றாலும் நான் அன்று
அந்நியப்பட்டுப் போவேன்....  

தினம் தினம்
உன்னிடம் சொல்லப் படாமலே
செல்லரித்துப் போகும்
என் சின்ன சந்தோஷங்கள்...  


பொன்னூஞ்சல் எனவே
எதோ ஒரு உயரத்தில்
ஊசலாடிடும் நம் பகிர்வுகள்...
விரிந்து பரபரக்கும் இடைவெளிகள்...
வேதனைகள்...
இன்று என்னைத் தின்று கொல்லும்
தீவிரத் தனிமையை நான் என்ன செய்ய?



போகட்டும்...
புரிதல்கள் இல்லையென்றாலும் கூட,
தேங்கி விடுவதில்லையே வாழ்க்கை!...



அதனாலென்ன?
என்றும் போல் நீ தொலைக்காட்சியைக் காதலி....
மடிக் கணினியோடு மருகிப் போ!
தினசரிகளோடு திவ்யமாய்ப் பொழுது போக்கு....



நான் பூப் பறிக்கப் போகிறேன்... 


அடுத்த ஜென்மத்திலாவது
உயிரோடு சேர்த்து உயிர்ப்பையும் கொடு
என் ஆண்டவனே என இருவருக்குமாய் வேண்டிட.... 




படங்கள் உதவி: கூகுள். 

No comments:

Post a Comment