Tuesday, 3 March 2015

ஒரே கேள்வி!



வினாத்தாள் கையில் கொடுக்கப் பட்டதும் எல்லோருக்கும் ஒரு சின்ன பரபரப்பு தொற்றிக் கொண்டது. இன்னமும் பரீட்சைக்குப் பயந்த பிள்ளை போல் உட்கார்ந்திருக்கும் தன்னைப் பர்ர்த்துத் தானே சிரித்துக் கொண்டாள் ரேகா. அந்த நீளமான பெரிய ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியபடி, கேள்வித்தாள்களை வினியோகித்துக் கொண்டிருந்த ஷிவ்ஷங்கர் – ஒரு பெரிய ஜாம்பவான்! நம்பிக்கைவாதி! ‘நம்புங்கள்! நல்லதே நடக்கும்!’ என்ற தலைப்பில் உலகெங்கும் பறந்து பறந்து சொற்பொழிவாற்றும், வழிகாட்டும் மேதை! அவர் தயாரித்துள்ள கேள்வித்தாள்..

கூட்டம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை! எண்ணி இருபதே பேர்! பயிலரங்கத்திற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரின் மீதும் தன் ப்ரத்யேக கவனம் இருக்க வேண்டும் என்பதில் ஷிவ்ஷங்கர் எப்போதுமே பிடிவாதமாக இருப்பார்..  எனவே எல்லாருடைய பதில்களும் அங்கே விவாதிக்கப் படும்!

“ஓ.கே, நண்பர்களே! நீங்கள் இப்போது உங்கள் கேள்வித் தாளைத் திறக்கலாம்!” – என்றவுடன் மிக ஆவலாகப் பிரித்த அத்தனை பேரின் முகத்திலும் குழப்பமும் ஏமாற்றமும். ரேகாவிற்கு, சிரிப்பே வந்து விட்ட்து!
பின்னே? ‘வழவழ’ என்ற ஒஸ்தியான ஏ4  பேப்பரில் எண்ணி ஒரே ஒரு கேள்வி! “இந்த உலகில் நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் யார்?”  இந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்க அவர் தாராளமாகப் பதினைந்து நிமிடங்களை வேறு ஒதுக்கியிருந்தார்!
ஹால் ஸ்தம்பித்துப் போனது! கேள்வியைக் கையில் எடுத்த பிறகுதான் அதன் ஆழமும் அகலமும் மலைக்க வைத்தது! இந்த ஒற்றைக் கேள்வியால் தங்கள் வாழ்க்கையையே ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்தியிருந்தார் ஷிவ்ஷங்கர் என்பதை ரேகா உணர்ந்தவளாய் யோசிக்கத் தொடங்கினாள்!


“சரி, நண்பர்களே! எங்கே, உங்கள் பதில்களை ஒவ்வொருவராய்க் கூறுங்கள்!”என்று முதல் வரிசையிலிருந்தவனிடம் மைக்கைக் கொடுத்தார் ஷிவ்.
“என் அம்மா!’
“என் ஆசிரியர்!”
“என் குழந்தை!”
“என் மனைவி!”
ஒருவன், “எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்வீட்டில் ஒருத்தனாக இன்று வரை இருக்கும் என் தோட்டக்காரன் தான்!” என்று கூடச் சொன்னான்.
ஷிவ் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் மிக கவனமாக எல்லா பதில்களையும் கேட்டுக் கொண்டு வந்தார். இப்போது ரேகாவின் முறை.



ரேகாவிற்கு என்றுமில்லாத பதற்றம் இன்று ஒட்டிக் கொண்ட்து! முன் வரிசையில் சொன்னதையேத் தானும் திருப்பிச் சொன்னால் என்ன என்று அவள் யோசித்த போது, ஷிவ் அவளருகே வந்து அவள் கையில் வைத்திருந்த தாளைப் பிடுங்கிக் கொண்டார்.. “எஸ், மேம்... “ என்றார் அவளைப் பார்த்து...
“சார்.. என் வாழ்க்கையில் நான் மிகவும் ஆழமாக நேசிக்கும் ஒரு நபர்... நான், மிஸ். ரேகா தான்!”
“சீரியஸ்லி?”
“யெஸ் ஸார்!”
“வொய்?” – கூட்டம் நமட்டுச் சிரிப்பைச் சிதறவிட்டபடி ஆர்வமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த்து.
“சார், என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கை, எனக்கு எப்படிக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை விட, நான் அதை எப்படி ஏற்றுக் கொள்கிறேன் என்பதை வைத்தே என் சுக துக்கம் அமையும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். அதனால் தான் நான் என்னை மிகவும் நேசிக்கிறேன், என்னையே நான் தீவிரமாக நம்புகிறேன்... “ படபடப்பாய்ச் சொல்லி முடித்தவளை ஏறிட்டார் ஷிவ்!
“ஸோ, அவங்க சொன்னதெல்லாம்??” யூ மீன் தே ஆர் ராங்?”
“இருக்கலாம் சார்! ‘என்’ மனைவி, ‘என்’ ஆசிரியர், ‘என்’ குழந்தை, ‘என்’ அம்மா என்றால்? இவை அத்தனையும் தன்னை முன்னிலைப் படுத்துகிற உறவுகள் தானே! பைபிளில் கூட, “தன்னைப் போல் பிறரையும் நேசி!”ன்னு தானே சொல்றாங்க சார்..?”
“அப்படின்னா?”
“தன்னைத் தானே நேசிக்காத ஒருத்தன் இந்த பூமியில் இருக்க முடியாதுங்கிறது உண்மைதானே சார்!”
“ஃபன்டாஸ்டிக்! உன்னுடைய பதிலில் இன்றைய என் முழு செமினாரும் அடங்கிடுச்சு! வாழ்த்துக்கள்... வாழ்க்கையைப் பற்றிய உன் புரிதல் மிக அபாரமானது!” என நிறைவாய்ச் சொன்னவரைப் பார்த்துச் சந்தோஷமாய்ச் சிரித்தாள் ரேகா! 

நன்றி: கூகுள் படங்கள். 

No comments:

Post a Comment