Saturday, 21 March 2015

ஒரு கத்தியின் கூர்முனையில் ....


ஒரு கத்தியின் கூர்முனையில்
நின்றபடி
உன்னையே நான் பார்த்திருக்கிறேன்...


அபாயம் என
எதிர்ப்புக் குறிகளுக்கிடையே
வாய்பிளக்க எச்சரிக்கும் அந்த மண்டையோட்டையும்
நான் அலட்சியமாய்க் கடக்கிறேன்... உன் பொருட்டே...

பாதங்கள் கிழிபட்டு
வேகமாக ஊற்றெடுக்கும் குருதி வெப்பம்
உணர்ச்சியில் பதிந்தாலும் உள்ளத்தில் உறைக்கவில்லை...
இலக்கின்றி இடைவிடாது பயணிக்கும்
எண்ணங்களில் அடிநாதமாய் நீயிருப்பதால் போலும்...

பிறிதொரு பொழுதில் பிறிதொரு நாளில்
சாவகாசமாய் மருந்திட்டுக் கொள்வேன்...
என் காயங்களுக்கு மொத்தமாகவும்... நிரந்தரமாகவும்....

எந்த விடைபெறுதலும் இன்றி
 திடீரென்றுதான்  நீ
கிளம்பிப்போகிறாய்...
இரக்கமின்றி

ரகசியமாய் நான் உனக்குக் கொடுத்த
கடிதங்களும், முத்தங்களும்
முகஸ்துதிகளும் வாழ்த்து அட்டைகளும்
வாங்கித் தந்த பரிசுகளும்
அவைகளோடு நேசம் ததும்பிய
என் இதயமும்கூட – என்னை ஒருவேளை உனக்கு
நினைவுபடுத்த மறந்து போகலாம்....

உன் நிராகரிப்பின் கூரியக் கத்தி முனையின் மீது
பாதங்களில் குருதி வழிய
பார்த்திருக்கும் என் முகம்
உன்னை யுகயுகமாய்த் துரத்தும்....

உனக்கான என் நினைவுப் பரிசும் கூட
அதுவாகவே தான் இருக்கும்!!! ...
வாழ்த்துக்கள்!

நன்றி: கூகுள் படங்கள்.

No comments:

Post a Comment