Monday, 1 December 2014

அக்கா என்றொரு பொம்மைக்காரி

அக்கா என்றொரு பொம்மைக்காரி
--------------------------------------------------------
தின்பண்டம் தீர்ந்ததும்
பிள்ளைகள் எறிந்து விடும்
அந்த வழவழப்பான ஜொலிக்கும் காகிதங்களை

நன்கு துடைத்து நீவி
கனமானதொரு புத்தகத்தின் அடியில் வைத்துப்
பக்குவப்படுத்துகிறாள் அக்கா...

நாங்கள் எல்லோரும்
கண்ணயர்கிற நேரத்தில் --
விடிவிளக்கின் சன்ன வெளிச்சத்தில்
அந்தக் காகிதங்களை
பூக்களாகவும், பொம்மைகளாகவும்,
ஜொலிக்கும் நட்சத்திரங்கள் போலவும்
உருமாற்றி வைத்திருப்பாள் --
என் பிள்ளைகளுக்காக.

தாளாத மனவருத்தத்துடன் ---
"சின்னக் காகிதத்தைக் கூட
வீணாக்காத இவங்க வாழ்க்கையையே
அந்த சாமி வீணாக்கிட்டுதே!
பாழும் தெய்வம்!" என்று
என் மனைவி கரைந்த போது
அக்கா,
"இந்தக் காகிதம் என் கையிலிருக்கிறது...
என் தீர்மானங்களுக்கும் ஆசைகளுக்கும்
மடிந்தும் வளைந்தும் கொடுக்கிறது...
ஆனால் என் வாழ்க்கை, அப்படியா?"
என்றாள் சலனமின்றி! 

தென்பட்ட கடையொன்றில்
நிறைய கலர்ப் பேப்பர்களை
ஜிகினாத் துகள்களை
ஜொலிக்கும் காகிதங்களை
மறக்காமல் வாங்கிக் கொண்டேன்....
கனத்த மனதோடு... .

நன்றி:  முகநூல் 
நன்றி: கூகுள் படங்கள் . 

No comments:

Post a Comment