சப்தங்கள் தேய்ந்து
பூசிக் கொண்டு
நிற்கிறது வீடு.
கூவல்கள்,
வானொலிப் பெண்,
தொலைக்காட்சியில் ஆழ்ந்து
அதிரச் சிரிக்கும் நீ,
இருட்டைக் கிழிக்கும் உன் இருமல்,
அடுத்த வீடு கூட அறியும் --
நீ காப்பி ஆற்றும் நேரம்!
நீ திரும்பிய பின்னும்
நீண்ட நேரம் சொட்டிக் கொண்டே இருக்கும்
கழிப்பறைக் குழாய்...
கைத்தடியை அழுத்தி ஊன்றி
ரப்பர் செருப்புகள் ஒருபக்கமாய் இழுபட,
தள்ளாடும் உன் நடையின் ஒலி....
இதேதுமற்ற
மௌனப் போர்வையில்
வித்தியாசம் கூடிப் போனதொரு வீடு!
அப்படியே கிடக்கிறது நாளேடு,
உன் போல்-
மின்சாரத்தொடு போட்டிபோட
என் சம்சாரத்துக்குத் தெரியவில்லை...
குழாயில் பிரவஹிக்கிறது வெறும் காற்று!
செடியில் காய்ந்து தொங்குகின்றன பூக்கள்...
தமக்குத் தாமே அஞ்சலி செய்து கொண்டு!
தூசு படிந்து கிடக்கிறது பூஜையறை...
அடர்ந்த வெறுமைக்கு
இடம் கொடுத்தபடி உன் சாய்வு நாற்காலி
தவறி நான் அதில் அமர்ந்தாலும்
சத்தமாய்க் கிறீச்சிட்டு தன் எதிர்ப்பைப்
பதிவு செய்கிறது!
காற்றில் புரண்டு கொடுத்து
உன் இன்மையை விமர்சிக்கின்றன
தோட்டத்துச் சருகுகள்...
விரல் சப்பியபடி விழிகளில் ஏக்கம் தேக்கி
உன் கதைகளுக்காகக் காத்திருக்கும் என் மகள்
தூக்கத்தில் மட்டும் சிரித்து புரள்கிறாள்!
அவள் கனவில் நீ என்பதை
நான் சொல்லாமலே உணர்கிறேன்!
திரும்பி வா! -
என்று உயிர் மொத்தமும் திரட்டி
அழைக்க வேண்டும் போலிருக்கிறது உன்னை!
எதையுமே மறக்காமலும்
ஏதொன்றையும் மன்னிக்காமலும்
என் பிடிவாதம் தாளாமல் 'அங்கிருந்து'
நீ மீண்டும் வரக் கூடும் என்னிடமே!
ஆனால்
விரும்பி வா! - என்று
உன்னை அழைக்க ஏதுவாக
'உன் மகன்' -
என்ற ஒரு தகுதியன்றி
வேறேதுமில்லை என்னிடம்!
நன்றி: கூகுள் படங்கள்.







No comments:
Post a Comment