Thursday, 27 November 2014

தீபாவளி, C/O ???

ஆயிற்று! இன்னுமொரு தீபாவளி! பண்டிகைக்கான பெரிய ஆரவாரங்கள் வெளியே... இந்தக் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டாலோ மூச்!
ஒரு சப்தமில்லை... சந்தடி இல்லை; மனுஷாள் இல்லை! சத்தமும் சந்தோஷமும் தொலைத்த ஒரு வீடாக ---

இல்லை ஒரு வெற்றுக் கட்டமாக, ஒரு மண்டபமாகத் தான் இது தோன்றுகிறது! மௌனம் நான்கு தூண்களாய்த் தாங்கி நிற்கும் வீடு!


“பெரியவனுக்குத் தான், பட்டாசுன்னா உயிரு!” – படபடவென்று எங்கேயோ வெடித்துச் சிதறுகிற ஆயிரம் வாலா. அதைக் கேட்டதும்தான் தான் பெரியவர் வாய் திறந்தார்.
“ம்!” அந்த அம்மாவின் முகமும் கூட மலர்ந்து விரிந்தது. சிரிக்கும் போது அவள் முகத்தில் தெய்வாம்சமும் குழந்தைத் தனமும் ஒருசேரத் தெரிந்தது என்னை மிகவும் கவர்ந்தது.


“ஞாபகம் இருக்கா உங்களுக்கு? எங்கண்ணன் எனக்கு தீபாவளி வரிசை எடுத்திட்டு வந்திருந்தார் ஒருமுறை. நான் அவருக்கு நேரத்துக்குச் சாப்பாடு போடணுமேன்னு வேலையா இருந்திட்டேன். சின்னவன், கைப்பிள்ளை. பேசாத என்னத்தையோ வைச்சு உருட்டி விளையாட்டிட்டு இருக்கான்! பெருசு என்ன பண்ணுச்சு தெரியுமோ? ஏற்கெனவே வாங்கி வைச்சிருந்த வெடி எல்லாம் மாடில காய்ஞ்சிட்டிருந்துது... எல்லாம் நல்லா காஞ்சிருக்கான்னு பார்க்கணுமாம்... பெரிய செக்கிங் இன்ஸ்பெக்டர்ல இவரு.. பதவிசாப் படியேறி மாடிக்குப் போயி ஒரு தீக்குச்சியை பத்த வெச்சு போட்டு பார்த்திருக்கான்... படபடபடன்னு ஒரே சத்தம்... சாப்பிட்டுகிட்டு இருந்த அண்ணன், “எங்கேயோ என்னமா


வேட்டு போடறான் பாரு! தீபாவளி களை கட்டிடுச்சுப் போ!”ன்னுது! எனக்கென்னமோ சுரீல்னு இருந்துது... இதோ வந்திட்டேன்னு சொல்லிட்டு, அவசர அவசரமா மாடியேறிப் போனேன்.... இன்னும் படபடன்னு சத்தம் ஒயலை... இவன், சுவத்தோரமா ஒண்டிக்கிட்டு நிக்குறான்; என்னைப் பார்த்தும் ஒரே அழுகை வேற.. ஒன்னே ஒன்னு தான் வெடிச்சுப் பார்த்தேன்... எல்லாமே பத்திக்கிட்டுன்னு! மிஞ்சினது வெறும் சாம்பல்… பேப்பர் குப்பை! எனக்கு அப்ப கையும் ஓடலை காலும் ஓடலை... பிள்ளை பத்திரமா இருக்கானே.. போதுமே பகவானேன்னு.... அப்பப்பா!”

அவள் வெறுமனே பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை உள்ளிருந்து வந்த நெய்வாசனை சொல்லியது. பேன் காற்றில் வீடு முழுவதும் பரவிய நெய்யின் மணம்....

 

 


“என்ன, உருண்டை பிடிக்கப் போறியா?”
“ம்.. சின்னவனுக்கு அதானே பிடிக்கும்!”
எதையோ நினைத்து கொண்டவர் போல அந்தப் பெரியவர் சிரித்தார்.
“என்ன சிரிப்பு?” – என்றாள் அந்த அம்மா. கேட்டாளே தவிர, அவள் முகத்திலும் கூட சிரிப்பு தாண்டவம்!
“வேறென்ன? திங்கத்தெரியாம உருண்டையை முழுசா வாயில திணிச்சிக்கிட்டு, முழுங்கவும் தெரியாம, துப்பவும் முடியாம திணறினானே... அப்புறம் நான் வந்து தலைகீழ அவனைத் தூக்கிப் பிடிச்சு பிடரில ஒரு தட்டுதட்டுனதும்... வந்து குபீர்னு விழுந்துது பார்... அதான் உருண்டை! அவ்வளவு கெட்டி உருண்டை! விழுந்தப்புறமும் கூட உடையலையே....!” --- ஹஹஹாவென சத்தம் போட்டுச் சிரித்தார் அந்தப் பெரியவர்.
“க்கும்.... அதானே, என்னைப் பழிக்கணும் உங்களுக்கு!” --- சிறிது நேரம் சத்தமில்லை.

“கொஞ்சமா ஓலை பக்கோடாவும் தான் பண்ணேன்!”
“பண்ணத்தான் போறேன். உங்க பொண்ணுக்குப் பிடிக்குமே!”
“ஆமாம், பண்ணி வெச்சா மத்தவங்கல்லாம் பாத்திரத்தைச் சுத்தி வந்து நமஸ்காரம் பண்ணுவீங்க! என் பொண்ணு ‘மட்டும்’ தான சாப்பிடப் போறா? போடி, போடி…” --- அந்தப் பெரியவர் சட்டென்று மகளுக்காக சப்போர்ட்டுக்கு வந்தார்.
“சின்னவன் கரெக்டா தான் சொல்லிருக்கான்; அப்பாவுக்கு அக்காதாம்மா உசத்தின்னு!”
“பெரிய கண்டுபிடிப்பு, லோகத்துல இல்லாத கண்டுபிடிப்பு!” கொஞ்ச நேரம் பேச்சில்லை.

திரும்பவும் அந்த அம்மா தான் ஆரம்பித்தாள். “அப்பல்லாம்.. ஒரு ராத்திரி பூரா ஒரே பலகாரம் தான் பண்ணுவேன்! தினம் ஒண்ணு... ஒருவாரத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சாகணும்! இன்னைக்கு, எல்லாத்தையுமே  ஒரே ராத்திரில பண்றேன்... யாருக்குத் திங்க முடியுது? உடம்பும் இடங்கொடுக்கல.. நேரமும் ஒழியல.... மனுஷாளும் இல்லை..” அவள் நீண்டதொரு பெருமூச்சோடு நகர்ந்து போவது நிழலாகத் தெரிந்தது.

“ஏன் மனுஷாள் இல்லை? இந்த தடவை தான் உன் பலகாரமெல்லாம் சாப்பிட ஒருபேரன் வந்திருக்கானே!” --- அந்தப் பெரியவர் ஜன்னல் வெளிச்சத்தில் நான் படுத்திருந்த நாடாக் கட்டிலை உற்றுப் பார்த்தார். கண்களில் வெளிச்சப் பிரகாசம் மின்ன, சிரித்தார். நரைத்துக் கிடந்த புருவங்களும், குறுக்கும் நெடுக்குமான முதுமைக் கோடுகளும், அதனூடாக பிரகாசமான அந்தப் பொக்கைச் சிரிப்பும்..


“பாட்டிக்கு ஒரே கவலை! பலகாரத்தைச் சாப்பிட யாரும் இல்லையேன்னு!” 
நான் மையமாகச் சிரித்தேன். என் கவலை எனக்கு! சீக்கிரம் விடிய வேண்டும்! தீபாவளி கொண்டாடாத ஒரு மெக்கானிக்கைத் தேடித் பிடிக்க வேண்டும்! பின் காரில் என்னதான் பிரச்சினை என்று கண்டு பிடித்து சரி பண்ண வேண்டும்! கடவுளே! கெட்டதிலும் ஒரு நல்லது... மனைவியையும் பையனையும் ரெண்டு நாள் முன்னதாகவே அனுப்பிவைத்தது! என்ன, அப்பா காத்திருப்பார்; அம்மா வாசலுக்கும் கிச்சனுக்குமாக நடந்து தீர்ப்பாள்...  காதுகளைக் கதவிலேயே பதித்துவிட்டு அரை மனசாய் வேலைகளில் ஆழ்ந்திருப்பாள் உமா.

என் கவலைகளைப் படித்தவர் போல் அவர் பேசினார். “எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான்; கொஞ்சம் விடிஞ்சதும் நானே போய் அழைச்சிட்டு வரேன்!”
“ஐயோ, நீங்க ஏன் அலையணும்? நம்பர் இருந்தாக் கொடுங்க... மொபைல்ல கூப்பிடலாம்...”
“அவங்க வீட்ல போன் கிடையாது! ஒரு அவசரம்னா இங்க வந்து தான் அவனே பண்ணிட்டுப் போவான்!”
“ஓ!” – நான் ஆச்சர்யமாகப் பார்த்தேன்.


ஓரளவுக்கு சந்தடிகள் தொடங்கி விட்டன. அந்தப் பெரியவர் வெளியே கிளம்பினார். எனக்காக. நான் வீட்டிற்கு இதுவரை நாப்பத்தேழு முறை கால் செய்திருந்தேன்... எதுவும் போகவில்லை... முப்பதாயிரம் ரூபாய் செல்லைத் தூக்கி எறிந்தால் கூடத் தேவலாம் போலிருந்தது. வெறுத்துப் போய் நான் கால்களைத் தரையில் ஓங்கி அடித்தேன்! 

“ஒரு அரை மணில வந்துடறேன்னு சொன்னான்!” பெரியவர் சீக்கிரமே திரும்பி வந்ததில் எனக்குப் பெரிய திருப்தி. மெக்கானிக் இங்கே தான் பக்கத்தில் எங்கோ இருக்கிறான். நன்றி கடவுளே! 

சொன்னபடியே மெக்கானிக் வந்தான்... இன்னுமொரு மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு அவன் என் காரைப் பிரித்துச் சலித்தான்.
அதற்குள் அந்தப் பெரியவரும் அம்மாவும் என்னை வற்புறுத்தி காப்பி பலகாரமெல்லாம் சாப்பிட அழைத்தார்கள். பொதுவாக அந்நியர் வீட்டில் சாப்பிடுவதில் எனக்கு நிறைய தயக்கம் உண்டு. “இருக்கட்டுமே, கார் தான் ரெடி ஆயிடுச்சே!”

“யாரோ எவரோன்னு தம்பி யோசிக்குது போலிருக்கு!” அந்த அம்மாவின் முகத்தில் கொஞ்சம் வருத்தம். உள்ளே சென்றவள், எனக்கும் ஒரு பேரன் இருக்கான்ப்பா! இதோ பார், அவன் எப்ப வந்தாலும் கொடுக்கணும்னு எடுத்து வைச்சது. புதுசு. நீ வந்திருக்கே இன்னைக்கு;.. கிணத்தடியில வெந்நீர் தவலையை வைக்கச் சொல்றேன்... குளிச்சிட்டு, இதைப் போட்டுக்கோ; சாப்பிடு! கார் ரெடியானதும் உங்க வீட்லயும் போயி ஒரு தீபாவளி கொண்டாடிடு!” – அந்தக் கண்களில் தெரிந்த அன்பான வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியவில்லை. தலை தீபாவளியன்று கூட மாமனார் வீட்டில் இருப்புக் கொள்ளாமல் தவித்தவன் நான்... எனக்கே ஆச்சர்யமாயிருந்தது....

வாசலை அடைத்துப் பெரிய பூக்கோலம். வீடு நிறைய புகையைப் பரப்பி சாம்பிராணி போட்டார் பெரியவர். நான் ஒரு சரம் கூட வெடித்தேன்… அந்தம்மா வற்புறுத்தியதன் பேரில். வயறுபுடைத்துப் போகும் அளவுக்கு சாப்பிட்டாயிற்று. 

இந்த வயதிலும் இத்தனை நேர்த்தியாய் சமைக்கவும், வீட்டை நிர்வகிக்கவும் கூடுமா? என்று எனக்குள் பெருவியப்பு. பலகாரங்களை மறக்காமல் ஒரு பையில் போட்டு, “உன் குழந்தைக்குக் கொடு! எங்க ஆசீர்வாதத்தைச் சொல்லு!” – என்ற போது எனக்குக் கண்ணீர் திரண்டது! எதிர்ப்பார்ப்பின்றி முகம் தெரியாத ஒரு குடும்பத்தின் மேல் பாசம் வைக்க சத்தியமாய் எனக்கு இந்தப் பிறவியில் கைகூடுமா? – அவர்களை நமஸ்கரித்துக் கிளம்பினேன்.




“இதுக்குத்தான் அடிச்சுக்கிட்டேன். பகல்லயே வாடான்னு! கேட்டாத்தானே!” – அப்பா பரபரப்பாய் வரவேற்றார்.
“ஒரு போன் கூட பண்ணணும்ன்னு தோணலையா உங்களுக்கு?” “எவ்வளவு டென்ஷன்?!” –  உமா வெடித்தாள்.
“ஐ, அப்பா புதுச் சட்டை போட்டிருக்க?” – காலர் ஓரத்து மஞ்சளை இனம் கண்டு கொண்ட மகன் சத்தமாய்க் கேட்டான்..  

நான் இன்னொரு முறை குளித்து புதுத்துணி உடுத்திக் கொண்டேன். இந்தச் சட்டையை விட காலையில் நான் போட்டிருந்த அதுதான் நன்றாக இருப்பதாக் கூறி, பிடிவாதமாய் மறுபடி அதையே போடவைத்தான் என் மகன். சாப்பிடுவதாகப் பேர் பண்ணினேன். அம்மாவுக்குத் திருப்தியில்லை. 
நான் வந்த கதையை, அந்த வயதானவர்களின் வீட்டருகே என் கார் நகர மறுத்து நின்றதை, அந்த அர்த்த ஜாமத்தில் என்னை அவர்கள் கனிவாய் உள்ளே கூப்பிட்டு உபசரித்ததை, மெக்கானிக்கைத் தேடித் பிடித்து அழைத்து வந்ததை... வற்புறுத்தி தீபாவளியை அவர்களோடு கொண்டாட வைத்ததை... 

“எங்கே அந்த பையைப் பிரி”... அதிரசம், உருண்டை, ஓலை பக்கோடா, முறுக்கு... எல்லாம் தனித் தனிக் கவர்களில்...பலகாரங்களின் சுவை மிக நன்றாக இருந்தது... பழைய பக்குவம்டா... ரொம்ப நாளைக்கபுறம்... அப்பா ரசித்து சாப்பிட்டார். “பரவாயில்லை.. இந்தக் காலத்திலயும் இப்படி பெருந்தன்மையா இருக்காங்களே! அதைச் சொல்லு!” – அம்மா சந்தோஷப் பட்டாள்.

“எந்த இடம் சொன்னே?” – அப்பா கேட்டார். அப்பா ரிட்டையர் ஆகி இங்கு குடியேறிய பிறகு நான் ஒரே ஒரு முறை தான் இங்கு வந்திருக்கிறேன். எனக்குச் சரியாக சொல்லத் தெரியவில்லை. “ ப்ச், அதான்ப்பா, அங்க ஒரு பெரிய ஆலமரம், பிள்ளையார் கோவில், கோவிலுக்கு எதிர்த்தாப்பில கொஞ்சம் உள்ளடங்கி ஒரு வீடு.. வீடுன்னாலும்... அவ்வளவு பெரிய வீடு!” --- அப்பா யோசனையாக என்னைப் பார்த்தார்.  “சரி, நைட்டு பூரா சரியாத் தூங்கியிருக்க மாட்டே;   நீ ரெஸ்ட் எடு”

மணி ரெண்டைத் தாண்டியிருந்தது “நல்லா அசந்து தூங்கினே... அதான் எழுப்பல.. சாயங்காலம் “கோவிலுக்குப் போலாமா? உனக்கு கை உடைஞ்சு கட்டு போட்டப்போ வேண்டிக்கிட்டேன்.. முருகனுக்கு. அபிஷேகம் பண்றேன்; வஸ்திரம் சாத்துறேன்னு! இங்க இந்த ஊர்லயாவது நிறைவேறட்டுமே!” – அம்மா தான்!   
அர்ச்சனை எல்லாம் முடிந்து திரும்பி வந்தபோது  அப்பா முன் சீட்டில் அமர்ந்து எனக்கு வழி சொல்லியபடி வந்தார். “இப்ப எங்கப் போறோம்? இது வேற வழியாயிருக்கே?” அப்பா பதில் சொல்லவில்லை. மையமாய்த் தலையாட்டியதோடு சரி!
நீண்ட சாலையின் ஒரு வளைவில் கார் திரும்பியதும்... .எனக்குள் ஒரு இனிய ஆச்சர்யம்! நான் சில மணி நேரங்களுக்கு முன் ஒரு மெக்கானிக்குக்காக தவம் கிடந்த இடம்! நடுரோட்டில், நடுநிசியில் மிக பெரிதாய் உயிர் பயத்தையும், தெய்வ நம்பிக்கையும் நான் உணர்ந்த இடம்! 
“அப்பா, நான் சொன்னேன்ல... இந்த ரோடு தான்.... பாருங்க, இங்க ஒரு ஆலமரம்... “
மரம் இருந்தது.
“இதோ இந்தப் பிள்ளையார் கோவில்!”
மகன் அதற்குள் படக்கென்று சீட்டில் எழுந்து நின்று ‘கஜானனம் பூதகனாதி சேவிதம்’... முடித்திருந்தான்.
“இதோ இங்க தான்... உள்ளடங்கினாப்பில ஒரு வீடு!” – அங்கப் பா...ரு...ங்...க!” அப்பா, அம்மாவின் பார்வையும் உமாவின் கண்களில் தெரிந்த பயமும் என்னை என்னவோ செய்ய, நான் அவசரமாய்க் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினேன்.

“இல்லப்பா... இங்க தான்... பாருங்க... கார் சக்கரத் தடம் கூட இன்னும் அப்படியே இருக்கு!” --- இதோ பாருங்க... கார்லேர்ந்து கழண்டு விழுந்த நட்டு கூடக் கிடக்குது! இந்த வீட்டு வாசல்ல தான்..” ---- நான் மொத்தமாய் அதிர்ந்து போயிருந்தேன். என்னை அறியாமல் என் கை கால்கள் நடுக்கத் துவங்கின. நான் சுட்டிக் காட்டிய இடத்தில்,  ராஜன் மரப்பட்டறை என்று பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது! செல்லரித்த பெயர்ப்பலகையின் தூசும், கட்டடத்தின் பூட்டைச் சுற்றிப் படர்ந்திருந்த சிலந்தி வலையும், வௌவால் நாற்றமும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த பாட்டில்களும்..... கடவுளே! 

No comments:

Post a Comment