Thursday, 27 November 2014

விடை கொடு நதியே...



பெருமரமொன்றை

வேகமாய் விசிறிய
காற்று
வீழ்த்திவிட்டு போன
காலத்தின் ஒரு திவிலை...



, 

துளிரின் பசுமை
இலை நுனியின்
சிறு வளைவு...
இருந்தும் ---
விதியின் கைப்பட---
கரையோரத்தில் வீழ்ந்து
அவஸ்தையாய்ப்
புரள முயல்கிறது அச்சிறு இலை ....

முதிர்வுக்கே வராத
வாழ்க்கை;
அதற்குள் முடிவுக்கே வந்திடுமோ...
நதியும் கூட
வருந்தித் தளும்பிச் சிதறியது... இலைமீது!



"நன்றி, நதியலையே! ....
சாதிக்கவே இல்லையே
என்ற சிறு ஏக்கம்
என்னைச் சங்கடப் படுத்தியது...

உன் ஒரு தளும்பல்,
அதையும் போக்கியது!
நதியையேச் சுமந்த திருப்தி
எனக்குள் இப்போது!

விடைகொடு எனக்கு!
உரமாவேன்,
உயிராவேன்,
விருட்சமாய்,
விதையாய்,
வனமாவேன்.... ஒரு நாள்....!"

நதி  சிலிர்த்தது....
"நீ பிஞ்சிலே பழுத்ததாய்
அந்த அவசரக் காற்று
பிழைபட புரிந்து கொண்டது! போகட்டும்!

எனக்கும் கூட
சின்ன ஆசுவாசம்;
நாளைய நெடுவனத்திற்கு
இன்றே நீர் வார்க்க
உன்னால் எனக்கும் ஒரு சந்தர்ப்பம்!

வாழ்தலில் உள்ள
உன் வேட்கை
விதியையும்
வெட்கச் செய்யும் ஒரு கணம்....

மீண்டு(ம்) வருவதற்கென்றே போ!" - விடைகொடுத்தது!



நன்றி: கூகுள் படங்கள்.








No comments:

Post a Comment