Thursday, 27 November 2014

இந்தியா ஒளிர்கிறது!


தீரத் தீரப்
பெய்யட்டுமே

மழை!


சீற்றம் கூட்டி
இன்னும் கூட
கூரைகளைப் பெயர்த்துப்
பறக்க விடட்டுமே
இந்தக் காற்று!

தெருவெங்கும்
மழையும்
சாக்கடையும்
நதியென அலைபுரளட்டுமே!

ஊசியாய்
உள்ளிறங்கும் குளிர்
இமயப்பனிக்கட்டியா என்ன?



விரையும் வாகனங்களின்
சக்கரங்களால்
கிழிபடும் நீர்
முகத்தில் தெறிப்பது
நீரின் குற்றமேயன்றி வேறேதுமில்லை!

தொழிலேதும் இன்றி
வெறும் வயிறு
தடவியபடி
நீ இருப்பது ---
உலக வங்கியிடம்
பஞ்சப் பாட்டு பாடி
இன்னும் கடன் கேட்க உதவும்!



ஆடையின்றி
உடல் சுருட்டிப் படுத்திருக்கிறாய்...
பாதகமில்லை!
பாழும் இவ்வுலகில்
ஆடை துறந்தவர் மட்டுமே
ஆகிறார்கள் --
புத்தராகவும்,
மகாவீரராகவும்,
குறைந்த பட்சம்
மகாத்மாவாகவும்!

மாடு செத்துப் போச்சு,
ஆடு மிதந்து போச்சு,
பயிர் மூழ்கிப் போச்சு,
விவசாயம் படுத்துப் போச்சு,
வீடு இடிஞ்சு போச்சு,
கரெண்டு நின்னு போச்சு,
வயறு காஞ்சு போச்சு,

கவலையா உனக்கு?
இதுவும் கடந்து போகும்!

தாமதிக்காமல்
உடனே கிளம்பு!

அதோ வெளிச்சம்!
ஊரடங்கி
மழைக்கு ஒடுங்கி
நடுங்கிக் கிடந்தாலும்

கருமமே கண்ணாக
உனக்கென்ற திறந்திருக்கின்றன
அரசாங்க மதுக் கடைகள்!

நாளையோ
இன்னும் ஒரு வாரம் தள்ளியோ
தான் நாங்கள்
வரக்கூடும்!

எங்கள் போலிரோக்கள்
எங்கள் ஸ்கார்ப்பியோக்கள்,
வழுக்கி வந்து நிற்க
வெள்ளம் வடிந்திருக்க வேண்டுமே!

எங்கள் ஹெலிக்காப்ட்டர்
வானிலையால் பாதிக்கப் படாது
பறக்க வேண்டுமே!

அதிமுக்கியமாய்
எங்கள் வேஷ்டி நுனியில் கூட
உங்களின் அழுக்குச் சகதிகள்
ஒட்டாதிருக்க வேண்டுமே!

போ....
நீ கிளம்பி போ
அருகிலிருக்கும்
கருமமே கண்ணாக
உனக்கென்றே திறந்திருக்கும்
அரசாங்க மதுக் கடை ஒன்றைக் கண்டுபிடிக்க!!


நன்றி: கூகுள் படங்கள்
நன்றி: முக நூல்.


No comments:

Post a Comment