Tuesday, 25 November 2014

எதன் தோல்வி இதென்று கொள்வது?

எதன் தோல்வி இதென்று கொள்வது? 

தெரிந்தோ தெரியாமலோ 
நான் 
உன்னை 
என் மனக் கோட்டையின் 
பெரியதொரு சிம்மாசனத்தில் 
அமர்த்தி விட்டேன்..... 

கால நகர்வினில் 
உன் பேரிலான 
என் நம்பிக்கைச் செங்கல்கள் 
உதிர்ந்த வண்ணமே உள்ளன.... 





ஆசையாய் அமர்த்திய
அந்த அரியாசனமே கூட
உன்னை அருவருத்து
கீழ்த் தள்ளி,
படிகளில் உருட்டி விட்டு
வேடிக்கைப் பார்க்கிறது.....

போகட்டும்; இது
உன் வாழ்க்கை,
உன் தீர்மானம்....
அதுவல்ல என் கவலை...

இத்தனைப் பித்துகுளித்தனமான
நம்பிக்கைகளையா
நான் கோட்டையாய்க் கட்டினேன்?
இத்தனைக் கீழான உன்னையா
நான் அரியணையேற்றினேன்?!

இன்று வரை,
கற்றதும் பெற்றதும்
கொண்டதும் வென்றதும்
வெறும் விழல் என்பது தான்
விதி என் மீது சொல்லும்
நம்பிக்கையில்லாத் தீர்மானமா? 



எதன் தோல்வி இதென்று கொள்வது?
சீர்மையாய்ச் செப்பனிட யாரைத் தேடுவது?
கல்வியா, அனுபவமா, நல்லெண்ணமா, நம்பிக்கையா
முதலில் தோற்றது எது? முற்றத் தோற்றதும் எது?
முடிவுறா என் கவலைக் கேள்விகளின்
சங்கொலியிலேனும்
விழித்துக் கொள்ளட்டுமே ---
எப்போதும்
கும்பகர்ணத் தூக்கதிலிருக்கும்
சில அடிப்படை நியாயங்களும், தார்மீகங்களும்..


நன்றி: கூகுள் படங்கள் 
நன்றி: முக நூல் 

No comments:

Post a Comment