Tuesday, 25 November 2014

சொல்லாமலே.... ? ஏன்?.......



சமீபத்தில், மிக இளம் வயதில் தன் கணவனை இழந்த ஒரு பெண்ணை என் மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. கையில் ஆறு மாதக்குழந்தையோடு
.அதிர்ந்து பேசாத அந்த கணவன் இறந்த காரணம் --- அதீதமான மனச் சிதைவினால் தான் என்று இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். 

அந்தப் பெண்ணின் கணவர் யாரிடமும் மனம் விட்டுப் பேசியதேயில்லை.... நட்பு வட்டம் என்று பெரிதாய் ஏதுமில்லை. உறவுகளுடனும் சுமுகம் இல்லை.... பெற்றவர்களிடமோ, மனைவியிடமோ கூட சகஜமாய்ப் பேசியறியாத ஒருவராகவே அவருடைய வாழ்க்கை முடிந்து போய்விட்டது!

தன் வியாபாரத்தைப் பற்றி, அதில் உள்ள சிக்கல்கள் பற்றி, அது சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்கள் எது பற்றியும் யாரிடமும் அவர் ஏதொன்றும் சொல்லவில்லை. திடீரென்று ஒரு நாள் படுக்கையிலேயே மாரடைப்பால் இறந்து போயிருக்கிறார்.... பின்னர் தெரிந்திருக்கிறது --- கடனும், தொல்லைகளும்.... 

தீர்வுகள் தரும் அளவிற்கு உறவுகள் பலமும், மனமும் உள்ளவர்களாய் இருந்தும் கூட  --- அவர்களை அணுகிப் பயன்படுத்திக் கொள்ள அவர் தவறிவிட்டார்.... வாழ்க்கையையே தவற விட்டார்....

அவர் போன்ற எல்லாருக்காகவும் தான்  --- இந்தக் கவிதை. அந்தப் பெண்ணின் ஓயாத அரற்றலாகவே இக்கவிதை, உங்கள் பார்வைக்கு! 



கிரணங்களாய் விழுந்தாலும் சரி
கீறல்களாகவே விழுந்தாலும் சரி

பேசிவிட்டுப் போ!
சொல்லிவிட்டே செல்!
எனக்கான வார்த்தைகளை.....

வார்த்தைகளை நட்டு
வாழ்க்கையையே
அறுவடை செய்பவர்கள் மத்தியில்
பிடிவாதமாய் மௌனம் சாதிப்பவன்
சம்பாதிப்பதென்ன?  



பெட்டகத்தில் பூட்டிவைக்க
நிறைய நேசமும்
நீங்கிடாத நினைவுகளும்
கொட்டிக் கிடக்க
 நீ மென்று விழுங்கும் அந்த வெற்று வார்த்தைகளால்
அதை நிரப்பி என்ன பயன்?

மறந்து விடாதே....
ஆதி நாளில்
அந்த அலிபாபா குகையின்
கதவைத் திறந்ததென்னவோ 
வார்த்தைச் சரங்களால்
வார்த்தெடுக்கப் பட்ட ஒரு திறவுகோல் தானே!

பேசிவிட்டுப் போ!
சொல்லிவிட்டே செல்!
எனக்கான வார்த்தைகளை.....

அவை -
கிரணங்களாய் விழுந்தாலும் சரி!
கீறல்களாகவே விழுந்தாலும் சரி!

வானவில்லாகவோ,
வரிக்குதிரையாகவோ
வழியேதுமின்றி அலைபாய்ந்து ஓயும்
பெட்டிபாம்பாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்!
என்னோடு... என்னைச் சுற்றி... 
கவலையில்லை எனக்கு!

சொல்லப் படாத
அந்த வார்த்தைகள் --- ஆகுதீ!
அதற்கு அவிர்பாகமாய்
காலம் கேட்கத் துணிவது :
உன் உயிர்!

எதுகை, மோனை
இணைச்சொல் என்று
எத்தனையோ உண்டு ---
ஒரு வார்த்தைக்கு மாற்றாக.... ஈடாக....  இலக்கணத்தில்! 

மன்னிப்பு, மறதி என்று
மருந்துகள் உண்டு குணமாக்க.... இங்கிதத்தில்! 

என்ன உண்டு இந்த மண்ணில்?
உன் ஒற்றை உயிருக்கு ஈடாக....? இக்கணத்தில்? 



நன்றி: 
கூகுள் படங்கள்

 











No comments:

Post a Comment