Tuesday, 25 November 2014

மார்கழி மகோற்சவம்!





கையில் அரிசிமாவுக் கிண்ணம்! 

புள்ளிகளினூடே விரைந்து 
வளைந்தும் நெளிந்தும்
பிரிந்தும் சேர்ந்தும்
சின்னச் சுழிப்புகளாகவும்
இழையிழையாய்ப்
பிழையின்றி
நளின நர்த்தனமாடும் அந்த விரல்கள்
கடவுளினுடையது!

எதிர்புறத்தில்
சிறு அணிற்பிள்ளையென நான். 







பசியின் வேகத்தால்,
புள்ளிகளின் நடுவே
நுழைந்தும் தவழ்ந்தும்
புள்ளிகளை மோதியும் மிதித்தும்
கோலத்தின் போக்கிலேயே போய்
தின்று தீர்க்கிறேன் மொத்தமாய்!

அதிர ஓடிய போது
என் வாலால்
விசிறப்பட்ட மாவுத் துகள்கள்....
அவசரக் கோலமாய்
பறந்து கிடக்கின்றன
என் வாசலில்...

பசியின் சுவடடங்கிய பின்னும்
இன்னொரு கோலத்தினை
எதிர்பார்த்துப்
பரபரக்கிறேன்...
படபடக்கிறேன்....

கடவுளின் விரல்கள்
வரையத் தொடங்குகின்றன...
இன்னொரு பாணியில்
இன்னொரு வேகத்தில்
இன்னொரு பசிக்காக
இன்னொரு வீட்டில்
எதிர்ச்சாரியில்!

அங்கே பகல்!
இங்கே இரவு!

No comments:

Post a Comment