Wednesday, 26 November 2014

அமைதி மன்றாட்டு!

அமைதி மன்றாட்டு




பல் விளக்குவது போல, குளிப்பது போல,  காலைக் காப்பி போல அதுவும் ஒரு சடங்கு...
ஒரு கட்டாயம்.... அதைச் செய்வதால் வரப் போகும் பெரிய நன்மையையும் செய்யாததால் வரக்கூடிய விளைவுகளையும் குறித்த அக்கறை ஏதும் இல்லாத வயசு...

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான பிரார்த்தனை அது. ஷாலினி என்று என்னுடைய வகுப்புத் தோழியின் குரல், ஒவ்வொரு வகுப்பறைக்கும் வெளியே பொருத்தப் பட்டிருக்கும் ஸ்பீக்கரின் வழியே கசிந்து வரும்.




முன்னமே சொன்னது போல் அது ஒரு சடங்கு! பெரும்பாலும் அன்று மதியம் எழுதப் போகும் ஏதோ ஒரு குட்டித் தேர்வுக்காக, ஒரு கண்ணை மூடியும், மறு கண்ணைத் திறந்ததும் திருட்டுத்தனமாகப் பெஞ்சின் மேலுள்ள புத்தகத்தை நோட்டம் விட்டபடி இருப்போம். இல்லையேல் பக்கத்திலிருக்கும் தோழியோடு ஏதோ சீண்டல், விளையாட்டு..... இப்படியாகத் தான் போகும் அந்த நான்கைந்து நிமிஷங்களும்.




ஆனால் வருடக்கணக்காக இதையே சொன்னதாலோ என்னவோ இன்னமும் கூட அந்தப் பிரார்த்தனை வரிகள் பசுமரத்து ஆணியென மனதில்....


"இறைவா,

அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்!
பகையுள்ள இடத்தில் பாசத்தையும்,
மனவேதனையுள்ள இடத்தில் மன்னிப்பையும்,
ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும்,
அவநம்பிக்கையுள்ள மனதில் நம்பிக்கையையும்,
இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும்,
துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும்
வழங்கிட எனக்கு அருள் புரியும்!

ஓ, தெய்வீக குருவே,

ஆறுதல் பெறுவதை விட
ஆறுதல் அளிக்கவும்;
பிறர என்னைப் புரிந்து கொள்ள விரும்புவதை விட,
பிறரைப் புரிந்து கொள்ளவும்;
பிறருடைய அன்பை அடைய ஆசிப்பதை விட,
பிறருக்கு அன்பை அளிக்கவும்,
எனக்கு அருள்வீராக!

ஏனெனில்,

கொடுக்கும் பொழுது
மிகுதியாகப் பெறுகிறோம்;
மன்னிக்கும் பொழுது
மன்னிப்பை அடைகிறோம்;
மரிக்கும் பொழுது
நித்திய வாழ்விற்குப் பிறக்கிறோம்!
சுயநலமற்ற வாழ்வில்
அமைதியையே அடைகிறோம்!
ஆமென்!"

                                             -------------- மதச் சார்புள்ள ஒரு சில வார்த்தைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் இது எத்தனை எளிமையான, உயர்வான ஒரு பிரார்த்தனை என்பது புரியும்!


அதைவிட பல தலைமுறைகளுக்கும் முன் வாழ்ந்த அசிசி அண்ணல் எத்தனை பெரிய மனதுக்குச் சொந்தக்காரராக இருந்திருக்கிறார் என்பதும் நம்மை வியக்க வைக்கும். அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான இந்த வரிகளின் கனமதை அறியாமல் அன்று என்னவோ விளையாட்டாய் சொல்லி வந்தோம்.... அதுவும் கூட நல்லது தான்.... தொட்டில் பழக்கம் எப்போதும் விட்டு விலகுவதில்லை தானே....


இன்று ஒவ்வொரு விடியலிலும், படுக்கையை விட்டு எழுந்ததும் இந்த பிரார்த்தனை வரிகளின் ஆழத்தையும், உண்மையையும் வியந்து கொண்டே தினமும் மனதுக்குள் ஒரு தியானம் போல் சொல்லிவிடுகிறேன்.... எனக்காகவும், எல்லோருக்காவும்!


நன்றி: முகநூல்
நன்றி: கூகுள் படங்கள்.

No comments:

Post a Comment