Wednesday, 26 November 2014

கரையான் கேள்விகள்.





உன் மனப் பத்தாயத்தை
நீ கவனமாய்ப் பூட்டிக் கொள்;பெரிய பித்தளைப் பூட்டை
இன்னொரு தரம் கூட 
இழுத்துப் பார்த்து
திருப்திப் பட்டுக் கொள்....
மூச்சு முட்டுவது பற்றிய
கவலை கூட இல்லாமல் --
காற்றையும் கூட
அளந்தே அலைய விடு!

என்றாலும்
நான் வருவேன்.... 



செல்லரிக்கச் செய்து
உன் கட்டுப்பாடுகளைக் களைந்தெறிய;
உன் வேலிகளுக்குத் தீவைக்க;
உன் பத்தாயம் சூறையாடி
உன்னை ஓரிரவில்
உனக்கே அகதியாக்க.....

அப்போது நீ
திகைத்து மலைக்கக் கூடும்!

என் நதிமூலம் ரிஷிமூலம்
குறித்த கேள்விகள்
உன்னை விடாது விரட்டக் கூடும்! 



ஆனால் -
வெளியே தேடி
என்ன பயன்?
இடம் கொடுத்ததும்,
வளர்த்து விட்டதும்
நீ பூட்டு போட்டுப் பூட்டிய
அதே மனப் பத்தாயத்தில் தானல்லவா?

ஆழ்மனத்தை
அவ்வப்போது களையெடுக்க மறந்த
குற்றம் - கரையான்களாய்
கூறு போடுகிறது இன்று?

அது சரி,
புற்று தேடிப் படையெடுக்கும்
நாகங்களை
இனி என்ன செய்வதாய் உத்தேசம்?

No comments:

Post a Comment