Tuesday, 25 November 2014

ஸ்ரீரங்கத்து ஐ.பி.எல்!


 ஸ்ரீரங்கத்து  IPL






கொளுத்துகிற இந்த வெயிலுக்குப் போட்டியாகப் பற்றி எரிகிறது  ஐ.பி.எல்... 

"இவன் தோத்தான்!", "அவன் ஜெயித்தான்!"; "என்னா பீல்டிங்!!" "ஒரு எழவுக்குப் புண்ணியமில்லை!"  "நிச்சயமா இவனுங்க காசு வாங்கிட்டானுங்க.. பின்ன என்ன? இவ்வளவு கேவலமா  கூட விளையாட முடியுமா?" என்று பல வீடுகளிலும் நேர்முக வர்ணனைகளும் விமர்சனங்களும் களை கட்டத் துவங்கியிருக்கும் இந்நேரம்... நடக்கட்டும்! 




என் கிரிக்கெட் ஆர்வமும் ரசனையும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியானதில்லை... நான் திரட்டிச் சேகரித்திருந்த கொஞ்ச நஞ்சத்தையும் கூட -- சச்சினுக்குக்கே காணிக்கையாக்கி கல்தா கொடுத்து விட்டேன்.. 

தவிர, சூது கவ்வி சதிகளில் புரளும் இதில் போய் என்னத்துக்கு? நம்மைப் பைத்தியக்காரர்களாக்கி காசு பார்க்க அரசியல்வாதிகளே போதும். இன்னும் ஏழு ஜென்மத்துக்கு... அப்படியிருக்க, இவர்களையும் வளர்த்துவிட விட வேண்டுமா என்ன? தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ள?!
எனவே வலுக்கட்டாயமாக விவாதிக்க வரும், "மேட்ச் எப்படி, பார்த்தியா?" என்று ஆரம்பிக்கும்  அத்தனை பேரிடமும் --- "இல்லையே, ப்ச், மிஸ் பண்ணிட்டேன்.... ஆமா இன்னைக்கு டென்னிஸ் மேட்சுல டெண்டுல்கர் எத்தனை கோல் போட்டாரு?" --- என்று சகட்டு மேனிக்கு வெறுப்பேற்றி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறேன்!! 

(என் இம்சையைப் பொறுக்க முடியாத நண்பனொருவன்: "இன்னைக்கு உன் கிளினிக்குக்கு பேஷண்டே வராமல் போகட்டும்!என்று சாபம் கொடுத்து, பின், அதுவும் போதாமல், "தப்பித்தவறி பேஷன்ட் யாரும் வந்தால் கட்டாயம் பல்லை நீ மாத்தி தான்  பிடுங்குவே..." என்று துர்வாசர் ரேஞ்சுக்குப் போய்விட்டான்...) 



என்றாலும் கிரிக்கெட் என்றவுடன் -- தவிர்க்க முடியாமல் டெண்டுல்கரும், கூடவே அம்பயர் டிக்கி பேர்ட்டும், ஆட்ட இடைவேளை நேரங்களில் மைதானத்திற்குள் உருட்டி வரப்படும் அந்த அழகான குளிர்பான வண்டிகளும், மூச்சு முட்டப் பேசித் தீர்க்கும் நம்மூர் ரவி சாஸ்திரியும் நினைவுக்குள் நாலு மூலை  கட்டமாடுவதை நிறுத்தமுடியவில்லை...






அதிலும் சுஜாதா? "பேப்பரில் பேர்" எனும் அவருடைய இந்தக் கதை என் கிரிக்கெட் நினைவுகளுக்குள்  இடைவேளையின்றி நடக்கும் அந்த  நாலுமூலைக்  கட்டத்தில் நடுவே போடப்பட்டிருக்கும் சிம்மாசனம்! -- தஞ்சாவூரிலிருந்து புத்தம் புது உபகரணங்களோடு 'கிங்காங்கு'களாய் வந்திறங்கும் ஒரு அம்சமான கிரிக்கெட் டீமை, எப்படி அந்த ஸ்ரீரங்கத்து 'மட்டை டீம்' புரட்டி எடுத்து பிடறியில் கால் தெறிக்க சிதற அடிக்கிறது என்பதுதான் கதை.... அதை சுஜாதா தன் பாணியில் சொல்லும் போது --- ஒரு ஓவர் முழுக்க சிக்ஸர்  பார்த்த சந்தோஷம்.... 

ஸ்க்ரைப்ட்.காமில் வாசிக்கக் கிடைக்கிறது. இந்த லிங்கைப் பிடித்துப் போனால், pepparil perr! 



(இதுபோன்ற வேறு பல சிறுகதைகளும் இருப்பின் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்...)



நன்றி: 
கூகுள் படங்கள். 
scribd.com


No comments:

Post a Comment