சில விஷயங்கள் நம்மை அறியாமலே நம் ஆழ்மனதில் புதைந்து விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அந்த விஷயங்களை
நாம் உள்வாங்கி கொண்டிருக்கிறோம்; நம் மனதில் அவையும் இருக்கின்றன என்ற பிரக்ஞை கூட இல்லாமல் நாம் என்னவோ தினமும் காப்பி குடிப்பதும், கதை பேசுவதும், கடனே என்று அலுவலகம் சென்று வருவதுமாக இருப்போம்.
நாம் உள்வாங்கி கொண்டிருக்கிறோம்; நம் மனதில் அவையும் இருக்கின்றன என்ற பிரக்ஞை கூட இல்லாமல் நாம் என்னவோ தினமும் காப்பி குடிப்பதும், கதை பேசுவதும், கடனே என்று அலுவலகம் சென்று வருவதுமாக இருப்போம்.
நம் மனதின் ஓர் இருட்டு மூலையில் ஒதுங்கிக் கொண்ட அந்த எண்ணங்களும் கூட ஓர் அலட்சியத்தோடு உறங்கத் துவங்கி விடுகின்றன... அவைகளைச் சரியானபடி தட்டி எழுப்பும் ஒரு சம்பவம்... நல்லதும் கெட்டதுமான சிற்சில விமர்சனங்கள்... கூர் தீட்டிய வார்த்தைகளால் நம் இரத்தச் சுவையை அறிய அலையும் கீழ்மைகள்... என்ற ரீதியில் ஏதாவது ஒன்று --- தூங்கி கிடக்கும் அந்த ஆழ்மனக் கும்பகர்ணனைச் சங்கூதி எழுப்பத் தேவைப் படுகிறது. வெறும் எண்ணங்கள் தான் என்றில்லை... இந்த அன்றாட ஓட்டத்தில் நாம் தொலைத்துவிட்ட சில நல்ல ரசனைகளையும் கூட இந்த பட்டியலில் சேர்க்கலாம்.
இந்த விடுமுறை நாளில் நான் என் நினைவலைகளைத் தூசு தட்டி, தேடிக் கண்டுபிடித்து மறுபடியும் நீர்வார்த்திருக்கிறேன்... இன்னதென்று தெரியாமல் என் பிள்ளைப் பிராயத்தில், தொலைக் காட்சித் தொடர் ஒன்றிலிருந்து தெறித்து விழுந்த சொற்றொடர் ஒன்றை.. அதை யார் சொன்னது, அது யாருக்கானது, எந்த சூழ்நிலையில் அது சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயாமல், வெறுமனே நான் அந்த வார்த்தைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன் அப்போது!
காரணம், அந்த வார்த்தைகள் வெளிப்படுத்திய பலமும் நம்பிக்கையும் அபாரமானது.... அதிசயமானது.. கடினமான சூழ்நிலைகளை கடந்து வருவதற்கு கோப்மேயரும், ஜிக் ஜிக்ளரும், எம்.எஸ்.உதயமூர்த்தியும், ஷிவ் கேராவும் எப்படியெல்லாம் உத்வேகத்தையும் மன உறுதியையும் அள்ளித் தந்தார்களோ -- அதே போன்ற ஒரு அட்சயப் பாத்திரமாக தான் -- ஒரு கற்பக விருட்சமாகத் தான் நான் இந்த சொற்றொடரைப் பார்க்கிறேன்... ஆதித்ய ஹ்ருதயம் போன்றோ சஷ்டிக் கவசம் போன்றோ மிக விஸ்தாரமாக இல்லையென்றாலும், அவை இரண்டும் கொடுக்கும் நம்பிக்கையையும் தெம்பையும் எனக்குக் கொஞ்சமும் குறையாமல் 'இந்த ஒற்றை வாக்கியம்' அள்ளித் தந்தது!
நிற்க, 'அந்த வாக்கியத்துக்கான' என் பிரத்யேகத் தேடலில் என்னையும் அறியாமல் நான் இன்னொன்றையும் கண்டெடுத்திருக்கிறேன். சுஹாசினி மணிரத்னத்தின் "பெண்" என்னும் தொடர். 1991-ல் ஒளிபரப்பானது .தேர்ந்தெடுத்த சிறுகதைகள், அத்தனையும் பெண்களைப் பற்றி.... அவை கண்டிப்பாக பெண்ணியம் பேசவில்லை.... கொடி பிடிக்கவில்லை... ஆனால் பெண்தன்மையை அழகாக விவரிக்கின்றன... பெண் மனத்தின் சிக்கல்களையும் சந்தோஷங்களையும் கோடிகாட்டிவிட்டு தீர்வையும் தீர்ப்பையும் அவரவர் மனக் குளத்திற்கேற்ப விட்டுச் செல்கின்றன...
ஏழெட்டுக் கதைகளைத் தரவிறக்கம் செய்ததில் -- என்னை வசீகரித்தது -- "மிசஸ். ரங்கநாத்" என்ற பதிவு.
ஒற்றை வரிக் கதை--- அதை எப்படி ஒரு மாமாங்கத்துக்கு இழுப்பது என்ற மந்திர தந்திரமெல்லாம் --- அநேகமாய் எல்லா இல்லத்தரசிகளுக்குமே கூட இப்போது தெரியும், சீரியல் இயக்குனர்களின் தயவால்! ஆனால், "மிசஸ். ரங்கநாத்" ஒரு மாமாங்கத்துக் கதை --- ஒரு தனி மனுஷியின் போராட்டம் --- ஓர் அபலையின் கண்ணீரும் வேர்வையும் அவள் துரதிர்ஷ்டத்தைத் தீர அழிக்கிற ஒரு தீர்க்கமான வித்தை --- அதிலும் தப்பாமல் வெளிப்பட்டு மிளிரும் சுயமரியாதை, கண்ணியம், நாசூக்கு.... இவையனைத்தையும் ஒன்றுகூட்டி சுருக்கி அபாரமாகத் தந்திருக்கிறார் சுஹாசினி.. என்னை மிகவும் பாதித்த 'அந்தச் சொற்றொடரை' உதிர்த்தது - இக்கதையின் நாயகியாக வரும் ராதிகா தான்.. என்னவொரு ஆழமான அழுத்தமான நடிப்பு!
பின்னணி இசை இளையராஜா அவர்கள்... தோட்டாதரணி கலையாக்கம்... ராதிகா, சரத்பாபு, ரேவதி, சரண்யா, ரகுவரன், ஸ்ரீவித்யா, அமலா, கீதா, பூர்ணம் விசுவநாதன் போன்ற திறமைசாலிகளும் பெரிய ஜாம்பவான்களும் கூடி இழுத்த தேரின் நேர்த்தி --- வெகு அழகு!




ரொம்ப வருஷங்களுக்குப் பின் விரசம் இல்லாத, கள்ள உறவுகளும், வெறுப்பேற்றும் செயற்கையான வில்லத்தனங்களும் இல்லாத, பழி வாங்கல்கள் கொலை மிரட்டல்கள் மருந்துக்கும் எட்டிப் பார்க்காத --- எந்த யதார்த்த மீறல்களும் இல்லாத ஒரு க்ளீன் அண்ட் நீட் நாடகத்தைப் பார்த்த திருப்தி எனக்கு.
அது என்ன அப்பேர்ப்பட்ட வாக்கியம்? அப்படி என்ன உலகத்தில்லாத கதை? உங்களுக்கும் அதைக் காண வேண்டுமென்ற ஆவல் இருந்தால், இதோ லிங்க்:
https://www.youtube.com/watch?v=e8RlWsOJwR4
நம் ஆழ்மனத்தைத் திறக்க வைக்க இன்னொரு சாவி; ஓர் எளிய ஆட்டோ சஜஷன்... என்றோ அல்லது இது வெறும் பொழுது போக்குச் சித்திரம் என்றோ நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும் அணுகுங்கள்... எதுவாயினும் தவறாமல் உங்கள் எண்ணங்களைப் பதிவிடுங்கள்.
நன்றி:
கூகுள் படங்கள்
யூ ட்யூப்
நம் ஆழ்மனத்தைத் திறக்க வைக்க இன்னொரு சாவி; ஓர் எளிய ஆட்டோ சஜஷன்... என்றோ அல்லது இது வெறும் பொழுது போக்குச் சித்திரம் என்றோ நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும் அணுகுங்கள்... எதுவாயினும் தவறாமல் உங்கள் எண்ணங்களைப் பதிவிடுங்கள்.
நன்றி:
கூகுள் படங்கள்
யூ ட்யூப்







No comments:
Post a Comment