Wednesday, 23 September 2015

கட்டி இழுக்கும் காட்டுக் குதிரை....
--------------------------------------------------------


ஒரு காட்டுக் குதிரையின்
முரட்டு வேகத்தில் இழுத்துச்செல்கிறது காலம்....
சொல்லிச் செல்வதற்கென்று சம்பாதித்த
வார்த்தைகள் ---
அந்தரத்தில் அலைபாய்கின்றன --
விடைபெறுதலுக்கான வழியறியாமல்...
முகம் தெரியா பலருக்காகவென்று
சேமித்து வைத்த இரக்கத்தை
இலக்கு நோக்கிச் செலுத்தும் முன்னமே
நாண்அறுபட்டு ---
அத்தனையும் குறி பிசாகாமல்
என் மேலேயே பாய்வதுதான் ஆகப் பெரிய முரண்....
காலைச் சூரியனைச் ஸ்பரிசிக்காத,
மாலை நிலவுக்கு மயங்காத
என் இடைவிடா கடிகாரத் துரத்தல்கள்
எனை அற்பமாய்ப் பார்த்துச் சிரிக்கின்றன...
பிரியங்களின் பெட்டகமாய்ப் புறப்பட்டு வரும்
பிள்ளைகள் முகம் நோக்கிப் பேசவும் மறுத்தது
எத்தனைப் பெரிய துரோகமென்று
உணர்கிற தருணத்தில் ---
மருத்துவமனைக்கே உரிய பிரத்யேக நெடியுடன்
மர்மமாய் சிரித்தபடி தேடித் துழாவுகின்றன --
விதியின் கரங்கள்...
வழிந்தோடும் வாஞ்சைகளையும்
பொங்கிப் பெருகும் நேசங்களையும்
தீராத் தீராக் காதலையும்
அங்கீகரிக்கவும், அரவணைக்கவும், ஆர்வமாய் எதிர்நோக்கவும்
மனதளவிலான என் பிரதிக்ஞைகளை
ஊதித் தள்ளி --- காலம்,
எக்காளமிடும் இக்காலத்தில் தான்
உரத்துச் சொல்லத் தோன்றுகிறது ----
"இந்த நொடியே நிஜமென்று!"

நன்றி: முக நூல்
நன்றி: கூகுள் படங்கள். 

No comments:

Post a Comment