இருந்து விட்டுப் போகிறோம் --- இதில் சுயநலமாகவே!
-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
(மாண்புமிகு டாக்டர் கலாம் அவர்களின் நல்லடக்கம் தமிழகத்திலேயே நடைபெற வேண்டுமென்று விரும்பி ஜுலை 28 அன்று முக நூலில் பதிவேற்றியது.)
தென்கோடித் தமிழகத்தில் பிறப்பு; வடமேற்கின் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் அணு விஞ்ஞான விடியலுக்கான பகீரத தவம்; பின் வடக்கில் மகிழ்வோடு சுவீகரித்துக் கொண்ட ஜனாதிபதி மாளிகையிலும் ஒரு கனிந்த துறவி வாழ்க்கை; காற்றோடு கலந்து விட்ட அந்த இறுதி மூச்சை நிறைத்துக் கொண்டதோ வடகிழக்கின் மலைத் தொடர்களும் காடுகளும்... கொடுத்து வைத்த அந்தப் பல்கலைக்கழகமும்!
திசைகளற்றவர் நீர்! எல்லைகள் கடந்தவர் நீர்! மதங்கள் பெரிதில்லை உமக்கு! -- என்று வெறும் வார்த்தைகளால் அல்லாமல் வாழ்க்கையால் சாதித்துக் காட்டியவர் இந்த நூற்றாண்டில் நீர் ஒருவரே!
உம்மைப் போல அத்தனைப் பெருந்தன்மை எங்களுக்கு வாய்த்திடவில்லை.... அலையலையாகப் புரளும் தலைமுடியும், விரிந்த கைகளும், கனிந்த புன்னகையுமான உம் படம் இன்னும் பத்து வருஷங்களுக்காவது எல்லா அரசுக கட்டடங்களிலும் இடம் பெறும்... பள்ளிகளில் மாட்டப் படும்.... மறக்காமல் மலரஞ்சலியோடு வணங்கப் பெறும்....
அது போதாது எமக்கு! இம்மண்ணின் மைந்தரே! ஒன்றுமில்லா ஏழைக் குடிசையிலிருந்து கிளம்பிப் போய் குடியரசுத் தலைவர் ஆனவரே! எங்களின் நம்பிக்கை வெளிச்சமாக நீர் இருந்தீர்! திக்கற்றுத் தடுமாறி நிற்கும் இந்த இளந்தமிழர்களுக்கு நீரே துருவ நட்சத்திரம்! இதே மண்ணில் நீங்கள் உரமாகி, விதையாகி, விருட்சமாக வேண்டும்..... தலைமுறைகள் தோறும்.....
மிகச் சுயநலமோடு கேட்கிறோம்.... இங்கேயே வந்து விடுங்கள்.... எம் மண்ணோடும் எம்மோடும் கலந்திடுங்கள்... காத்திருக்கிறோம்.....


No comments:
Post a Comment