ஒரு நாளின்
சிறு நொடியில் கூட
நான் விட்டெறிந்த
நேசக் கற்கள் --
தாவிவரும் ப்ரிய அதிர்வுகளால்
உனைத் தீண்டாது
திசை தப்பி
ஆழ மூழ்கி
அமிழ்ந்தே போகும்
என் சோகத்தின் வலியதனை
உனை விரட்டிடும் கடிகார முட்கள்
ஒரு போதும் சட்டை செய்வதில்லை.....
பரபரக்கும் நாட்காட்டியின்
பெருங்கவலை எல்லாம் --
தன் பாரம் இறக்கி வைப்பது ஒன்றே தான்....
பின் எப்போதாவது
செல்லமாய்த் தலையில் அடித்துக் கொண்டும்,
வலிக்காமல் குட்டிக் கொண்டும்,
புருவம் தூக்கி விழிகள் விரித்தும்
கீழுதடு கடித்து தலை கவிழ்த்தும்
உன் மறதிகள்
என்னிடம் மண்டியிடுகின்றன....
"பரவாயில்லை போ!" --
ஒற்றை வார்த்தையில்
ஒரு சேரத் தள்ளி விடுகிறேன் ---
உன் குற்ற உணர்வையும்
என் கழிவிரக்கத்தையும்!
No comments:
Post a Comment