பண்டிகைகள் என்பவையே பொதுவாக சந்தோஷத்துக்கான முகவரிகள் தான் என்னைப் பொறுத்த வரை. அதிலும் அப்பா பொங்கலுக்காக வரிசை வைக்க வருகிறேன் என்று அலைபேசியில் கூறி முடித்த அடுத்த நொடியிலேயே ஒரு பெரிய பார்சலுடன் வாசலில் வந்து நின்ற அந்தக் கூரியர் பையன் சர்வ நிச்சயமாக ஒரு தேவதூதனே!
அழகான வடிவமைப்புடன் கூடிய மிக நேர்த்தியான ஐந்து புத்தகங்கள்.. Pattukkottai Prabakar Pkp sir அவர்களிடமிருந்து. நான் அண்ணாந்து பார்த்து அவர் உயரத்தை நேசிக்கும் ஒரு எறும்பு… எனைத் தேடி அவரே மனமுவந்து அனுப்பி வைத்திருக்கும் – இனிப்புப் பரிசுகளாக அவர் கையெழுத்திட்ட புத்தகங்கள். அப்பாவிடம் இவைகளைக் காட்டிய போது அவர் கண்கள் ஆச்சர்யத்திலும் பெருமையிலும் விரிந்த விதம், இதுவரை நான் பார்த்திராதது!
தபால், கடிதம், தந்தி இவையெல்லாம் வழக்கொழிந்த ஒரு காலகட்டத்தில், அல்லது அவை வாட்ஸப்பும், மின்னஞ்சலுமாக முகம் மாற்றிக் கொண்ட ஒரு வேகயுகத்தில் நாம் இருக்கிறோம்; பொங்கல் வாழ்த்தெல்லாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய காலம் மாறிப் போய் இன்று அரை நிமிட GIFகளால் ஆயிரம் பேருக்கு வாழ்த்துக் கூறுவது நேரத்தின் லாபம்; உறவின் நஷ்டம்! அதனால் தானோ என்னவோ, “அன்புள்ள… இப்படிக்கு,” எனும் கடிதங்களின் தொகுப்பையே நான் முதலில் கையிலெடுத்தேன்.
இந்த உலகம் எத்தனையோ புகழ்பெற்ற கடிதங்களைக் கண்டுள்ளது.. தலைக்கு மேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது… எனக்குத் தெரிந்த வரை அவையெல்லாம் பரஸ்பரம் மனிதர்கள் கருத்துப் பறிமாறிக்கொண்டவை… ஆனால், கடித உக்தியைப் பயன்படுத்தி, எளிமையாகவும் அழகாகவும், நாம் அன்றாடம் கவனித்து பின் அதே வேகத்தில் மறந்தும் போகிற பல மனிதர்களை, பல பொருட்களை, பல அமைப்புகளைப் பேசவும் உறவாடவும் வைத்திருப்பது Pattukkottai Prabakar Pkp sir அவர்களின் பெரும் வெற்றி…
“அழிப்பதில் என்ன பெருமை இருக்கிறது? ஆக்கப்பூர்வமான தீவிரவாதம் ஒன்று உண்டு! அறிவாயா?” என்று ஒரு வெடிகுண்டு தடாலடியாகத் தீவிரவாதியைக் கேட்கிறது!
தன்னிலை குறித்து வருந்தும் தொலைக்காட்சியோ, இல்லத்தரசியைப் பார்த்து இப்படிக் கேட்கிறது, “எழுதுவதற்காக பென்சில் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு காது குடைகிறாயே? சரியா? நீ விழித்திருக்கும் போதும் என்னை உறங்க அனுமதி! குடும்ப உறவுகள் பலப்படும்; விருந்தோம்பல் செழிக்கும், நட்புணர்வு வெளிப்படும்!” என்று மன்றாடுகிறது அவளிடம்!
“உன் வீட்டில் உடைந்து போன கண்ணாடித் துண்டுகள் உன் குப்பைத் தொட்டிக்குள் இருக்கும்போது ஆபத்தில்லை; வீதியில் விசிறினால்?” என்று அப்பாவிகளின் கால்களைப் பற்றிய அடிப்படை அக்கறை குறித்து நியாயம் கேட்கிறது படைப்பாளியிடம் ஒரு பேனா!
தெளிவற்ற நோக்கங்களோடு அலையும் இளையதலைமுறைக்கென்று இதமாக எடுத்துக் காட்டுகின்றன, கிரிக்கெட் மட்டை, சினிமா, ரசிகர் மன்றம், லிப்ஸ்டிக், புத்தாண்டு ஆகியவை எழுதும் கடிதங்கள்…
“என்ன கொடுத்து எதை வாங்குகிறோம்” என்பது குறித்த கேள்விகளை வலுவாக எழுப்புகின்றன, “திரைகடலோடியும் திரவியம் தேடுபவர்களுக்கு”, விளம்பரத் தயாரிப்பாளார்களுக்கு, நேரத்தை வீணாக்குபவர்களுக்கு, நகரவசிகளுக்கு, பாசத்தைத் தொலைத்தவர்களுக்கு, அன்பில்லாத மருத்துவர்களுக்கு போன்ற கடிதங்கள்…
இன்றைக்கு நாம் அறம் சார்ந்த விஷயங்களில் எவ்வளவு தோற்று நிற்கிறோம் என்று வருத்தம் வெளிப்படுத்துகின்றன, நீதிதேவதை, புகார்ப்பெட்டி, தண்ணீர், வாக்குச்சீட்டு இவை எழுதும் கடிதங்கள்… 'பெற்றோர் இருவரின் பாசக்குரலுக்காகவும் ஏங்கும் குழந்தைகளின் நியாயமான வேண்டுதலுக்கு எந்தச் சட்ட்த்திலும் தீர்வில்லாத பலவீனத்தைச் சுட்டிக் காட்டி – வாழ்க்கைத் துணையைக் காதலியுங்கள்; காதல் எந்த்த் தவறையும் மன்னிக்கும்!' என்று இறைஞ்சுகிறது விவாகரத்துக் கோரி நிற்கும் தம்பதிகளைப் பார்த்து, நீதிதேவதை!
தமிழுக்காகவும், தொழிலதிபர்களுக்காகவும், தியாகிகளுக்காகவும் எழுதப்பட்டுள்ள கடிதங்களில் விரியும் அக்கறையும் கவலையும் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன; என்றாலும் மிக உச்சமாக உலுக்கிப் போடுவது, “விலைமாதர்களுக்குக் கட்டில் எழுதிக் கொண்டது!” எனும் கடிதம்!
“பணத்திற்காக உழைப்பைக் கொட்டலாம்; தன்மானத்தை அடகு வைப்பது அற்பமான செயல்!” “எச்சரிக்கை வாசகங்களோடு எப்படி சிகரெட்டையும் மதுவையும் இந்த அரசாங்கம் அங்கீகரிக்கிறதோ, அப்படித்தான் உங்களையும்.. இன்றைக்கும் சட்டத்தின் பார்வையில் உங்கள் மேல் பரிவு கிடையாது என்பதை மறந்துவிடக் கூடாது! என்று அக்கறையோடு ஓலமிடும் கட்டில், “இதைக் குலத் தொழிலாக வாரிசுகளின் தோள்களில் சுமத்தாதீர்கள்!” என்று கூறுவதோடு எதிர்காலத்தில் என் எண்ணிக்கை ஜீரோவைத் தொட வேண்டும்; அந்த நாளே என் விடுதலை நாள்!” என்று தூரக் கனவுகளோடு பெருமூச்சு விடுகிறது! மனம் கனக்கத் தொடங்குகிறது!
என்ன அருமையான நடை, எழுத்து! எத்தனை வலிமையான வார்த்தைகள்? பேனா எனும் நெம்புகோல் குறித்த நிறைய ஆச்சர்யங்களை எனக்குள் ஏற்படுத்திய படியே இருக்கின்றன இந்தக் கடிதங்கள்…
Thank you, PKP Sir…. ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைப் பரிசளித்ததற்கு!
Thank you, PKP Sir…. ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைப் பரிசளித்ததற்கு!


No comments:
Post a Comment