Monday, 1 December 2014

எப்போதும் போல், பின்புத்தியோடு...

கவிழ்ந்து பெய்யும்
பெருமழை நடுவே

இடிவாங்கிய ஒற்றைப்பனை -
பற்றியெறிகிறது தூரத்தில்
பயத்தில் நடுங்குமென் விரல்களைக் கோர்த்து
மெல்லத் தலைகோதுகிறாய் நீ... 




உன் பாதாதி கேசம் முழுக்க
சிற்றெறும்புகளின் ஊர்வலம்,
பிரக்ஞையின்றி—
கொய்யாமரக் கிளைகளில்
சிவந்த பழங்களை
எனக்காக எக்கித் தேடுகிறாய் நீ...

வார்த்தைகளால் காயப்படுத்தியும்
மௌனத்தினால் தாக்கியும்
விதவிதமாக வெளிப்படும் என் கோபங்களை,
கண்ணீரால் நனைத்த புன்னைகை கொண்டு
ஒற்றியெடுக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரிகிறது.வெயிலில் காய்கிறேன்,
அன்றைய உன் நிழலின் அருமை உணராத
பின் புத்தியோடு!
உன் முகம் பார்த்து ஆறுதல் தேட அலைகிறேன்....
பிறகே உணர்கிறேன்,
கொப்புளங்கள் பூத்திருக்கும்
என் பாதங்களைக்
குனிந்து உன் கைகளால் நீ தாங்குகிறாயென்று!!!
 

நன்றி: கூகுள் படங்கள் 
நன்றி: முக நூல் .

No comments:

Post a Comment